Monday, September 12, 2016

252. தலைவி கூற்று

252. தலைவி கூற்று

பாடியவர்: கிடங்கிற் குலபதி நக்கண்ணனார். கிடங்கில் என்பது ஓர் ஊர். இவர் இவ்வூரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். இவரது இயற்பெயர் கண்ணன். மற்றும் ஆர்விகுதி பெற்று இவர் நக்கண்ணனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுவோர் குலபதியாவர் என்றும் இப்பட்டத்தை உடையவராதல் பற்றி இவர் சிறந்த ஆசிரியர் என்றும் உ.வே. சாமிநாத ஐயர்  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் வரவு அறிந்த தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து ‘‘நன்காற்றினாய்" என்றாட்குக் கிழத்தி உரைத்தது.   (வலிந்து மாறுபட்டு)
கூற்று விளக்கம்: தலைவியைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவன், பலநாட்களுக்குப் பிறகு தன் இல்லத்திற்குத் திரும்பிவந்தான்.  தலைவன் வருவதற்குமுன், தலைவனின் பிரிவால், தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருந்தாள். அவள் அவன்மீது மிகுந்த கோபமாக இருந்தாள். அவன் வந்தவுடன், அவனோடு ஊட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். ஆனால், அவனைக் கண்டவுடன், இன்முகத்தோடு அவனை வரவேற்றாள்; உபசரித்தாள். தலைவியின் செயல் அவளுடைய தோழிக்கு மிகுந்த வியப்பாக இருந்த்து. ”நீ ஏன் சிறிதும் வருத்தமின்றித் தலைவனை ஏற்றுக்கொண்டாய்?” என்ற தோழிக்கு, ”அவரை யாராவது புகழ்ந்தால்கூட அவர் நாணுவார். அவரை இகழ்ந்தால் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று கருதி நான் அவரை ஏற்றுக்கொண்டேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை யின்முகந் திரியாது
கடவுட் கற்பி னவனெதிர் பேணி
மடவை மன்ற நீயெனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த கொடியனாகிய குன்றுகெழு நாடன்வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுட் கற்பின்  அவன் எதிர் பேணிநீ மன்ற மடவை எனக் கடவுபு துனியல்!  சான்றோர் புகழும் முன்னர் நாணுப;
காணுங்கால் பழி யாங்கு  ஒல்பவோ. 

அருஞ்சொற்பொருள்: ஞெகிழ்த்த = நெகிழச் செய்த; கடவுட் கற்பு = கடவுட் தன்மை வாய்ந்த கற்பு; பேணி = உபசரித்து; மடவை = அறிவில்லாதவள்; கடவுபு = கேள்வி கேட்டு; துனியல் = வருந்தாதே; காணுங்கால் = ஆராயுந்து பார்த்தால்; ஒல்பவோ = தாங்குவாரோ.
உரை: தோழி!  ”நீண்டு திரண்ட தோள்களில் உள்ள வளையல்களை நெகிழச் செய்த, கொடியவனாகிய, குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன், பல நாட்களுக்குப் பிறகு திரும்பிவந்தபொழுது, இனிய முகத்தோடு, தெய்வத் தன்மையை உடைய உன்னுடைய கற்பினால், அவனை எதிர்சென்று உபசரித்த நீ நிச்சயமாக அறிவில்லாதவள்என்று என்னைக் கேட்டு, நீ வருத்தமடையாதே. எவராவது தம்மைப் புகழ்ந்தால் அறிவுடைய சான்றோர் தம்மைப் புகழ்ந்தவர் முன்னிலையில் நாணுவர். ஆராய்ந்து பார்த்தால், அத்தகைய சான்றோராகிய என் கணவர், பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்வாரா?

சிறப்புக் குறிப்பு: தலைவனோடு கோபமாக இருந்த தலைவி, அவனைக் கண்டவுடன் அவனை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தது,

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து.                                 (குறள் – 1285)

(பொருள்: கண்ணுக்கு மை எழுதும்பொழுது, எழுதுங்கோல் கண்ணின் இமையருகே இருப்பதால், அக்கோல் காண்ணுக்குத் தெரியாது. அது போலக் கணவனைக் காணாதபொழுது அவனது குறைகளையே எண்ணும் நான், அவன் அருகில் வந்தவுடன், அக்குறைகளைக் காணவில்லை.)

என்ற குறளின் கருத்துக்கும், மற்றும்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
 கலத்தல் உறுவது கண்டு.                                       (குறள் – 1259)

(பொருள்: பிரிந்த காதலர் திரும்பிவந்தபொழுது, அவருடன் ஊட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்ற நான், அவரைக் கண்டதும் என் நெஞ்சம் அவரிடம் சென்று சேர்வதைக் கண்டு, அவரைத் தழுவிக்கொண்டேன். )

என்ற குறளின் கருத்துக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது  குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment