Monday, September 12, 2016

250. தலைவன் கூற்று

250. தலைவன் கூற்று

பாடியவர்: நாமலார் மகனார் இளங்கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: தலைமகன் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தலைவியைக் காண்பதற்கு மிகுந்த ஆவலோடு திரும்பி வருகிறான். "மாலை நேரம் வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்குத் தேரை விரைவாக செலுத்துவாயாகஎன்று தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

பரலவல் படுநீர் மாந்தித் துணையோ
டிரலை நன்மா னெறிமுத லுகளும்
மாலை வாரா வளவைக் காலியற்
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்
பொருகயன் முரணிய உண்கண்
தெரிதீங் கிளவி தெருமர லுயவே. 

கொண்டு கூட்டு: பாக! பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு இரலை நன்மான் நெறிமுதல் உகளும் மாலை வாரா அளவை, நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண்  தெரிதீம் கிளவி தெருமரல் உய கால்இயல் கடுமாக் கடவுமதி!

அருஞ்சொற்பொருள்: பரல் = பரற்கற்கள் (சிறு கற்கள்) ; அவல் = பள்ளம்; மாந்தி = அருந்தி; இரலை = ஆண்மான்; உகளும் = ஓடித் திரிதல்; கால் = காற்று; கடு மா = விரைந்து செல்லும் குதிரை; கடவுமதி = செலுத்துக; பொருகயல் = போரிடும் கயல் மீன்கள்; உண்கண் = மை தீட்டிய கண்கள்; தெரி தீம் கிளவி = தேர்த்தெடுத்த இனிய சொற்களைப் பேசும் தலைவி; தெருமரல் = மனச்சுழற்சி; உய = தப்பிக்க ( நீங்க).


உரை: தேர்ப்பாகனே!  பருக்கைக் கற்களை உடைய பள்ளத்திலே தேங்கியுள்ள நீரை  உண்டு,  ஆண்மான்  தன் துணையாகிய பெண்மானோடு துள்ளி விளையாடுகின்ற மாலைக் காலம் வருவதற்கு முன்பே, ஆழ்ந்த நீரில் உள்ள, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போர் புரியும் இரண்டு கயல்மீன்களைப் போன்ற, மைதீட்டிய கண்களையும், தேர்ந்தெடுத்த இனிய சொற்களையும் உடைய தலைவி,  துன்பத்தால் சுழல்வதிலிருந்து நீங்க, காற்றைபோல் செல்லும் இயல்புடைய  குதிரையை விரைவாகச் செலுத்துவாயாக.

No comments:

Post a Comment