Sunday, August 14, 2016

231. தலைவி கூற்று

231. தலைவி கூற்று 

பாடியவர்:
பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் வாழ்ந்தான். பின்னர் தன் நடத்தை தவறானது என்பதை உணர்ந்தான். இப்பொழுது, தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். தோழி, “உன் கணவர் உன்னோடு வாழ விரும்புகிறார். அவர் தன் தவறை உணர்ந்துவிட்டார். அவரை மன்னித்து ஏற்றுக்கொள்என்று தலைவியிடம் வேண்டுகிறாள். தலைவி, தலைவன்மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தித் தோழியின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள்.

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.

கொண்டு கூட்டு: ஓரூர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; நாணட்டு நல்லறிவு இழந்த காமம் வில்லுமிழ் கணையிற் சென்று சேண் பட, ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப.

அருஞ்சொற்பொருள்: சேரி = தெரு (சேர்ந்து வாழும் இடம் சேரி); ஆர = மிக (நன்றாக); முயங்குதல் = தழுவுதல். ஏதிலாளர் = அயலார்; சுடலை = சுடுகாடு; மன், அசைச்சொற்கள்; அட்டு = அழித்து; கணை = அம்பு;சேண் = தொலை.

உரை: தலைவர் நம்மோடு ஓரே ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார். நாம் இருக்கும்  தெருவிற்கு வந்தாலும் அவர் என்னை நன்றாகத் தழுவ மாட்டார். நாணத்தை அழித்து, நன்மை தீமைகளை உணரும் அறிவை இழந்த என்னுடைய காமம், வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, நெடுந்தூரத்தில் விழுந்து அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுவது போல் நம்மைக் கண்டும் காணாதவர் போல் விலகிச் செல்கிறார்.


சிறப்புக் குறிப்பு: காதல் விரைவில் அழிவதற்கு, வில்லிலிருந்து எறியப்பட்ட அம்பு உவமை.

No comments:

Post a Comment