Sunday, August 14, 2016

234. தலைவி கூற்று

234. தலைவி கூற்று

பாடியவர்: மிளைப்பெருங் கந்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 146 – இல் காணலாம்.
திணை:
முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கூற்று விளக்கம்: கார் காலம் வந்தது. மாலை நேரத்தில் முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. இதைக் கண்ட தலைவிக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. “அறிவு மயங்கியோர், முல்லைப் பூக்கள் மலரும் நேரத்தை மட்டும் மாலை நேரம் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப்போல் தம் துணைவரைப் பிரிந்திருப்பவர்களுக்கு எந்நேரமும் மாலை நேரம்தான்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.


சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே. 

கொண்டு கூட்டு: மயங்கியோர், சுடர்செல் வானம் சேப்ப,  படர்கூர்ந்து எல் அறு
பொழுதில் முல்லை மலரும் மாலை என்மனார்; துணையிலோர்க்கு நெடுநகர்
குடுமிக் கோழி இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலைபகலும் மாலை.

அருஞ்சொற்பொருள்: சுடர் = கதிரவன்; சேப்ப = சிவக்க; படர் = துன்பம்; எல் = ஓளி; நெடுநகர் = பெரிய நகரம் ; குடுமி = கோழியின் கொண்டை; இயம்பும் = கூவும்; விடியல் = விடியற் காலம்.


உரை: (தோழி!),அறிவு மயங்கியோர், கதிரவன் மறைந்து சென்ற வானம் சிவப்பு நிறத்தை அடைந்து, துன்பம் மிகுகின்ற, ஒளி மங்கிய பொழுதில், முல்லைப்பூ மலர்கின்ற, நேரத்தை மாலைக் காலம், என்று கூறுவர்;  துணைவரைப் பிரிந்தவர்களுக்கு, பெரிய நகரத்தில், உச்சிக் கொண்டையையுடைய கோழி கூவுகின்ற,  பெரிய இருள் விலகுகின்ற விடியற் காலமும், மாலைக் காலமாகும்; பகற் காலமும் மாலைக் காலமாகும்.

No comments:

Post a Comment