242.
செவிலித்தாய் கூற்று
பாடியவர்: குழற்றத்தனார். இவர் இயற்றியதாக
இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
திணை: முல்லை.
கூற்று: கற்புக்
காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.
கூற்று
விளக்கம்:
திருமணத்திற்குப்
பிறகு,
தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நட்த்துகிறார்கள். ”அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? தலைவி மகிழ்ச்சியாக
இருக்கிறாளா?” என்று தெரிந்துகொள்ளத் தலைவியின் தாய் ஆவலாக இருக்கிறாள்.
தலைவியின் செவிலித்தாய், தான் தலைவியின் இல்லத்திற்குச்
சென்று தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாக கூறித் தலைவியின் இல்லத்திற்குச்
சென்றாள். தலைவியின் இல்லத்திற்குச் சென்ற பிறகு, தலைவனும் தலைவியும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்துவதையும், தலைவன் அதிகமாக வெளியூருக்குப் போகாமல் தலைவியோடு இருப்பதையும், வேந்தன் ஏவிய பணிக்காக வெளியூருக்குச் சென்றாலும், தலைவன்
அங்கே தங்காமல் உடனே திரும்பி வந்துவிடுவதையும் செவிலித்தாய் காண்கிறாள். தலைவனும் தலைவியும் இனிமையாகக் குடும்பம்
நடத்துகிறார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைத்
தலைவியின் தாய்க்குச் செவிலித்தாய் கூறுகிறாள்.
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.
கொண்டு
கூட்டு:
மடந்தை
கானம் கோழி கவர்குரல் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர்
உறைப்பப் புதல்நீர் வாரும்,
பூநாறு புறவிற் சிறு ஊரோள். செம்மல்
தேர், வேந்துவிடு தொழிலொடு வேறூர் செலினும், சேந்துவரல் அறியாது.
அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; கவர் குரல் = பலகுரல்கள்
ஒன்றுசேர்ந்தது போல் உள்ள குரல்; பொறி = புள்ளி; எருத்து = கழுத்து;
சிதர் = துளிகள்; உறைதல்
= தங்குதல்; புதல் = புதர்;
வாரும் = ஒழுகும்; புறவு
= முல்லை நிலம்; சீறூரோள் = சிறு + ஊரோள் = சிறிய ஊரில் உள்ளவள்;
மடந்தை = தலைவி; வேந்துவிடு
தொழில் = அரசனால் ஏவப்பட்ட தொழில்; சேந்து
வரல் = தங்கி வருதல்; செம்மல் =
தலைவன்.
உரை: தலைவி, காட்டுக் கோழியின் பலகுரல்கள் ஒன்று
சேர்ந்ததைப்போல் உள்ள குரலையுடைய சேவலின், ஒளியுள்ள புள்ளிகளை உடைய கழுத்தில், குளிர்ந்த நீர்த்துளிகள் படும்படி, புதரிலிருந்து நீர்
ஒழுகும், மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில் அமைந்த,
சிறிய ஊரில் உள்ளாள். வேந்தனால் ஏவப்பட்ட
தொழிலை மேற்கொள்வதற்காகத் தலைவனது தேர்
வெளியூருக்குச் சென்றாலும், சென்ற ஊரில்
அதிக நாட்கள் தங்கியிருக்காமல், உடனே வந்து விடுகிறது.
சிறப்புக் குறிப்பு:. ”புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூரோள்”
என்றது தலைவி, நிலவளமும் நீர்வளமும் நிறைந்த முல்லை
நிலத்தில் உள்ள சிறிய ஊரில் வாழ்கிறாள் என்பதைக் குறிக்கிறது. ”வேறூர் வேந்துவிடு
தொழிலொடு செலினும்” என்பதிலிருந்து, தலைவன் செல்வாக்குள்ளவன் என்றும் அரசனோடு தொடர்புடையவன் என்றும் தெரிகிறது.
“செலினும்” என்றது, தலைவன்
அடிக்கடித் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதில்லை என்பதை வலியுறுத்துகிறது.
”சேந்துவரல் அறியாது” என்றது, தலைவிமீது மிகுந்த அன்புடையனாகையால் அவளைவிட்டுப் பிரிய விரும்பாமல்,
வெளியூருக்குச் சென்றாலும், விரைவில் பணியை முடித்துத்
திரும்பி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. தேரில் செல்கிறான்
என்றது அவன் செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் என்பதை வலியுறுத்துகிறது. ஆகவே, தலைவி
செல்வமும், செல்வாக்கும், மிகுந்த அன்பும்
உடைய தலைவனோடு நீர்வளமும் நிலவளமும் நிறைந்த முல்லை நிலத்தில் வாழ்கிறாள் என்பதைச்
செவிலித்தாய் தலைவியின் தாயிடம் உரைக்கிறாள்.
No comments:
Post a Comment