245.
தலைவி கூற்று
பாடியவர்: மாலைமாறனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே
சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை
ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
திருமணத்திற்காகப்
பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைத் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துவாளே என்று எண்ணித்
தோழி கவலைப்படுகிறாள். தோழி கவலைப்படுவதை அறிந்த தலைவி,
“தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான் என்பதைப் பலரும் அறிந்தால்,
நான் என் அழகை இழந்ததை நினைத்து வருந்துவதைவிட அதிகமாக வருந்துவேன். ஆகவே, நான்
தலைவனின் பிரிவை எப்படியாவது பொறுத்துக் கொள்வேன்” என்று கூறுகிறாள்.
கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே.
கொண்டு
கூட்டு:
வாள்போல்
வாய கொழுமடல் தாழை, மாலைவேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம் புலம்பன்
கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படின், கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்நலம் இழந்ததனினும் நனி இன்னாது.
அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; ஆயம் = தோழியர் கூட்டம்; ஆய்ந்த = பாராட்டிய; நலம் = பெண்மை நலன் (அழகு); நனி = மிகவும்; இன்னாதது = துன்பம் தருவது; வாய = வாயையுடைய; மாலை = வரிசை; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்.
அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; ஆயம் = தோழியர் கூட்டம்; ஆய்ந்த = பாராட்டிய; நலம் = பெண்மை நலன் (அழகு); நனி = மிகவும்; இன்னாதது = துன்பம் தருவது; வாய = வாயையுடைய; மாலை = வரிசை; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்.
உரை: (தோழி!) கருக்குடைய வாயையுடைய வாள் போன்ற விளிம்புடன்கூடிய,
கொழுவிய மடலை உடைய தாழையானது, வரிசையாக வேல்களை நட்டு வைத்த வேலியைப்போல் காக்கும், மெல்லிய கடற்கரைக்குரிய தலைவன் எனக்குச் செய்த கொடுமை, பலர் அறியும் வண்ணம் பரவினால், அது, அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர், பாராட்டிய என்னுடைய பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும், மிகுந்த துன்பத்தைத் தருவதாகும்..
சிறப்புக் குறிப்பு: தன்னோடு விளையாடும் பெண்கள், தங்களைக் காட்டிலும் அழகானவள்
என்று தன்னை வியந்து பாராட்டியதை, “ஆயம் ஆய்ந்த என் நலம்”
என்று தலைவி குறிப்பிடுகிறாள். தலைவன் தன்னைவிட்டுப்
பிரிந்து சென்றதைத் தலவி, தலைவன் தனக்குச் செய்த கொடுமையாகக்
கருதுகிறாள்.
No comments:
Post a Comment