Monday, August 29, 2016

244. தோழி கூற்று

244. தோழி கூற்று

பாடியவர்: கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற்  புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று (மறுநாள்) தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுகலாற்றின் (களவொழுக்கத்தில்) இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.
கூற்று விளக்கம்:  முதல்நாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வந்து, தாழிடப்பட்ட கதவைத் திறக்க முயன்றான். ஆனால், தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்து அவனைச் சந்திக்கவில்லை. மறுநாள், தலைவனும் தோழியும் சந்திக்கிறார்கள். “தலைவ, நேற்றிரவு நீ வந்து ஒலியெழுப்பியதை நாங்கள் கேட்டோம். ஆனால், தலைவி எழுந்துவருவதற்கு முயன்றபொழுது, அவள்தாய் அவளை இறுகத் தழுவிக்கொண்டாள். ஆகவே, இனி நீ இரவில் வந்து தலைவியைக் காணமுடியாது.” என்று தோழி கூறுகிறாள்.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. 

கொண்டு கூட்டு: பெருமபல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து, உரவுக்களிறு போல் வந்து இரவுக் கதவம் முயறல் கேளேம்  அல்லேம்;  கேட்டனெம்.  ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கு, யாம் உயங்குதொறும் அறனில் யாய் முயங்கும். 

அருஞ்சொற்பொருள்: துஞ்சுதல் = தூங்குதல் ; நள்ளென் = இருள் செறிந்தயாமம் = நள்ளிரவு ; உரவு = வலிய; கதவம் = கதவு; முயறல் = முயலுதல்; ஓரி = ஆணின் தலைமுடி (இங்கு ஆண்மயிலின் உச்சிக் கொண்டையைக் குறிக்கிறது); முருங்குதல் = அழிதல்பீலி = தோகை; சாய்தல் = மெலிதல்; உயங்குதல் = அசைதல்; முயங்கும் = தழுவும்.

உரை: தலைவ!  ஊரில் உள்ளவர்கள் பலரும் தூங்கும் இருள் செறிந்த நடுஇரவில், வலிமையான யானையைப் போல் வந்து,  நீ இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, நாங்கள் கேட்காமல் இல்லை; கேட்டோம். தலைக்கொண்டை நெரியவும்,  தோகை மெலியவும்,  நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாங்கள் அசையுந்தோறும், எம் அறமில்லாத தாய் எம்மைத் தழுவினாள்.


சிறப்புக் குறிப்பு: ’நீ அவளைக் காண விரும்பினால், திருமணம் செய்துகொளவதுதான் சிறந்த வழி. அதற்கான முயற்சிகளை விரைந்து செய்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.  

No comments:

Post a Comment