Sunday, July 12, 2015

53. மருதம் - தோழி கூற்று

53. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 20 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான். ஆனால், திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யவில்லை. தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால் தோழியும் தலைவியும் வருந்துகிறார்கள். தோழி தலைவனை நோக்கி, “ நீ கொடுத்த உறுதிமொழிகளை நீ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது எங்களை வருத்துகிறது. ஆகவே, நீ தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறாள்.

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே. 

அருஞ்சொற்பொருள்: அணங்குதல் = வருத்துதல்; மகிழ்நன் = மருதநிலத் தலைவன்; முன்றில் = முற்றம்; நனை = அரும்பு; புன்கு = புன்க மரம்; தாழ் = மேலிருந்து விழுதல்; வேலன் = வெறியாட்டம் ஆடுபவன் (முருகன் கோயில் பூசாரி); புனைதல் = அலங்கரித்தல்; அயர்தல் = விளையாடுதல், உணர்வழிதல்; வான் =  வெண்மையான; எக்கர் = மணல் மேடு; நண்ணிய = நெருங்கிய; வியன் = அகன்ற; நேரிறை = நேர் + இறை; நேர் = நுட்பம், செவ்வை, தகுதி; இறை =  கையில் அணியும் தொடி; சூரரமகளிர் = தெய்வமகளிர் ; சூள் = உறுதி மொழி (சத்தியம்).

உரை: மருதநிலத் தலைவனே! வேலன் (வெறியாட்டு நடத்துபவன்) அழகாக அமைத்த வெறியாட்டு நடைபெறும் இடத்தில் செந்நெல்லின் வெண்ணிறமான பொரியைச் சிதறியது போல, முற்றத்தில் அரும்புகளாக இருந்து  முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் வெண்மையான மணல்மேடுகள் பொருந்திய எமது ஊரில் உள்ள பெரிய நீர்த்துறையில், தன் கைகளில் நல்ல வளையல்களை அணிந்த தலைவியின் முன்கையைப் பற்றி அச்சம் தரும் தெய்வமகளிர்முன் நீ கொடுத்த உறுதிமொழிகள் எம்மை வருத்துகின்றன.

விளக்கம்: தலைவன் தலைவியை மணந்துகொள்வதாகத்  தெய்வங்களின் முன்னிலையில் உறுதிமொழி அளித்தான். ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் தாழ்த்துகிறான். தலைவன் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுவோனோ என்று தோழியும் தலைவியும் அஞ்சி வருந்துகிறார்கள். தெய்வங்களின் முன்னிலையில் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவிட்டால் உறுதிமொழி கொடுத்த தலைவனுக்கு தீங்கு விளையும் என்ற அச்சம் தோழிக்கும் தலவிக்கும் இருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுள்ளது.


புன்கின் பூக்கள் பொரியைச் சிதறினாற் போலத் தோன்றுகிறது என்றது தலைவன் அளித்த பொய்யான உறுதிமோழி மெய்போலத் தோன்றி தங்களைக் கலக்கமுறச் செய்தது என்று தோழியும் தலைவியும் எண்ணுவதாகவும் பொருள்கொள்ளலாம்.

No comments:

Post a Comment