Sunday, July 12, 2015

56. பாலை - தலைவன் கூற்று

56. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவர் சிறைக்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் (56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணையில் ஒருபாடலும் (16) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி கூறுகிறாள். தலைவன் தலைவியை அழைத்துச் செல்லாமல் தனியே செல்கிறான். அவன் செல்லும் வழியில் ஒருபாலை நிலத்தைக் கடக்க வேண்டியதாக உள்ளது. அந்தப் பாலை நிலத்தின் கொடுமையைக் கண்ட தலைவன், தலைவியைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தால் அவள் மிகவும் துன்பப்பட்டு இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 
-
அருஞ்சொற்பொருள்: வேட்டச் செந்நாய் = மான், பன்றி, முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடும் நாய்கள்; கிளைத்தல் = கிளறுதல், தோண்டுதல்; மிச்சில் = எஞ்சிய
பொருள்; குளவி = காட்டு மல்லிகை; மொய்த்தல் = மூடுதல்; அழுகல் = அழுகிய; சின்னீர் = சிறிதளவு உள்ள நீர்; உணீயர் = உண்ண; தில்அசை நிலை ; அம்மஅசை நிலை ; அளியள் = இரங்கத் தக்கவள்;

உரை: விலங்குகளை வேட்டையாடும் காட்டுநாய்கள் தோண்டிய குழிகளில் தோன்றிய நீரில் அந்த நாய்கள் குடித்ததுபோக எஞ்சிய சிறிதளவு நீரைக் காட்டுமல்லிகைப் பூக்கள் விழுந்து மூடியதால், அந்த நீர் அழுகிய நாற்றமுடையதாக உள்ளது. வளையலை அணிந்த, என் நெஞ்சில் அமர்ந்த, என் தலைவி என்னோடு வந்திருந்தால் அந்த நீரை என்னோடு சேர்ந்து உண்ண வேண்டியதாக இருந்திருக்கும். அவள் மிகவும் இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள்.


விளக்கம்: ஒருவர் உண்ட உணவில் எஞ்சியதைப் பிறர் உண்ணுவது அருவருக்கத் தக்கதாகும். நாய் குடித்ததில் எஞ்சியுள்ள நீரைக் குடிப்பது அதைவிட அருவருக்கத் தக்கது. நாய் குடித்து எஞ்சிய நீர் அழுகல் நாற்றமுடையதாக இருந்தால் அதைக் குடிப்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அருவருப்புடையது. பாலை நிலத்தைக் கடந்து செல்லும் தலைவன் அத்தகைய நீரை உண்ண வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் பாலை நிலத்தின் கொடுமையை நினைத்துத் தலவன் வருந்துகிறான். ஆகவே, தலைவியைத் தன்னுடன் அழைத்து வராதாது ஒருநல்ல முடிவு என்று எண்னுகிறான்

No comments:

Post a Comment