Monday, September 14, 2015

88. குறிஞ்சி - தோழி கூற்று

88. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கதக்கண்ணனார்.  இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: இதுவரைப் பகலில் வந்து தலைவியைச் சந்தித்த தலைவன், இனி இரவில் வரவிரும்புவதாகத் தோழியிடம் கூறினான். அந்தச் செய்தியைத் தலைவியிடம் தோழி கூறுகிறாள். தலைவனை இரவில் சந்திப்பது யாருக்காவது தெரியவந்தால் அதனால் பழிவரும் என்று எண்ணித் தலைவனை இரவில் சந்திப்பதற்குத்  தலைவி வெட்கப்படுகிறாள்.  ”தலைவனை இரவில் சந்திப்பதற்கு நீ வெட்கப்படக் கூடாது; தயங்கக் கூடாது.” என்று கூறித் தோழி தலைவியை ஊக்குவிக்கிறாள்.
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே. 

கொண்டுகூட்டு: தோழி, ஒலிவெள் அருவி ஓங்குமலை நாடன், சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோரும் துன் அரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம்நாமே வடு நாணலம்.

அருஞ்சொற்பொருள்: ஓங்குதல் = உயர்தல்; களிறு = யானை; வயம் = வலி; தொல் = பழைய; முரண் = வலி, மாறுபாடு; சோர்தல் = தளர்தல், வாடல்; துன்னுதல் = நெருங்குதல்; நடுநாள் = நள்ளிரவு; வடு = பழி, குற்றம்.

உரை: தோழி, ஒலிக்கும் வெண்ணிறமான அருவியை உடைய உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்குத் தலைவன், சிறிய கண்களையுடைய பெரிய களிறு, வலிமையான புலியை எதிர்த்துப் போரிட்டுத் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்கின்ற, மக்கள் கடத்தற்கரிய மலைப்பக்கத்தின் வழியே நள்ளிரவில் வரப்போகிறான். அதனால், நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாண மாட்டோம்.

விளக்கம்: புலியும் யானையும் போரிடும் மலைச் சாரலாதலால் அது மக்களால் நெருங்குதற்கு அரியதாயிற்று. வழியில் உள்ள பல கொடுமைகளுக்குத் தலைவனே அஞ்சாமல் வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல், பழிக்காக நாம் நாணி அவனை இரவில் சந்திக்க மறுப்பது சரியன்று என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறுவதாகத் தோன்றுகிறது.


உயர்ந்த மலையிலிருந்து கீழே வந்து அங்குள்ளவருக்குப் பயனளிப்பது போலத் தலைவன் பல இன்னல்களைக் கடந்து வெகுதொலைவிலிருந்து வந்து தலைவியுடன் அன்போடு இருந்து இன்பமும் அளிப்பான் என்பது இங்கு உள்ளுறை உவமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment