Monday, December 7, 2015

116. தலைவன் கூற்று

116.  தலைவன் கூற்று

பாடியவர்: இளங்கீரனார். இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். அவ்வாறாயின், இவர் அகநானூற்றில் ஒன்பது பாடல்களும் ( 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399) நற்றிணையில் ஆறு பாடல்களும் (3, 62, 113, 269, 308, 346) குறுந்தொகையில் ஒருபாடலும் (116) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தற்செயலாக ஒருபெண்ணைச் சந்தித்த தலைவன், அவளோடு அளவளாவிய பிறகு, அவளது கூந்தலின் சிறப்பைப் பாரட்டித் தனக்குத் தானே கூறியது.

யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே. 
.
கொண்டுகூட்டு: யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல் வார்ந்தன்ன நல் நெறிய; அவ்வே நறுந்தண் ணியவே. 

அருஞ்சொற்பொருள்: நயந்து = விரும்பி; உறைதல் = தங்குதல்; தேம் = இனிமை; பாய்தல் = தாவுதல் (தவழுதல்); கெழு = பொருந்திய; உறந்தை = உறையூர்; உறந்தைப் பெருந்துறை = உறையூரில் உள்ள காவிரிப் பெருந்துறை; அறல் = கருமணல்; வாரல் = நீளல்; நெறிப்பு = நீரோட்டத்தினால் படிப்படியாக மணலில் உண்டாகும் சுவடு; நறுமை = மணம்; அவ்வே = அவையே; தண் = குளிர்ச்சி.

உரை: என்னால் விரும்பப்பட்டு, என்னோடு வந்து பழகும் (தங்கும்) என் தலைவியின் கூந்தல் இனிமை தவழும் தன்மையது. அவளது கூந்தல், வளமை பொருந்திய சோழரது உறையூரில் உள்ள காவிரிப் பெருந்துறையில் விளங்கும் நுண்ணிய கருமணல் நீண்டு படர்ந்து இருப்பது போல் நல்ல நெறிப்பை உடையது. மற்றும், அது மணமும் குளிர்ச்சியும் உடையது.

சிறப்புக் குறிப்பு:   முதலில் தலைவன் தலைவியைத் தொலைவிலிருந்து பார்த்தபொழுது, அவள் கூந்தலின கருமையும் அழகும் அவனைக் கவர்ந்தது. பின்னர் அவளை நெருங்கும் பொழுது அவள் கூந்தலின் அடர்த்தியையும் அலைகளைப் போல் அந்தக் கூந்தல் நெளிந்திருக்கும் அழகையும் கண்டு மகிழ்ந்தான். அவளோடு மீண்டும் நெருங்கிப் பழகியபோழுது அவள் கூந்தலில் இருந்த மணத்தையும் குளிரிச்சியையும் உணர்ந்தான். தலைவனின் இந்த மூன்று நுகர்ச்சிகளும் (அனுபவங்களும்) இப்பாடலில்  முறையே கூறப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment