Thursday, December 24, 2015

127. தோழி கூற்று

127. தோழி கூற்று

பாடியவர்:
ஓரம் போகியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 10 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: பாணன் வாயிலாகப் (தூதாகப்) புக்கவழித் தலைமற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் பாணன் ஒருவனைத் தூதுவனாக அனுப்புகிறான். அத்தூதுவன், “தலைவன் மிகவும் சிறந்தவன்.” என்று கூறுகிறான். அவன் கூறுவதைப் பொய் என்று உணர்ந்த தோழி, “ உன் பாணன் பொய் சொல்லுகிறான். அதனால், பாணர்கள் அனைவரும் பொய்யர்கள் என்று கருதப்படுவார்கள்.” என்று கூறுகிறாள்.

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே. 

கொண்டு கூட்டு: குருகுகொளக் குளித்த கெண்டை அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் கழனியம் படப்பைக் காஞ்சி ஊர! ஒருநின் பாணன் பொய்யனாக,
நீ அகன்றிசினோர்க்கு உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர். 

அருஞ்சொற்பொருள்: குருகு = கொக்கு; உரு = நிறம்; கெழு = பொருந்திய; வான் = வெண்மை; முகை = மொட்டு; வெரூஉம் = அஞ்சும்; கழனி = வயல்; படப்பை = தோட்டம்; காஞ்சி = காஞ்சி மரம்; அகன்றிசினோர் = தலைவன் பிரிந்திருப்பதால் தனித்திருப்பவர்.

உரை: கொக்கு குத்தும்போது, அதன் வாயிலிருந்து தப்பிய கெண்டை மீன், நன்னிறமான தாமரையின் வெண்னிறமான மொட்டுக்களை கொக்கு என்று நினைத்து அஞ்சும். அத்தகைய வயல் சூழ்ந்த தோட்டத்தில் காஞ்சி மரங்கள் நிறைந்த மருதநிலத் தலைவனே! உன்னுடைய ஒருபாணன் பொய் பேசியதால், ஊரில் உள்ள பாணர்கள் எல்லோரும் கள்வர்களைப்போல் பொய்யர்கள் என்று உன்னைவிட்டுப் பிரிந்து தனித்து வாழ்பவர்கள் எண்ணுவார்கள்.

சிறப்புக் குறிப்பு:  நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருள் மூழ்கிய கெண்டைமீன்  மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை மொட்டை அந்த நாரையென்றே கருதியது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்ற பழமொழியைப் போன்றது.

நீ அகன்றிசினோர்என்றது தலைவன் பல மகளிரோடு நட்புடையவன் என்னும் கருத்தில் கூறப்பட்டது. கொக்குக்கு அஞ்சிய கெண்டை, அக்கொக்கைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை இல்லாததுமாகிய தாமரை மொட்டைக் கண்டு அஞ்சியதைப்போல்தலைவன் விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் பொய்யர் என்று கருதி வெறுத்தனர் என்பது குறிப்பு.

No comments:

Post a Comment