Thursday, December 24, 2015

121. தலைவி கூற்று

121.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி வரும் தலைமகன் செய்யுங்குறி பிறிதொன்றால் நிகழ்ந்தது. மற்று அவன் குறியை ஒத்தவழி அவ்வொப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்றாள். ஆண்டு அவனைக் காணாது, தலைமகள் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அவன் வரவைத் தலைவிக்குத் தெரிவிப்பதற்காக ஒரு ஒலி எழுப்புவது வழக்கம். ஒருநாள், தலைவனைச் சந்திப்பதற்குத் தலைவி, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றாள். அங்கு, தலைவன் எழுப்பும் ஒலிபோல் ஒரு ஒலியைக் கேட்டாள். ஆனால் அது தலைவனால் எழுப்பப்பட்ட ஒலி அன்று. ஆகவே, அவள் ஏமாற்றத்துடன் திரும்பினாள். இன்று தலைவனைக் காணத் தலைவி வந்திருக்கிறாள். அவன் வந்ததற்கு அடையாளமான ஒலியைத் தான் கேட்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  “முன்பு அவர் வராததனால் நான் பசலையுற்றேன். இப்பொழுது நீ கூறுவது உண்மையா?”, என்று தலைவி தோழியைக் கேட்கிறாள்.

மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனஎன் தடமென் தோளே. 

கொண்டு கூட்டு: தோழி!  வாழி!  சாரல் மைபட்டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகியாங்கு,  நாடன் தான் குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன என் தடமென்தோளே. மெய்யோ!

அருஞ்சொற்பொருள்: சாரல் = மலைப்பக்கம்; மா = கருமை; முசுக்கலை = ஆண்கருங்குரங்கு; ஆற்ற = தாங்கும்படி; தப்பல் = தவறுதல்; கோடு = கிளை; நாடன் = குறிஞ்சிநிலத் தலைவன்; குறி = அடையாளம்;  வாய்த்தல் = நன்கு அமைதல்; பசத்தல் = பசலையடைதல்; தட = பெரிய; மென் = மெல்லிய.

உரை: தோழி! நீ வாழ்க! மலைச் சாரலில் மையைப் பூசினாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு, தன்னைத் தாங்க முடியாத கிளையின் மேல் தவறாகத் தாவியதால், முறிந்த கிளையோடு தானும் கீழே விழுந்தது. அது போலத், தலைவன் செய்த தவற்றினால் ( சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு வந்து சரியான ஒலியை எழுப்பாததால்), என்னுடைய மெல்லிய தோள்கள் பசலையுற்றன. நீ கூறுவது மெய்யோ?

சிறப்புக் குறிப்பு: குரங்கு செய்த தவற்றினால் கிளை முறிந்ததுபோல், தலைவன் செய்த தவற்றினால் தான் பசலையுற்றதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

No comments:

Post a Comment