Tuesday, June 30, 2015

45. மருதம் - தோழி கூற்று

45. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.  இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே, ஒரு பாணனைத் தலைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான். தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குத் தூதுவன் வருகிறான். தலைவன் மீண்டும் வரவிரும்புகிறான் என்று தூதுவன் கூறியதைக் கேட்ட தலைவி, தலைவன் வருவதற்குச் சம்மதிக்கிறாள். தலைவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும் அவற்றை எல்லாம்  பொறுத்துக் கொண்டு தலைவன் வரவுக்குத் தலைவி உடன்பட்டதைக் கண்டு தோழி வியக்கிறாள்.


காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 

அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு; வால் = மிகுதி; தழீஇய = தழுவ; மல்லல் = வளமை; எல் = ஒளி, பெருமை; மறுவரல் = மயக்கம், கலக்கம்; தெறு = துன்பம்  ; திணை =  குடி.

உரை: காலையில் எழுந்து, விரைந்து செல்லும் குதிரைகளைத் தேரில் பூட்டி, மிகுந்த அணிகலன்களை அணிந்த பரத்தையரைத், தழுவும் பொருட்டு, வளமை பொருந்திய ஊரையுடைய தலைவன் சென்றான். அவன், மிகுந்த பெருமைக்குரியவன். அவன் மீண்டும் தன்னிடம் வந்தால் அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி மனம் கலக்கம் அடைகிறாள். தலைவியின் மனம் கலங்கக்கூடிய செயலைத் தலைவன் செய்தாலும் அதனை மறந்து அவனைத் தலைவி  ஏற்றுக்கொள்வது துன்பத்திற்குரியதாயினும் அஃது இந்தக் குடியிற் பிறந்தவர் செய்யும் செயல் போலும்.


விளக்கம்:  ”வாலிழை மகளிர்” என்றது மிகுந்த அளவில் அணிகலன்களை அணிந்து, இயற்கை அழகால் அன்றி, அவர்கள் அணிந்திருக்கும் அனிகலன்களின் அழகால்  ஆண்களை மயக்கும் பரத்தையரைக் குறிக்கிறது. உயர்ந்த குடியிற் பிறந்த கற்புடைய மகளிர் தம் தலைவர் கொடுமை புரிந்தாலும்  அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப் பிறப்பிற்குரிய இயல்பு என்னும் கருத்து  குறுந்தொகைப் பாடல்கள் 9 மற்றும் 10 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

44. பாலை - செவிலித்தாய் கூற்று

44. பாலை - செவிலித்தாய் கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். தலைவியின் செவிலித் தாய் ( தோழியின் தாய்) அவர்களைத் தேடி அலைகிறாள். ”நான் தேடிய இடங்களிலும் வந்த வழியிலும் பலரைப் பார்த்தேன், ஆனால் தலைவியைக் காணவில்லையே” என்று செவிலித்தாய் வருந்துகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. 

அருஞ்சொற்பொருள்: பரி = நடை; நோக்குதல் = ஊன்றிப்பார்த்தல்; வாள் = ஒளி ; அகல் = அகன்ற; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; மீன் = விண்மீன்கள் (நட்சத்திரம்); மன்ற = நிச்சயமாக.

உரை: என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற, (என்மகள் போன்ற) பெண்ணைக் காணவில்லை.


விளக்கம்: ஆகாயத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும் ஒரேஒரு திங்கள் மட்டுமே உண்டு. அதுபோல், மிகுந்து காணப்படும் விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், திங்களைப் போன்ற, அவள் தேடுகின்ற பெண்ணைக் காணவில்லையே என்று செவிலித்தாய் கூறுவதாகத் தோன்றுகிறது. 

43. பாலை - தலைவி கூற்று

43. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் தலைவர் நினைத்தார். இப்பொழுது அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அதை நினைத்து நான் வருந்துகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. 

அருஞ்சொற்பொருள்: இகழ்தல் = சோர்தல், மறுத்தல்; ஒல்லல் =  இசைதல்; ஆயிடை = அக்காலத்து; ஆண்மை =  மன உறுதி; பூசல் = போராட்டம்; அரா = பாம்பு; நல்லரா = நல்லபாம்பு; கதுவுதல் = பற்றுதல்; அலமலக்குதல் = கலக்கமடைதல்.

உரை: தோழி,  என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார் என்று நான் மனஉறுதியுடன் இருந்ததால், அவருடைய பிரிவைப் பற்றிய எண்ணங்களை முற்றிலும் புறக்கணித்தேன்.  தான் பிரிந்து செல்லப்போவதை என்னிடம் தெரிவித்தால், நான் அதற்கு உடன்படமாட்டேன் என்று எண்ணித் தன் பிரிவைப்பற்றி என்னிடம் சொல்வதை அவர் புறக்கணித்தார். அப்பொழுது, எங்கள் இருவருடைய மனஉறுதியினால் தோன்றிய போராட்டத்தால் துன்பம் அடைந்த என் நெஞ்சம்,  இப்பொழுது நல்லபாம்பு கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது.

விளக்கம்: .இகழ்தல் என்பது செய்யவேண்டியதைச் செய்யாமல் சோர்ந்திருப்பதைக் குறிக்கிறது. தலைவன் தன்னிடம் மிகுந்த அன்போடு இருந்ததால் அவன் பிரிந்து செல்வான் என்பதைத் தலைவி எதிர்பார்க்கவில்லை. பிரிவை எதிர்பார்த்திருந்தால், தலைவன் பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைத் தலைவி செய்திருப்பாள். ஆகவேதான் “யான் இகழ்ந்தனன்” என்று தலைவி குறிப்பிடுகிறாள். பிரிவைப் பற்றித் தலைவியிடம் கூறினால் அவள் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டாள் என்று எண்ணியதால், தலைவன் பிரிவைப் பற்றித் தலைவியிடம் கூறாமல் இருந்தான். ஆகவே, அவனும் தான் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருந்ததால் “அவர் இகழ்ந்தனரே” என்று தலைவி குறிப்பிடுகிறாள்.

தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும்பொழுது, சொல்லாமல் செல்வதும் மரபு என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் அவருடைய குறுந்தொகை உரைநூலில் கூறியுள்ளார். குறுந்தொகைப் பாடல் 79 –இல் தலைவன் சொல்லாமல் பிரிந்து செல்வதில் வல்லவன் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லாமல் சென்றாலும், செல்வதற்கான குறிப்புகளைத் தலைவன் தலைவிக்கு மறைமுகமாக வெளிப்படுத்துவது உண்டு என்பதற்கும் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன என்றும் உ. வே. சா அவர்கள் தம் நூலில் கூறுகின்றார். .

நல்லபாம்பு தீண்டியதனால் தோன்றிய கொடுமை, முதலில் தெரியாமல், நஞ்சு குருதியில் கலந்து தலைக்கேறிய பிறகே தோன்றுவதுபோல், தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் அவன் பிரிந்து சென்ற பின்னரே தோன்றிற்று என்று தலைவி கூறுகிறாள். 

42. குறிஞ்சி - தோழி கூற்று

42. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 –இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை. தோழி மட்டும் வருகிறாள். “இனி இரவு நேரங்களில் தலைவி வரமாட்டாள். இதுவரை நீ அவளோடு இரவு நேரங்களில் சந்தித்ததைப் போல் இனிமேல் சந்திக்க முடியாது. அதனால், உனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு குறையும் என்று எண்ண வேண்டாம்.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 

அருஞ்சொற்பொருள்: காமம் = புணர்ச்சி; யாமம் = நள்ளிரவு (இரவு 10 மணி முதல் 2 மணி வரை); கருவி = மேகம்; மா = பெரிய; விடர் = மலைப் பிளப்பு; இயம்புதல் = ஒலித்தல்; தேய்தல் = குறைதல்; வயின் = இடம்.

உரை: நடு இரவில் மலையில் பெய்த பெருமழை, பின்னர் அருவியாக (மலைப்பிளப்புகளில்) ஒலிக்கும் குறிஞ்சிநிலத்தையுடையவனே! தலைவியோடு நீ கூடி மகிழாவிட்டாலும், உன்னிடத்தில் அவளுக்குள்ள நட்பு குறையுமோ?  

விளக்கம்: தலைவன் முதலில் பகல் நேரங்களில் தலைவியைச் சந்தித்தான். பின்னர் இரவு நேரங்களில் சந்தித்தான். இருவருக்கும் இடையே உள்ள காதல் அடுத்த நிலைக்குச் சென்றது. தலைவன் அவளோடு உடலுறவு கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவு நேரங்களில் தலைவனை மறைமுகமாகச் சந்தித்தாலும், அவர்களுடைய நட்பையும் செயல்பாடுகளையும் பலரும் அறிய வாய்ப்பு இருக்கிறது. மற்றும், தலைவனோடு உறவு கொள்வதால் பிற பின்விளைவுகளும் ஏற்படலாம். இதைப் பற்றி எல்லாம் எண்ணிப் பார்த்த தலைவி,  தலைவனை இரவில் சந்திப்பதை நிறுத்திவிட்டால், அவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று எண்ணுகிறாள். ஆகவே, தன் தோழியை அனுப்பித் தான் இனி தலைவனை இரவு நேரங்களில் சந்திக்க முடியாது எபதையும், அதனால் தான் அவனை விரும்பவில்லை என்றோ அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள நட்பு குறைந்துவிடும் என்றோ அவன் எண்ண வேண்டாம் என்பதையும் தெரிவிக்கிறாள்.


 இரவில் மலையில் பெய்த மழை பின்னர் அருவிகளிலிருந்து விழும் நீரில் இருந்து தெரியவரும் என்பது “தலைவனும் தலைவியும் யாருக்கும் தெரியாமல் உறவு கொண்டாலும், தலைவியின் செயல்பாடுகள், அவள் உடலில் தோன்றும் மாற்றங்கள் ஆகியவற்றால் அவர்களின் உறவைப் பலரும் அறியக்கூடும்” என்பதை உள்ளுறை உவமமாகப் புலவர் குறிப்பிடுகிறார். 

41. பாலை - தலைவி கூற்று

41. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: அணிலாடு முன்றிலார்.  இவருடைய இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. மக்கள் இல்லாத வீடுகளின் முற்றத்தில் அணில் விளையாடிக்கொண்டிருப்பதை இப்பாடலில் இவர் “அணிலாடு முன்றில்” என்று குறிப்பிட்டதால்,  இவர் அணிலாடு முன்றிலார் என்று அழைக்கப்படுகிறார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். தோழி, “ நீ ஏன் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்கிறாள். தலைவி, “என் தலைவர் என்னோடு இருந்த பொழுது நான் மகிழ்ச்சியோடு இருந்தேன். இப்பொழுது அவர் என்னோடு இல்லாததால், நான் பொலிவிழந்து, தனிமையில் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. 

அருஞ்சொற்பொருள்: உழை = பக்கம்; உவத்தல் = மகிழ்தல்; சாறு = திருவிழா; புகலுதல் = மகிழ்தல்; மன்ற = உறுதியாக; அத்தம் = பாலைநிலம்; நண்ணுதல் = நெருங்குதல்; குடி = வீடு; சீறூர் =  சிற்றூர்; முன்றில் = வீட்டு முன்னிடம், முற்றம்; புலம்பு = தனிமை; புல்லென்று = பொலிவிழந்து; அலப்புதல் = வருந்துதல்; ஞான்று = பொழுது, காலம்.

உரை: தோழி, தலைவர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன், திருவிழா நடைபெறும் ஊரில் உள்ளவர்கள் மகிழ்வதைப் போல் நானும் மகிழ்ச்சியோடு இருப்பேன். அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், பாலைநிலத்தில் உள்ள, அழகிய வீடுகளுடன் கூடிய சிறிய ஊரிலிருந்து மக்கள் நீங்கிச் சென்ற பிறகு அணில் விளையாடும் முற்றத்தையுடைய தனிமையான வீட்டைப் போல் நானும் பொலிவிழந்து வருந்துவேன்.

விளக்கம்: ”சாறுகொள் ஊரிற் புகல்வேன்” என்றது, இயல்பாக உள்ளதைவிட, விழாக்காலத்தில் மிகுதியான சிறப்பை ஓரூர் கொண்டிருப்பது போல, என் தலைவர் என்னோடு இருக்கும் பொழுது எனது இயற்கை அழகோடு  இன்னும் அதிக மகிழ்ச்சியோடும் அழகோடும் சிறந்து விளங்குவேன் என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. “அணிலாடு முன்றில்” என்பது, மக்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில்தான் அணில் ஓடியாடிக்கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. .


Sunday, June 14, 2015

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: செம்புலப் பெயனீரார். இப்பாடலை இயற்றியவரின் இயற்பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பாடலில், “செம்புலப் பெயல் நீர்” என்ற அருமையான உவமையை இவர் பயன்படுத்தியதால், இவர் இப்பெயர் பெற்றார் என்று கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள்.  முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும் சந்தித்துக் கருத்தொருமித்துப் பழகினார்கள்.  தங்களுடைய காதல்  தொடருமா அல்லது தன் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று காதலி கவலைப்படுகிறாள்.  ”எவ்விதமான உறவும் இல்லாத நாம் நெருங்கிப் பழகுகிறோம். நம்முடைய நெஞ்சங்கள் ஒருமித்தன. நாம் பிரிய மாட்டோம்.” என்று உறுதி கூறித் தலைவன்  அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 

அருஞ்சொற்பொருள்: ஞாய் = தாய் (உன்னுடைய தாய்); நுந்தை = உன்னுடைய தந்தை; புலம் = நிலம்; செம்புலம் = சிவந்த நிலம்; பெயல் = மழை.

உரை: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும், ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? ஆனால் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன. நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டோம்.

விளக்கம்: ”யாய், ஞாய், தாய்”ஆகிய சொற்கள் முறையே ”என் தாய், உன் தாய், அவர் தாய்” என்பவற்றைக் குறிக்கின்றன. அதுபோல், ”எந்தை, நுந்தை, உந்தை” என்ற சொற்கள் ”என் தந்தை, உன் தந்தை, அவர் தந்தை” என்பவற்றைக் குறிக்கின்றன.

நிலத்தியல்பான் நீர்திரிந்தற்று ஆகும் மாந்தர்க்கு
 இனத்தியல்பது ஆகும் அறிவு. (குறள் 452)

என்றும்,

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
 நீரியைந் தன்னார் அகத்து. (குறள் 1323)

என்றும்  வள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

எவ்வித உறவும் இல்லாத, முன்பின் தெரியாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த பிறகு, அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்கி  அன்புடை நெஞ்சம் கலந்து கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கும்  இப்பாடல் பொருந்துவதாகத் தோன்றுகிறது.


இப்பாடலின் அடிப்படையில் சில திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பாடலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இலண்டன் மாநகரத்தின் தொடர்வண்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை http://www.thehindu.com/thehindu/2001/07/01/stories/1301067c.htm என்ற இணைய தளத்தில் காணலாம்.

39. பாலை - தலைவி கூற்று

39. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் சென்ற வழி மிகவும் வெம்மையான காற்று வீசும் பாலைநிலம் என்று கூறுகிறார்களே! அதைக் கேட்ட பிறகும் நான் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்?” என்று கூறுகிறாள்.

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே. 

அருஞ்சொற்பொருள்: வெம்மை = சூடு; திறல் = வலிமை; வளி = காற்று; பொங்கர் = மரக்கிளை; போந்தென = வீசுவதால்; நெற்று = உலர்ந்த பழம்; உழிஞ்சில் = வாகை மரம்; ஆர்த்தல் = ஒலித்தல்; சுரம் =  பாலைநிலம்; முனிதல் = வெறுத்தல்; ஆறு = வழி.
உரை: தோழி, என்னுடைய மார்பைத்தழுவி உறங்குவதை வெறுத்த என் தலைவர், என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற வழியானது, வெம்மையான, வலிமையுடைய, விரைவான காற்று  வீசுவதால், வாகை மரத்தின் மரக்கிளைகளில் உள்ள முற்றிய வற்றல் ஒலிக்கும் மலைகளையுடைய, கடத்தற்கரிய பாலைநிலம் என்று கூறுவர்.