Tuesday, May 9, 2017

341. தலைவி கூற்று

341. தலைவி கூற்று
பாடியவர்: மிளைகிழார் நல்வேட்டனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பருவவரவின்கண் வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று கவலைப்பட்ட தோழிக்கு, “அவர் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடித்தபின் வருவார் என்ற நம்பிக்கையால், நான் மனவலிமையோடு அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவர் வரும்வரை உயிர் வாழ்வேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப 

வாழ்வேன் தோழியென் வன்க ணானே.

கொண்டு கூட்டு: தோழி! பல்வீ பட்ட பசுநனைக் குரவம்பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக்கொளாஅச் சினை இனிதாகிய காலையும் காதலர் பேணாராயினும், பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம் வலிப்ப என் வன்கணான் வாழ்வேன்!
அருஞ்சொற்பொருள்: வீ = பூ; நனை = அரும்பு; குரவம் = குரா மரம்; புன்கு = புன்க மரம்; பொழில் = சோலை; கொளாஅ = கொண்டு; சினை = கிளை; பேணுதல் = பாதுகாத்தல்; கண்ணுதல் = கருதுதல்; கடவது = தவறுவது; வலிதல் = துணிதல்; வன்கண்மனத்திண்மை.
உரை: தோழி! பல மலர்களையும் பசுமையான அரும்புகளையும் உடைய குராமரமும், நெற்பொரியைப் போன்ற பூக்களையுடைய புன்க மரமும் சேர்ந்து சோலை அழகாக உள்ளது. இம் மரங்களின் கிளைகள் கண்ணுக்கு இனியவையாகக் காட்சி அளிக்கின்றன. இத்தகைய அழகிய காலத்திலும், தலைவர் நம்மை பாதுகாக்கவில்லை என்றாலும், பெரியோர் தம் உள்ளத்திலே நினைத்த வீரச்செயலைச் செய்து முடிக்கத் தவறுவது இல்லை என்று எண்ணி,  முன்பு துணிவில்லாமல் இருந்த என் நெஞ்சம், பின்னர் துணிவு பெற்றது. அந்தத் துணிவினால், நான் உயிர் வாழ்வேன்.
சிறப்புக் குறிப்பு: நம்மிடம் அன்புடைய தலைவர், தாம் மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்காவிட்டாலும் குறித்த காலத்தில் திரும்பிவருவார்.” என்று தலைவி முதலில் நினைத்தாள். பின்னர், “அவர் தான் மேற்கொண்ட பணியைச் செய்து முடித்த பிறகுதான் வருவார். அதனால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.” என்று முடிவு செய்தாள்.  அவ்வாறு முடிவு செய்தாலும் தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு மனவலிமை வெண்டுமாதலால். “தலைவர் மீது எனக்குள்ள நம்பிக்கையால் மனவலிமை பெற்றேன். அதனால் நான் உயிர் வாழ்வேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
குரவமும் புன்கும் இளவேனிற் காலத்தில் மலரும் மலர்கள் என்ற செய்தி ஐங்குறுநூற்றின் இளவேனிற் பத்து என்ற பகுதியில் உள்ள பாடல்கள் 344 மற்றும் 347 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவரோ வாரார் தான்வந் தன்றே
நறும்பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே!                            (ஐங்குறுநூறு – 344)
பொருள்: நறுமணம் கொண்ட பூக்களையுடைய குரா மரமானது பயந்துள்ள செய்த பாவை போன்ற பூக்களைக் கொய்யும் பருவமான இளவேனிலும் வந்ததே! அவரோ, இன்னும் வாராதிருக்கின்றனரே!

அவரோ வாரார் தான்வந் தன்றே
எழிற்றகை இளமுலை பொலிய
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே!                                    (ஐங்குறுநூறு – 347)


பொருள்: எழிலின் தகைமை எல்லாம் ஒருங்கே பொருந்திய என் இளைய முலைகள் பொலிவு அடையும்படியாக, பொரிபோலும் பூக்களையுடைய புன்கினது தளிர்களை அணிகின்ற இளவேனிற்பொழுதும் இதோ வந்தது. அவர் இன்னும் வந்தாரல்லர்!

340. தலைவி கூற்று

340. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி (இரவிலே தலைவனும் தலைவியும் சந்திப்பதற்காகக் குறிக்கப்பட்ட இடம்) உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.
கூற்று விளக்கம்: இப்பாடலில், இரவுக்குறியைப் பற்றிய செய்தியோ, அல்லது தலைவி தலைவனை இரவிலே சந்திப்பதற்குத் தலைவி  மறுப்பதைப் பற்றிய செய்தியோ இல்லை. ஆகவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்று பொருத்தமானதாகத் தோன்றவில்லை. தலைவன் மீது காதல் அதிகமாகும் பொழுது தன் நெஞ்சு அவனிடமும், அவனைப் பிரிந்து வருந்தும் பொழுது மீண்டும் தன்னிடமும் தன் நெஞ்சு வந்து அலைவதாகத் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள். இதுவே இப்பாடலில் உள்ள கருத்து.

காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே. 

கொண்டு கூட்டு: தோழி! அவர் இருந்த என் நெஞ்சு, காமங் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகிஒருபாற் படுதல் செல்லாது ஆயிடை அழுவம் நின்ற அலர்வேய் கண்டல்கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர்தர, பெயர் தந்தாங்கு வருந்தும்!

அருஞ்சொற்பொருள்: கடைதல் = மிகுதல்; கடையின் = மிகுந்தால்; படர்ந்து = நினைத்துச் சென்று; புலம்பின் = வருந்தினால்; ஆயிடை = அவ்விடம், அக்காலத்து; அழுவம் = கடற்பரப்பு; அலர் வேய் = மலர்கள் பொருந்திய; கண்டல் = தாழை; ஒல்கி = சாய்ந்து; ஓதம் = வெள்ளம்.

உரை: தோழி!, நம் காதலர் இருந்த என் நெஞ்சுகாமம் மிகுந்தால் அவரை நினைத்து அவரிடம் செல்லுகிறது.  நாம் அவரைப் பிரிந்து வருந்தும் பொழுது நம்மிடம் திரும்பி வந்துவிடுகிறதுகடற்கரையில் வளர்ந்து நின்ற மலர்களையுடைய தாழை, கழியின் பக்கம் அலை வரும்பொழுது அப்பக்கமாகச் சாய்ந்து, அந்த அலை கடலின் பக்கம் திரும்பிச் செல்லும்பொழுது தானும் கடற்பக்கம் சாய்கிறது. இருபக்கமும் சாயும் தாழையைப்போல், என் நெஞ்சு என் தலைவரிடமும் என்னிடமும் மாறிமாறி அலைந்து வருந்துகிறது.

339. தோழி கூற்று

339. தோழி கூற்று
பாடியவர்: பேயார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லி வற்புறீஇயது. ( வற்புறீஇயது = வற்புறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல் தலைவி அழுதுகொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தோழி, “நீ தலைவனோடு அளவளாவிய காலத்தில் மகிழ்ச்சியோடு இருந்தாய்இப்பொழுது ஏன் அழுகிறாய்? தலைவன் திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகக்தானே சென்றிருக்கிறான். நீ அழுவதை நிறுத்து. அவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வான்.” என்று கடிந்து கூறுகிறாள்.

நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகிச் சாரற்
குறவர் பாக்கத் திழிதரு நாடன்
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க்
குவளை யுண்கண் கலுழப்
பசலை யாகா வூங்கலங் கடையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நறை அகில் வயங்கிய நளிபுன நறும்புகைஉறை அறு மையின் போகிச் சாரல் குறவர் பாக்கத்து இழிதரு நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்மாஇதழ்க் குவளை உண்கண் கலுழபசலை ஆகா ஊங்கலங்கடை
மன் இனிது.

அருஞ்சொற்பொருள்: நறை = மணம்; அகில் = ஒருவகை மரம்; வயங்குதல் = விளங்குதல்; நளிதல் = செறிதல்; புனம் = கொல்லை; உறை = துளி; மை = மேகம்; உறை அறு மை = நீர்த்துளிகள் இல்லாத மேகம்; பாக்கம் = பக்கத்திலுள்ள ஊர்கள்; மயங்குதல் = கலத்தல்; கோதை = மாலை; முயங்கல் = தழுவுதல்; மன்மிகுதிப் பொருளைக் குறிக்கும் இடைச்சொல்மா = கருமை; உண்கண் = மைதீட்டிய கண்கள்; கலுழ்தல் = அழுதல்; கடை = நிலை; ஊங்கு = முன்பு; ஊங்கலங்கடைஊங்கு+அல்+அம்+கடை = முன்பு இருந்த நிலை (இங்கு அல், அம் ஆகியவை சாரியை ஆகும்.); ஆகா ஊங்கலங்கடை = ஆவதற்கு முன்பு இருந்த நிலை.
உரை: தோழி! வாழ்க! புனத்தில் உள்ள மரங்களைச் சுட்டெரித்த பொழுது, அதிலுள்ள அகில் மரங்களிலிருந்து எழுந்த மணம் மிக்க புகை,  நீர்த்துளிகள் இல்லாத வெண்ணிறமான மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள குறவர்களுடைய ஊரில், இறங்கும் நாட்டை உடைய தலைவன், பலவகையான மலர்கள் கலந்த மாலையை அணிந்த, உன் நல்ல மார்பைத் தழுவியது, கரிய இதழை உடைய, குவளை மலரைப் போன்ற உன்னுடைய  மைதீட்டிய கண்கள் அழும்படி  பசலை உண்டாவதற்கு முன்பு, மிகவும் இனியதாக இருந்தது.
சிறப்புக் குறிப்பு:     தினை விதைக்கும் பொருட்டுப் புனத்திலுள்ள மரங்களைக் குறவர்கள் எரிக்கும் பொழுது, அங்கிருந்த அகில் மரங்களும் எரிந்தன. மரங்களைச் சுட்டெரித்த போழுது தோன்றிய புகை, வெண்ணிறமாக அகில் மணத்தோடு மலைப்பக்கத்தில் இருந்த ஊர்களில் சென்று படிந்தது. மணமுள்ள புகை மலைப்பக்கத்தில் உள்ள ஊர்களில் படிந்தது என்றது, தலைவனின் செயல்கள் விரைவில் வெற்றிபெற்று, தலைவிக்கு இன்பமானதாக அமையும் என்பதைக் குறிக்கிறது.


Sunday, April 16, 2017

338. தோழி கூற்று

338. தோழி கூற்று

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்து தலைவி வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தைப் போக்குவதற்காகத் தோழி எவ்வளவோ இனியமொழிகளைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயற்சி செய்கிறாள். ஆனால், அவள் முயற்சி பலனளிக்கவில்லை. தலைவன் பின்பனிக் காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அவன் சொன்ன சொல் தவறாதவன். ஆகவே, அவன் கண்டிப்பாக விரைவில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு, “தலைவன் வந்துவிட்டான்.” என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு
அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப்
பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம்
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே. 

கொண்டு கூட்டு: பணைத்தோள் விளங்குநகர் அடங்கிய கற்பின் நலங்கேழ் அரிவை புலம்பு அசாவிட திரிமருப்பு இரலை அண்ணல் நல்ஏறு
அரிமடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇவீ ததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செல, செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் பெருவிறல் தேர் வந்தன்று.

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கினது; மருப்பு = கொம்பு; திரிமருப்பு = முறுக்கிய கொம்பு; இரலை = ஆண்மான்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; மடம் = இளமை; பிணை = பெண்மான்; அரி = அழகு; அல்குதல் = தங்குதல்; அசைஇ = அசைந்து; வீ = மலர்; ததை = நெருங்கிய; வியல் =அகன்ற; அரில் = பிணங்கிய தூறு (கொடிகள் பின்னிக் கிடக்கும் புதர்); துஞ்சுதல் = தூங்குதல்; கறித்தல் = கடித்துத் தின்னுதல்; புன்கண் = துன்பம்; கடைநாள் = கடையாமம்; தண் = குளிர்ச்சி; அச்சிரம் = முன்பனிக் காலம் (இங்கு பின்பனிக் காலத்தைக் குறிக்கிறது); விறல் = வெற்றி; பணை = மூங்கில்; நகர் = வீடு; நலம் = அழகு; கேழ் = பொருந்திய (கெழு என்பது நீண்டு கேழ் என்று வந்தது); அரிவை = 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண் ( இங்கு, தலைவியைக் குறிக்கிறது); புலம்பு = தனிமை; அசாவுதல் = தளர்தல்.
உரை:  மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய தலைவியே! விளங்கும் இல்லத்தில், அடங்கிக் கிடக்கும் கற்புடையவளே! அழகு பொருந்திய தலைவியே! உன் தனிமைத் துன்பம் நீங்குமாறு,  முறுக்கிய  கொம்புகளை உடைய, தலைமைத் தன்மை பொருந்திய நல்ல ஆண்மான், அழகும் இளமையும் உடைய  பெண்மானோடு, தாம் தங்குதற்குரிய நிழலுள்ள இடத்தில் தங்கி,  மலர்கள் நெருங்கிய,  கொடிகள் பின்னிக் கிடக்கும் அகன்ற புதரில் படுத்து உறங்கி, பொழுது கழிந்ததைக் கண்டு,செழுமையான பயற்றம் பயிரைக் கடித்துத் தின்னுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தையும்,  பின்பனி பெய்யும் கடைச்சாமத்தையும், குளிர்ந்த பனியையும் உடைய பின்பனிக் காலத்தில், மிகுந்த  வெற்றியையுடைய தலைவனது தேர் வந்தது.

சிறப்புக் குறிப்பு: ”இரலையும் பிணையும் துஞ்சிப் பயறு கறிக்கும்என்றது, தலைவியும் தலைவனும் இனிமேல் பிரிவின்றி இன்பமாக வாழ்வார்கள் என்பதைக் குறிக்கிறது.     தலைவனின் தேர் வராவிட்டாலும், விரைவில் வந்துவிடும் என்ற துணிவினால், தோழி வந்ததுஎன்று இறந்த காலத்தில் கூறினாள்.

337. தலைவன் கூற்று

337. தலைவன் கூற்று
பாடியவர்: பொதுக்கயத்துக் கீரந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழியை இரந்து பின்னின்ற கிழவன், தனது குறையறியக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவியைக் கண்டு தலைவன் காதலுற்றான். அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான்.  ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும் இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.” என்று கூறுகிறான்.

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே. 

கொண்டு கூட்டு: முலை முகிழ் முகிழ்த்தன; தலை கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந்தனசெறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பினசுணங்கும் சில தோன்றின. அணங்குதற்கு யான் தன் அறிவல்; தான் அறியலள்பெருமுது செல்வர் ஒருமட மகள் தான் யாங்கு ஆகுவள் கொல்?

அருஞ்சொற்பொருள்: முகிழ் = அரும்பு; கிளைஇய = கிளைத்த, நிறைந்த; குரல் = மயிர்க்கொத்துக்கள்; கிழக்கு வீழ்தல் = கீழே தொங்குதல்; செறிதல் = நெருங்குதல்; நிரை = வரிசை; பறிதல் = வெளிப்படுதல்; பறிமுறை = பல் விழுந்து முளைத்தல்; சுணங்கு = தேமல்; அணங்கு = வருத்தும் அழகு; அணங்குதற்கு = அவளால் வருத்தும் பொருட்டு; மடமகள் = இளமை பொருந்திய பெண் (தலைவி).

உரை:  தலைவியின் முலைகள் அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள  மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன; நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில தோன்றின.  அவள் என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள் அதனை அறியாள்.  பெரிய பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய  தலைவியாகிய ஒரே மகள்,  எத்தன்மையை உடை யவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?)

336. தோழி கூற்று

336. தோழி கூற்று
பாடியவர்: குன்றியனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துப் பழகி வந்தார்கள். பகலில் சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. தலைவன் தோழியை அணுகி, “நான் இனிமேல் இரவில் வந்து தலைவியைச் சந்திப்பேன் என்று நீ அவளிடம் சொல்லுவாயாக.” என்று வேண்டுகிறான். அதற்குத் தோழி, “ நீ இரவில் வர வேண்டாம்.” என்று கூறி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள்.

செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. 

கொண்டு கூட்டு: தேம்பாய் துறைவ செறுவர்க்கு உவகையாகத் தெறுவர,
ஈங்கனம் வருபவோ? நீ பிரிந்திசினோள், சிறு நா ஓள் மணி விளரி ஆர்ப்ப,
கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போலவருந்தினள்; அளியள்

 அருஞ்சொற்பொருள்: செறுவர் = பகைவர் (இங்கு, அலர் கூறுவோரைக் குறிக்கிறது); உவகை = மகிழ்ச்சி; தெறுவருதல் = மனம் சுழன்று வருந்துதல்; ஈங்கனம் = இங்கே; விளரி = நெய்தல் நிலத்திற்குரிய இரங்கற் பண்; ஆர்ப்பமுழங்க; கடுமா = விரைவாகச் செல்லும் குதிரை; நேமி = சக்கரம்; கழி = கடல் சார்ந்த நீர்நிலை; அளியள் = இரங்கத் தக்கவள்.
உரை: பூக்களிலிருந்து தேன் சிந்திப் பரவும் நெய்தல் நிலத்தலைவனே! எம்மை வருத்தும் அலர் கூறுவோர் மகிழுமாறு, நாங்கள் துன்புற, இரவில் நீ இங்கே வரலாமா? நீ பிரிந்த தலைவி,  சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் விளரிப்பண் போல ஒலிக்க, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரின் சக்கரம் மேலே ஏறிப்போனதால் நலிந்த, கரிய கழியில் உள்ள நெய்தல் மலரைப் போல, வருத்தம் அடைந்தாள். அவள் இரங்கத் தக்கவள்!
சிறப்புக் குறிப்பு: தலைவனும் தலைவியும் பகலில் சந்திக்க முடியவில்லை. தலைவனைக் காணாமல் தலைவி வருந்துகிறாள். தலைவனும் அவளை காண விழைகிறான். அதனால், அவன் ஆர்வத்தோடு, இரவில் வருவதாகக் கூறுகிறான்.  ”நீ இரவில் வந்தால் அலர் பேசுவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும், இரவில் வருவதால் உனக்குப் பல இன்னல்கள் நேரிடலாம். அவற்றை நினைத்துத் தலைவி வருந்துவாள்.” என்று தோழி கூறுகிறாள். இரவில் வருவது சிறந்த செயலன்று என்று தலைவன் உணர்ந்தால், அவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி இவ்வாறு கூறுகிறாள்.

இப்பாடலில், தலைவனைத் துறைவன் என்று குறிப்பிட்டிருப்பதாலும், நெய்தல் நிலத்திற்குரிய விளரிப் பண்ணைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், கழியில் உள்ள நெய்தல் மலரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்பட வேண்டும்.

335. தோழி கூற்று

335. தோழி கூற்று
பாடியவர்: இருந்தையூர்க் கொற்றன் புலவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. (நயவாமை = விரும்பாதபடி; அறிவுறீஇயது = அறிவுறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் அடிக்கடி பகலில் சந்தித்துப் பழகிவந்தார்கள். தலைவியை வீட்டில் காவலில் வைப்பதாகத் தலைவியின் தாய் முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “தலைவியை அவள் தாய் காவலில் வைக்கப் போகிறாள். இனி நீ அவளைச் சந்திக்க முடியாது.” என்று தலைவனிடம் கூறுகிறாள். தலைவன், “ நான் இரவிலே, அவள் இருக்கும் ஊருக்கு வந்து அவளைச் சந்திப்பேன்.” என்று கூறுகிறான். அதற்குத் தோழி, “அவள் இருக்கும் ஊர் மலைகளின் நடுவே உள்ளது. அங்கு இரவில் வந்தால் பல இன்னல்கள் நேரிடலாம். மற்றும், அவளுடைய தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, இரவிலே சந்திப்பதும் இயலாத செயல்.” என்று கூறுகிறாள்.

நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. 

கொண்டு கூட்டு: வார்கோல்  வல்வில் கானவர் தங்கைபெருந்தோள் கொடிச்சி இருந்த ஊர்நிரைவளை முன்கை நேரிழை மகளிர்,  இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி,
சுனைபாய் சோர்வு இடைநோக்கிச் சினை இழிந்துபைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்புஇடை நண்ணியது.

அருஞ்சொற்பொருள்: நிரை = வரிசை; நேரிழை = தகுதியான அணிகலன்களை அணிந்த பெண்; இரும் = கரிய; கல் = மலை; வியல் = அகன்ற; அறை = பாறை; சுனை = நீர்நிலை; சோர்வு இடை = சோர்ந்திருக்கும் சமயம்; சினை = கிளை; பைங்கண் = பசுமையான கண்; மந்தி = பெண்குரங்கு; பார்ப்பு = குட்டி; வெற்பு = மலை; நண்ணியது = பொருந்தியது; வார் = நீண்ட; கோல் = அம்பு; கானவர் = வேடர்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப்பெண்.

உரை: நீண்ட அம்புகளையும், வலிய வில்லையும் உடைய வேடர்களின் தங்கையாகிய, பெரிய தோளையுடைய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய தலைவி வாழும் ஊர், வரிசையாக  முன்கையில் வளையல்களையும், பொருத்தமான (அழகான) அணிகலன்களையும் அணிந்த மகளிர், கருமையான மலையிலுள்ள அகன்ற பாறையில், சிவந்த தினையைப் பரப்பி, நீர்நிலையில் இறங்கி நீராடுகின்ற, காவல் இல்லாத சமயத்தைப் பார்த்து, மரக்கிளையிலிருந்து  இறங்கி, பசுமையான கண்களையுடைய பெண் குரங்குகள், தம் குட்டிகளோடு அத்தினையைக் கவர்ந்து செல்லுகின்ற மலையிடத்தே அமைந்திருக்கிறது.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் ஊர் மலைகளின் இடையே உள்ளதால், தலைவன் இரவில் வருவது எளிதான செயலன்று. தலைவியின் தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, தலைவன் தலைவியை இரவில் சந்திப்பது இயலாத செயல் என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று அவள் மறைமுகமாக அவனுக்குக் உணர்த்துவதைக் குறிக்கிறது. பாறையில் உலர்த்தப்பட்டிருக்கும் தினையைக் காவல் இல்லாத சமயத்தில் குரங்குகளும் குட்டிகளும் கவர்ந்து செல்லும் என்றது, தலைவியை வேறு எவராவது திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது.