Sunday, August 20, 2017

390. கண்டோர் கூற்று

390. கண்டோர் கூற்று

பாடியவர்: உறையூர் முதுகொற்றனார்.
திணை: பாலை.
கூற்று : புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையுங் காட்டிச் செலவு விலக்கியது.
கூற்று விளக்கம்: பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலைக் கள்வரால் இன்னல்கள் நிகழும்என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.

எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. 

கொண்டு கூட்டு: சிறுபிடி துணையே எல்லும் எல்லின்று. சாத்து வந்து இறுத்தென வேற்றுமுனை வெம்மையின் வளையணி நெடுவேல் ஏந்திமிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரல் பாடும் கேளாய்செல்லாதீமோ!

அருஞ்சொற்பொருள்: எல் = கதிரவன்; எல்லின்று = ஒளிமங்கி மறைந்தது; பாடு = ஒலிபிடி = பெண்யானை; வேற்று முனை = பகைவரின் போர் முனை; சாத்து = வணிகர்களின் கூட்டம்; இறுத்தல் = தங்குதல்; மிளை = காடு; தண்ணுமை = ஒருவகைப் பறை.

உரை: சிறிய பெண்யானைக்குத் துணையாகிய களிறு போன்றவனே! கதிரவனும் ஒளி மங்கி மறைந்தான். வணிகர்கூட்டம் வந்து தங்கியதால், பகைவரது போர்முனை போன்ற கொடுமையுடன்,  வளையை அணிந்த கையில் நெடிய வேலை ஏந்தி, காவற்காட்டிடத்தே வருகின்ற ஆறலைக் கள்வர்களின் தண்ணுமை என்னும் பறையின் முழக்கத்தின் ஒலியைக் கேள்! ஆதலின், நீவிரிருவரும் அவ்வழிச் செல்லாதீர்கள்.


சிறப்புக் குறிப்பு:  பாலைநிலத்திற் செல்லும் வணிகர் கூட்டத்தை எதிர்த்து அவரது பொருளைக் கவர்வது பாலைநிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்களின் இயல்பு. 

389. தோழி கூற்று

389. தோழி கூற்று

பாடியவர்: வேட்ட கண்ணனார்.
திணை: குறிஞ்சி
கூற்று : தலைமகன் குற்றேவல் மகனால் வரைவுமலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. (வரைவு மலிதல் = திருமண முயற்சிகள் நடைபெறுவதை அறிதல்)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டதை அவனுடைய குற்றேவல் மகன் வழியாக அறிந்த தோழி, அக்குற்றேவல் மகனை  வாழ்த்துவது போல் அச்செய்தியைத் தலைவிக்கு அறிவிக்கிறாள்.

நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரைத் தோனே.

கொண்டு கூட்டு: தோழி! பெருங்கல் நாடன் வரைந்தென அவன்எதிர் நன்றோ மகனே?” என்றனென்.  ”நன்றே போலும் என்று உரைத்தோன், நெய்கனி குறும்பூழ் காயமாக ஆர்பதம் பெறுக!

அருஞ்சொற்பொருள்: கனிதல் = உருகுதல்; குறும்பூழ் = ஒருவகைப் பறவை (கௌதாரி); காயம் = குழம்பில் வெந்த கறித்துண்டு; ஆர்பதம் = உண்ணும் உணவு; அத்தை அசைநிலை; வரைந்து என = வரைய (திருமணம் செய்துகொள்ள) முயற்சி செய்கிறான் என; அவன் எதிர் = அவனுக்கு முன்; மகன் குற்றேவல் செய்பவன் (பணிவிடை செய்பவன் என்ற பொருளில் வந்தது.)


உரை: தோழி!  பெரிய மலைநாட்டையுடைய தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்று கேள்விப்பட்டேன். அவனுடைய  குற்றேவல்  மகனின் எதிர்நின்று, ”குற்றேவல் மகனே, திருமணத்திற்கான முயற்சிகள் நன்றாக  நடைபெறுகின்றனவா?” என்று கேட்டேன்அவன், ”அனைத்தும் நன்றாகவே நடைபெறுகின்றனஎன்று கூறினான். அவன், நெய்யில் நன்கு ஊறி வெந்த குறும்பூழ் இறைச்சியை உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!

Sunday, August 13, 2017

388. தோழி கூற்று

388. தோழி கூற்று

பாடியவர்: ஔவையார்.
திணை: பாலை.
கூற்று : தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன்,சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்துச் செலவு அழுங்கலுறுவானைத் தோழிஅழுங்காமற் கூறியது. (நேர்தல் = உடன்படல்; சுரம் = பாலைநில வழி; செலவழுங்கல் = பிரிதலைத் தவிர்த்தல்)
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு உடன்போவதற்குச் சம்மதித்தாள் என்ற செய்தியைத் தோழி தலைவனிடம் கூறினாள். பாலைநிலத்தின் கொடுமையையும் தலைவியின் மென்மையையும் எண்ணிப்பார்த்த தலைவன், தலைவியோடு உடன்போவதைத் தவிர்க்க விரும்புகிறான். தோழி, “ உம்மோடு சென்றால் தலைவிக்கு பாலைநிலமும் இனியதாகும்என்று கூறித் தலைவனை உடன்போக ஊக்குவிக்கிறாள்.

நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைமடித் துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே. 
கொண்டு கூட்டு: நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளைகோடை ஒற்றினும் வாடாதாகும்.
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து  ஒழுகைத் தோடு நிரைத்தன்ன,
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்யானை கை மடித்து உயவும் கானமும் இனியவாம் நும்மொடு வரின்

அருஞ்சொற்பொருள்: கால் = அடி; யாத்த = கட்டிய; ஒற்றுதல் = காற்று வீசுதல்; கவண் = கல்லை எறிவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி; பொருதல் = எருதின் கழுத்தைக் கயிறு அழுத்துதல்; அசாஅ = வருத்தும்; எருத்து = கழுத்து; உமண் = உமணர் (உப்பு வணிகர்); ஒழுகை = வண்டிகளின் வரிசை (இங்கு, உப்பு வண்டிகளின் வரிசையைக் குறிக்கிறது.); முளி = உலர்ந்த; சினை = கிளை; முன்பு = வலிமை; உயவும் = வருந்தும்.

உரை:  நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற,  வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலர்கள், மேல்காற்று வீசினாலும்,  வாடாமல் இருக்கும். கவணைப் போன்ற நுகத்தடி பூட்டப்பட்டாதால் வருந்தும், உப்புவணிகர்களின் எருதுகள்  இழுத்துச் செல்லும்  வண்டிகளை வரிசையைத் தொகுத்து  நிறுத்தினாற் போல், வழியிலுள்ள உலர்ந்த மரக்கிளைகளை, பிளத்தற்கு ஏற்ற  வலிமை இல்லாததால், யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற காடுகளும், உம்மோடு வந்தால், தலைவிக்கு இனியவையாகும்.


சிறப்புக் குறிப்பு: பலை நிலத்தில் இருந்த உலர்ந்த மரக்கிளைகளுக்கு உமணரது உப்பு வண்டிகள் உவமை. நீரில் இருக்கும் குவளை மலர்கள் கோடைக்காற்றிலும் வாடாமல் இருப்பது போல், தலைவனோடு இருந்தால் பாலைநிலத்திலும் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாள் என்று தோழி கூறுகிறாள். தலைவனோடு செல்லவில்லை என்றால், உலர்ந்த மரக்கிளைகளைப் பிளக்கும் வலிமை இல்லாமல் வருந்துகின்ற யானையைப் போல், தலைவனின் பிரிவைத் தாங்கும் வலிமை இல்லாமல்  தலைவி வருந்துவாள் என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

387. தலைவி கூற்று

387. தலைவி கூற்று

பாடியவர்: கங்குல் வெள்ளத்தார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்என்று வற்புறுத்துகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ தலைவனைப் பிரிந்திருப்பதால், மாலைக்காலம் எனக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டாலும், இரவு நேரம் மாலைநேரத்தைவிட அதிகமாக என்னை வருத்துகிறதுஎன்று கூறுகிறாள்.

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: தோழிவாழி! எல்லை கழிய, முல்லை மலரகதிர்சினந் தணிந்த கையறு மாலையும் இர வரம்பு ஆக நீந்தினமாயின்கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.
எவன் கொல்?

அருஞ்சொற்பொருள்: எல்லை = கதிரவன்; கையறுதல் = செயலற்று வருந்துதல்; இர = இரவு; கங்குல் = இரவு.

உரை: தோழி! பகல் நீங்க, முல்லைக் கொடிகள் மலர, கதிரவனின் வெப்பம் குறைந்த, செயலற்றுப் போகும்படியான மாலைக் காலத்தைக் கடல் என்று கருதிக் கடந்தாலும், அந்த மாலைக் காலத்தின் எல்லையாகிய இரவு ஆகிய வெள்ளம்  கடலைக் காட்டிலும் பெரியது.   நாம் என்ன செய்வது?


சிறப்புக் குறிப்பு: செயலற்று வருந்தும் மாலைக்காலத்தைக் கடலாகவும், மாலைக்காலம் முடிந்தபின் தொடங்கும் இரவு, அதைவிடப் பெரியகங்குல் வெள்ளம்என்றும் தலைவி கூறுகிறாள். காதலரைப் பிரிந்து வாழும் மகளிர்க்கு மாலைக்காலம் மிகுந்த துன்பத்தைத் தரும் காலம். மாலைக்குப் பின்னர் வரும் இரவில், உறங்காமல் வருந்துவதால், இரவில் தான் அடையும் துன்பம் மாலைக்காலத்தில் அடையும் துன்பத்தைவிட மிகப் பெரியது என்று தலைவி கூறுகிறாள்

386.தலைவி கூற்று

386.தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார்.
திணை: நெய்தல்.
கூற்று : பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால், தலைவி வருந்துகிறாள். “முன்பெல்லாம் நீ மாலைக்காலத்தில் இவ்வாறு வருந்தாமல் மகிழ்ச்சியோடு இருந்தாயே! இப்பொழுது என்ன ஆயிற்றுதலைவன் விரைவில் வந்துவிடுவான். நீ இவ்வாறு வருந்துவது சரியன்றுஎன்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு  மறுமொழியாகத் தலைவி, “மாலைக்காலம் இத்துணைத் துன்பத்தையும் தனிமையையும் தரும் என்பதைத் தலைவன் பிரிவதற்குமுன் நான் அறிந்திலேன். ” என்று கூறுகிறாள்.

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே
.

கொண்டு கூட்டு: வெண்மணல் விரிந்த வீ ததை கானல் தண் அம் துறைவன் தணவா ஊங்கு வாலிழை மகளிர் விழவுஅணிக் கூட்டும் மாலையோ அறிவேன். மன். மாலை,
நிலம் பரந்தன்ன புன்கணொடுபுலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.

அருஞ்சொற்பொருள்: வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக வந்தது.); ததை = பரவிய; கானல் = கடற்கரைச் சோலை; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; தணத்தல் = பிரிதல்; ஊங்கு = முன்பு; வால் = தூய்மை; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை.


உரை: தோழி! வெண்மையான மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய,  குளிர்ந்த கடற்றுறையையுடைய தலைவன்,  என்னைப் பிரிவதற்கு முன்பு, நான், தூய அணிகலன்களை அணிந்த மகளிர், விழவுக்குரிய அலங்காரங்களைச்  செய்துகொள்கின்ற மாலைக்காலத்தையே அறிந்திருந்தேன். இப்பொழுது, அது கழிந்தது! அம்மாலைக் காலம், நிலவுலகம் முழுதும் பரவியது போன்ற பெரியதுன்பத்தோடு, வருத்தத்தைத் தரும் தனிமையை உடையது என்பதை நான் அப்பொழுது அறியேன்.

385. தலைவி கூற்று

385. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வேற்று வரைவு மாற்றியது.
கூற்று விளக்கம்: புதியவர் தலைவியைப் பெண்கேட்க வந்தனர். அதை அறிந்த தலைவி, “தலைவன் என்மீது மாறாத அன்பு கொண்டவன். அவன் முதன்முதலில் என்னைச் சந்தித்த பொழுது எவ்வாறு அன்போடு இருந்தானோ, அதுபோல் இப்பொழுதும் அன்புடையவனாக இருக்கிறான். அவன் என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான். அதை அறியாத இவ்வூரில், புதியோர்  சிலர் என்னைப் பெண்கேட்க வந்துள்ளனர்என்று தோழியிடம் கூறிபுதிதாக வந்தவர்களின் திருமணத்திற்கான செயல்களைத் தடுக்க முயற்சி செய்கிறாள்.

பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்
பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. 
கொண்டு கூட்டு: பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக்கலை, சிலைவில்  கானவன் செந்தொடை வெரீஇசெருவுறு குதிரையின் பொங்கிச் சாரல் இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் அன்றை அன்ன நட்பினன். இவ் அழுங்கல் ஊர் புதுவோர்த்து.

அருஞ்சொற்பொருள்: ஆர்தல் = உண்ணுதல்; பல = பலா; கலை = ஆண்குரங்கு; கானவன் = வேட்டுவன்; சிலை = சிலைமரம்; தொடை = தொடுத்தல்; செந்தொடை = குறி தவறாது அம்பு தொடுத்தல்; வெரீஇ = அஞ்சி; செரு = போர்; சாரல் = மலைப்பக்கம்; இரு = பெரிய; வெதிர் = மூங்கில்; அமை = கோல்; தயங்க = அசைய; வரை = மலை; அடுக்கம் = பக்கம்; அழுங்கல் = ஆரவாரம்.

உரை: பலாமரத்திலிருந்த பழத்தை உண்ட ஆண் குரங்குகள், சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனது குறி தவறாத நல்ல அம்புக்கு அஞ்சி,  போர்க்களத்தை  அடைந்த குதிரைகளைப்  போலப் பொங்கி எழுந்து,  மலைச்சாரலிலுள்ள பெரிய மூங்கிலின் நீண்ட கோல் அசையும்படிப் பாயும், பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவன், எப்பொழுதும் அன்றிருந்ததைப் போல் மாறுபாடின்றி இருக்கும் நட்பையுடையவன். அவன் அவ்வாறு இருக்க, இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது, என் திருமணம் குறித்து வந்த புதியவர்களை உடையதாக உள்ளது.

386.தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார்.
திணை: நெய்தல்.
கூற்று : பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால், தலைவி வருந்துகிறாள். “முன்பெல்லாம் நீ மாலைக்காலத்தில் இவ்வாறு வருந்தாமல் மகிழ்ச்சியோடு இருந்தாயே! இப்பொழுது என்ன ஆயிற்றுதலைவன் விரைவில் வந்துவிடுவான். நீ இவ்வாறு வருந்துவது சரியன்றுஎன்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு  மறுமொழியாகத் தலைவி, “மாலைக்காலம் இத்துணைத் துன்பத்தையும் தனிமையையும் தரும் என்பதைத் தலைவன் பிரிவதற்குமுன் நான் அறிந்திலேன். ” என்று கூறுகிறாள்.

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே
.

கொண்டு கூட்டு: வெண்மணல் விரிந்த வீ ததை கானல் தண் அம் துறைவன் தணவா ஊங்கு வாலிழை மகளிர் விழவுஅணிக் கூட்டும் மாலையோ அறிவேன். மன். மாலை,
நிலம் பரந்தன்ன புன்கணொடுபுலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.

அருஞ்சொற்பொருள்: வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக வந்தது.); ததை = பரவிய; கானல் = கடற்கரைச் சோலை; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; தணத்தல் = பிரிதல்; ஊங்கு = முன்பு; வால் = தூய்மை; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை.


உரை: தோழி! வெண்மையான மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய,  குளிர்ந்த கடற்றுறையையுடைய தலைவன்,  என்னைப் பிரிவதற்கு முன்பு, நான், தூய அணிகலன்களை அணிந்த மகளிர், விழவுக்குரிய அலங்காரங்களைச்  செய்துகொள்கின்ற மாலைக்காலத்தையே அறிந்திருந்தேன். இப்பொழுது, அது கழிந்தது! அம்மாலைக் காலம், நிலவுலகம் முழுதும் பரவியது போன்ற பெரியதுன்பத்தோடு, வருத்தத்தைத் தரும் தனிமையை உடையது என்பதை நான் அப்பொழுது அறியேன்.

384. தோழி கூற்று

384. தோழி கூற்று

பாடியவர்: ஓரம்போகியார்.
திணை: மருதம்.
கூற்று : “நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளுறவு நன்றாயிருந்தது!என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன், தோழியிடம், “இனி நான் தலைவியைவிட்டுப் பிரிய மாட்டேன்என்று சூளுரைத்து, அவளைத் தனக்காகத் தலைவியிடம்  சென்று அவள் ஊடலைத் தணிக்குமாறு  வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு மறுமொழியாக, ”உன் சூள் பொய்யானதுஎன்று கூறித் தோழி, தலைவனின் வேண்டுகோளை மறுக்கிறாள்.  

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. 

கொண்டு கூட்டு: மகிழ்ந! உழுந்து உடைக் கழுந்தின், கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர் நலன் உண்டு, துறத்தி ஆயின் நின் சூள் மிக நன்று

அருஞ்சொற்பொருள்: உழுந்து = உளுந்து; கழுந்து = உலக்கையின் முனை; பணை = பருமைசூள் = சபதம் (உறுதி மொழி); அம்மஅசைச்சொல்.

உரை: மருத நிலத்தலைவ! உழுத்தங்காயை அடித்தற்குரிய உலக்கையின் முனையைப் போன்றதும், கரும்பின் படம் வரையப்பட்டதுமான  பருத்த தோளையும், நீண்ட நிறைந்த கூந்தலையும், குறுகிய  வளையல்களையும் உடைய பரத்தையரின், பெண்மைநலத்தை நுகர்ந்து, அவர்களைத் துறந்து இங்கு வருவாயாயின், நீ அவர்களுக்கு  அளித்த உறுதிமொழி  மிக நன்றாக இருந்தது!

சிறப்புக் குறிப்பு: உழுந்தை இடிக்கும் உலக்கையின் முனை தேய்ந்து வழுவழுப்பாகவும் பருத்ததாகவும் இருப்பதால், அது தோளுக்கு உவமையாகக் கூறப்பட்டது. காமனது வில்லாகிய கரும்பின் உருவத்தைக் குங்குமக் குழம்பால் மகளிர் தோளில் எழுதுதல் வழக்கம் என்று உ.வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.  மகளிர்என்று பன்மையில் கூறியது தலைவன் பரத்தையர் பலரோடு அன்புடையவன் என்பதைக் குறிக்கிறது. தலைவன் பல பரத்தையரோடு கூடி மகிழ்ந்தவன் என்று தோழி கருதுவதால், அவள் அவனுக்காகத் தலைவியிடம் சென்று பேச மறுக்கிறாள்மற்றும், தலைவன் பரத்தையரோடு இருந்த பொழுது, அவர்களைவிட்டு பிரியாமல் இருப்பதாக அவர்களிடம் சூளுரைத்து, இப்பொழுது அவர்களைத் துறந்து, தலைவியை நாடி வந்துள்ளான். அதனால், “ மிகநன்று அம்ம மகிழ்ந நின் சூள்என்று தோழி அவனை எள்ளி நகையாடுகிறாள்.