Monday, August 17, 2015

71. பாலை - தலைவன் கூற்று

71. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்: கருவூர் ஓதஞானியார்.  இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. குறுந்தொகையின் 227 – ஆம் பாடலை இயற்றியவரின் பெயரும் ஓதஞானி என்பதுதான். ஆனால், அவர் வேறு; இந்தப் பாடலை இயற்றியவர் வேறு என்று கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலையில் உள்ளான். அவள் அவனுடைய காமநோய்க்கு மருந்தாகவும், பெருஞ்செல்வம் போலவும் இருப்பதால், அவளைவிட்டுப் பிரிய முடியாமல் தவிக்கிறான். ஆகவே, பிரிவதைத் தவிர்க்கலாமா என்று சிந்திக்கிறான். இப்பாடல் அவனுடைய மனக்கலக்கத்தைச் சித்திரிக்கிறது.

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

அருஞ்சொற்பொருள்: வைப்பு = செல்வம்; அரும்புதல் = தோன்றுதல்; சுணங்கு = தேமல் ; அம் = அழகிய; பகடு = பெருமை; நுணுகிய = சிறிய; நுசுப்பு = இடை; கல் = மலை; கெழு = பொருந்திய; கானவர் = முல்லைநில மக்கள்; குறுமகள் = இளம்பெண் (இங்கு, தலைவியைக் குறிக்கிறது.)
உரை: நெஞ்சே, தேமல்கள் தோன்றிய, அழகிய, பெருமையையுடைய இளைய முலைகளையும், பெரிய தோளையும், சிறிய இடையையும் உடைய இந்தப் பெண், மலைகள் பொருந்திய காடுகளுக்கு உரியவர்  பெற்ற மகள். அவள் என்னுடைய காமநோய்க்கு மருந்து வேண்டுமென்று நான் கருதும் பொழுது எனக்கு மருந்தாகவும், செல்வம் வேண்டுமென்று நான் கருதும் பொழுது எனக்குச் செல்வம் போன்றவளாகவும்  இருக்கிறாள்.

விளக்கம்: .அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்புஎன்றது  தேமலுடன் கூடிய முலைகளும், பெரிய தோளும், சிறிய இடையும் மகளிர்க்கு அழகாகக் கருதப்பட்டன என்பதைக் குறிக்கிறது. இவளைப் பிரிந்தால் காமநோய்க்கு மருந்தில்லை என்றும், தான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வம் போன்றவள் இவளேயாதலின், இவளைப் பிரிந்து செல்லுதலை தவிர்க்கலாமா என்றும் தலைவன் கருதுவதாகத் தோன்றுகிறது,      

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தனே மருந்து.                                                         (குறள் – 1102)

என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.


மகாகவி பாரதியார் கண்ணனைத் தன் காதலியாகக் கற்பனை செய்து பாடிய பாடல் ஒன்றில், ”செல்வமடி நீயெனக்கு, சேமநிதி நானுனக்குஎன்று பாடியிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

70. குறிஞ்சி - தலைவன் கூற்று

70. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: ஓரம்போகியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 10-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவளைப் பிரிந்து தன் இல்லத்திற்குச் செல்கிறான். செல்லும் வழியில், தலைவியின் அழகு, இளமை, மென்மை ஆகியவற்றை எண்ணிப்பார்த்து அவன் மகிழ்கிறான். தலைவியை எப்படிப் புகழ்வது என்று தெரியாமல் மீண்டும் அவளால் அவன் பெற்ற இன்பத்தை நினைத்துத் தனக்குத்தானே அவன் பேசிக்கொள்கிறான்,

ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. 

அருஞ்சொற்பொருள்: ஒடுங்கல் = செறிதல்; ஈர் = எண்ணெய் தடவிய;  ஓதி = கூந்தல்; ஒள் = ஒளி; நுதல் = நெற்றி; ஒண்ணுதல் = ஒள்+நுதல் = ஒளிபொருந்திய நெற்றி; குறுமகள் = இளம்பெண் (இங்கு, தலைவியைக் குறிக்கிறது); நறு = மணம் பொருந்திய; தண் = குளிர்ச்சி; நீர் = தன்மை; ஆர் = அருமை; அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்; இனையள் = இத்தகையவள்; புனைதல் = பாராட்டுதல்; கிளவி = சொற்கள் (பேச்சு); அணை = தலையணை, பஞ்சு மெத்தை; மெல்லியள் = மென்மையானவள்; முயங்குதல் = தழுவுதல்; கால் = பொழுது.

உரை: நெஞ்சே, அடர்த்தியான, எண்ணெய் தடவி வாரப்பட்ட கூந்தலையும், ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, மணத்தையும் குளிர்ச்சியும் உடையவள்.  ஆயினும், பிரிந்தகாலத்துப் அவள் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள். அவளை, இத்தகையவள் என்று எப்படிப் புகழ்வது என்பதை நான் அறியேன். அவள் அதிகமாகப் பேசாதவள். ஆனால் அவள் கூறும் சொற்கள் மென்மையானவை. நான் அவளைத் தழுவும் பொழுது அவள் ஒருபஞ்சணையைபோல் மென்மையானவள்.

விளக்கம்: சங்க காலத்தில், பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்துவகையாக அலங்கரித்துக் கொண்டதாகவும், அந்த ஐந்து வகைகள் கொண்டை, சுருள் (அல்லது சுருளை), குழல், பனிச்சை, வார்மயிர் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இப்பாடலில், ”ஒடுங்கு ஈர் ஓதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை என்பதைக் குறிக்கிறது.

 ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதற் குறுமகள்என்றதால் கண்ணுக்கு இன்பமும், ”சில மெல்லியவே கிளவிஎன்றதால் செவிக்கு இன்பமும், ”அணை மெல்லியள்என்றதால் உடலுக்கு இன்பமும், “ நறுந்தண்ணீரள்என்றதால் மூக்குக்கு  இன்பமும், தலைவியிடம் தான் பெறுவதைத் தலைவன் கூறுவதாகவும், ”யான் முயங்குங்கால்என்றதால் சுவை இன்பமும் பெறுவதைக் குறிப்பால் உணர்த்தியதாகவும் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இங்கு,

            கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
            ஒண்டொடி கண்ணே உள.                          (குறள் – 1101)


என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது

69. குறிஞ்சி - தோழி கூற்று

69. குறிஞ்சி - தோழி கூற்று 

பாடியவர்: கடுந்தோட் கரவீரனார். கரவீரம் என்பது சோழ நாட்டில் திருவாரூருக்கு அருகில் உள்ள ஓரூர். இவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காணவருவதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. இரவு நேரத்தில் வந்தால், அவனுக்கு எதாவது தீங்கு வருமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஒருநாள் இரவு தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அப்பொழுது, “’ இனி, நீ இரவில் வரவேண்டாம். இவ்வாறு களவொழுக்கத்தில் உங்கள் காதலைத் தொடர்வதைவிட, நீ தலைவியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது.” என்று தலைவனிடம் தோழி  மறைமுகமாகக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. 

அருஞ்சொற்பொருள்: கருங்கண் = கருமை நிறமான கண்கள்; தா = தாவுதல்; கலை = கரிய ஆண்குரங்கு; பெரும்பிறிது = இறப்பு; கைம்மை = கணவனை இழந்த நிலைமை; உய்யா = தாங்கிக்கொள்ள முடியாத; காமர் = விருப்பம்; மந்தி = பெண்குரங்கு; கல்லா = பயிற்சி இல்லாத; வன் = வலிய; பறழ் = குட்டி ; கிளை = உறவு; அடுக்கம் = பக்க மலை; செகுத்தல் = கொல்லுதல்; சாரல் = மலைச்சாரல்; நடுநாள் = நள்ளிரவு; வாரல் = வருவதைத் தவிர்.

உரை: கருமை நிறமுள்ள கண்களையும், தாவும் இயல்பையும் உடைய ஆண்குரங்கு இறந்ததால், கைம்மைத் துன்பத்தைத் தாங்கமுடியாத, அந்த ஆண்குரங்கின் துணையாகிய பெண்குரங்கு, தன்னுடைய தொழிலில் (மரமேறுவது போன்ற தொழில்களில்) பயிற்சி இல்லாத தன்னுடைய வலிய குட்டியை, சுற்றம் ஆகிய குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த மலைப்பக்கத்திலிருந்து தாவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! இனி, நீ நள்ளிரவில் வரவேண்டாம். நீ நள்ளிரவில் வந்தால் உனக்குத் தீங்குண்டாகும் என்றெண்ணி நாங்கள் வருந்துவோம். நீ நீடூழி வாழ்வாயாக!

விளக்கம்: ”இரவில் வருவதால் உனக்குத் தீங்கு வரலாம். அவ்வாறு உனக்குத் தீங்கு நேர்ந்தால் தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே, நீ இரவில் வந்து களவொழுக்கத்தைத் தொடர்வதை நிறுத்திவிட்டு, முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.

ஆண்குரங்கு இறந்ததால், கைம்மையுடன் வாழ விரும்பாத பெண்குரங்கு, தன் உயிரைப் போக்கிகொண்டதைப்போல், நீ நள்ளிரவில் வரும்பொழுது புலி, யானை, பாம்பு முதலிய விலங்குகளின் கொடுமையால் நீ இறக்க நேர்ந்தால், தலைவியும் உன்னைப்பிரிந்து வாழ விரும்பாமல் இறந்துவிடுவாள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

உள்ளுறை உவமத்திற்கு அப்பால் இன்னொரு செய்தியும் இப்பாடலில் உள்ளது. ”தலைவ! உன் நாட்டில் அஃறிணைப் பொருளாகிய  பெண்குரங்குகூடத் தன் துணையாகிய ஆண்குரங்கு இறந்தவுடன் தான் உயிர் வாழாமல் இறக்குமெனின், எம் தலைவி மட்டும் உன்னைப் பிரிந்து எப்படி வாழ்வாள்? அவளுடைய உணர்ச்சியை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்று தோழி மறைமுகமாகக் கேட்பதாகவும் தோன்றுகிறது. இவ்வாறு, ஒரு பாடலில் உள்ளுறை உவமத்திற்கு அப்பாலும் ஒருபொருள் இருக்குமானால் அஃது இலக்கணத்தில்இறைச்சிஎன்று அழைக்கப்படுகிறது. பெரும்பான்மைத் தலைவனின் கொடுமையைக் கூறும் இடங்களிலும், சிறுபான்மை அன்பை உரைக்கும் இடங்களிலும் புலவர்கள் அகத்திணைப் பாடல்களில் இறைச்சியை பயன்படுத்துவது வழக்கம்.  

68. குறிஞ்சி - தலைவி கூற்று

68. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முன்பனிக்காலம் வந்துவிட்டது. பிரிந்துசென்ற தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி, மிகவும் வருத்தத்தோடு இருக்கிறாள். அப்பொழுது, தலைவியின் தோழி அங்கே வருகிறாள். தலைவி, “ முன்பனிக்காலமும் வந்துவிட்டது. ஆனால், இன்னும் அவர் வரவில்லை. என்னுடைய வருத்தத்தைத் தீர்க்கும் மருந்து என் தலைவனின் மார்புதான்.” என்று கூறுகிறாள்.

பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே. 
-.
அருஞ்சொற்பொருள்: பூழ் = காடை (அல்லது கானங்கோழி) செங்கால் = சிவந்த கால்; உழுந்து = உளுந்து; ஊழ்த்தல் = முதிர்தல்; உழை =  மான்; இனம் = கூட்டம்; கவர்தல் = விரும்புதல்; அற்சிரம் = அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்); மணத்தல் = கூடுதல்.                                                                                                       

உரை: காடைப்பறவையின் காலைப் போன்ற, சிவந்த காலையுடைய உளுந்தினுடைய, மிகவும் முதிர்ந்த காய்களை, மான்கூட்டங்கள் தின்னும் பொறுத்தற்கரிய பனியையுடைய, முன்பனிக்காலத்தால் எனக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து என்னைத் தழுவிய அவருடைய மார்பைத்தவிர வேறு இல்லை.


விளக்கம்: உளுந்து, பயறு போன்றவை முன்பனிக்காலத்தில் முதிரும் பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ”மான்கள்கூடத்  தாம் விரும்பியதை உண்டு  தங்கள் கூட்டத்தோடு இன்பமாக இருக்கும் இந்த முன்பனிக்காலத்தில் நான் மட்டும் தலைவனைப் பிரிந்து வருத்தத்தோடு தனியளாக இருக்கிறேனே !” என்று தலைவி மறைமுகமாகக் கூறுவது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்

Monday, August 3, 2015

67. பாலை - தலைவி கூற்று

67. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தோழியை நோக்கி, “ பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினைப்பாரோ? அவருக்கு நம்மைப் பற்றிய  நினைவு இருந்தால், இந்நேரம் திரும்பி வந்திருப்பாரே!” என்று கூறுகிறாள்

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 
-.
அருஞ்சொற்பொருள்: கிள்ளை = கிளி; ஒண்பழம் = ஒளி பொருந்திய பழம்; நுதி = நுனி; வள் = கூர்மை; உகிர் = நகம்; பொலம் = பொன்; ஏய்த்தல் = ஒத்தல்; கரி = கரிந்தது; அம்ஒரு சாரியை; இறத்தல் = கடத்தல்.

உரை: தோழி, கிளி தன்வளைந்த அலகினிடத்திலே கொண்ட ஓளி பொருந்திய  வேப்பம்பழமானது, புதிய பொற்கம்பியை உள்ளே செலுத்தும் பொற்கொல்லனுடைய,   கூரிய கைந்நகத்திற் கொண்ட  பொன்மாலைக்கான ஒரு காசுபோல் உள்ளது.  அத்தகைய வேப்பமரம் உள்ள, வெய்யிலால் சுட்டெரிக்கப்பட்ட கருமையான, கள்ளிச்செடிகளையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?


விளக்கம்: கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். இப்பாடலிலிருந்தும், நற்றிணையின்  274 – ஆம் பாடலிலிருந்தும், குறுந்தொகையின் 148 – ஆம் பாடலிலிருந்தும் சங்க காலத்தில் சில காசுகள் வேப்பம்பழம்போல் உருண்டையாக இருந்தன என்று தெரியவருவதாக உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

66. முல்லை - தோழி கூற்று

66. முல்லை - தோழி கூற்று 

பாடியவர்: கோவதத்தர்.  இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்கள் (66, 194) இயற்றியுள்ளார். இவர் பெயர் கோவர்த்தனார் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழை.  இதைக் கார்காலத்து மழை என்று மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. இது கார்காலம் அன்று. நீ வருந்தாதே." என்று தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே. 

 அருஞ்சொற்பொருள்: மடவ = மடமையுடைய; மன்ற = உறுதியாக; தடவு = பெருமை; தடவு நிலை= பருத்த அடிப்பக்கம்; பிறங்குதல் = விளங்குதல்; அத்தம் = வழி; அளவை = அளவு; நெரிதர = நெருங்கும்படி; ஊழ்த்தல்  = மலர்தல் ; வம்ப மாரி = காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை ; மதித்தல் = கருதுதல்.

உரை: கற்கள் விளங்கும் பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட கார்காலம் வாராத காலத்திலேயே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் காலத்து மழையென்று நினைத்து, கொன்றை மரத்தின்  சிறு கொம்புகளில் ஒழுங்காக நெருக்காமாகக் கொன்றை மலர்கள் மலர ஆரம்பித்துவிட்டன. ஆதலின், பருத்த அடிப்பக்கத்தையுடைய கொன்றை மரங்கள், நிச்சயமாக மடமை பொருந்தியவைதான்.

விளக்கம்: கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களைக் குறிக்கிறது. மனைவியைவிட்டு பிரிந்து சென்ற கணவன்மார் கார்காலத்தில் வீடு திரும்புவது  வழக்கம். கார்காலத்தில் மலரும் மரங்களில் கொன்றை மரமும் ஒன்று.

65. முல்லை - தலைவி கூற்று

65. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: கோவூர்கிழார். இவர் கோவூரைச் சார்ந்தவர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களையும் (31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386, 400), நற்றிணையில் ஒருபாடலையும் (393), குறுந்தொகையில் ஒருபாடலையும் (65)  இயற்றியவர்.          சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்பதுங் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்திஎன்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறநானூறு- 45).  பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான்.  அவ்வமயம், “அறவை யாயின்,’நினதுஎனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.என்று அறிவுரை கூறினார்.  மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான்.  அப்போது, புலவர் கோவூர் கிழார், ‘இளந்தத்தன் ஒற்றர் அல்லர்; அவர் ஒரு புலவர்என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறநானூறு - 47).  சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறநானூறு - 46).  புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், கார்காலம் வந்த பிறகும் தலைவன் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. உன் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால், நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயே!” என்று கார்காலம் தன்னைக் கேட்பதாகத் தலைவி தோழியிடம் கூறித் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள்.

வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 
-.
அருஞ்சொற்பொருள்: வன் = வலிய; பரல் = பருக்கைக் கல்; தெள் = தெளிந்த; அறல் = நீர்; பருகிய = குடித்த; இரலை = ஆண்மான்; மறுவரல் = சுழற்சி, மயக்கம்; உகளுதல் = தாவுதல், பாய்தல்; தளி = மழைத்துளி; தண் = குளிர்ந்த; வரல் = வருவதை; நசைஇ = விரும்பி.

உரை: தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான்,  இன்பத்தை நுகர்வதற்காகத் தன்னுடைய துணையாகிய பெண்மானோடு, மகிழ்ச்சியுடன் சுழன்று துள்ளி விளையாடுகிறது.  இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டும் வருவதை விரும்பி, மிகவருந்திக் காத்திருக்கும் பொருட்டு, உயிரை வைத்துக் கொண்டிருகிறாயோ என்று கேட்பதற்காக, மழைத்துளியைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம் வந்திருக்கிறது.


விளக்கம்: கார் காலத்தில் மான் தன் துணையோடு மகிழ்ந்து விளையாடி இன்பம் நுகர்வதாக முல்லைப்பாட்டு, அகநாநூறு ஆகிய இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுவதாக உவே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார். ஆகவே, இங்கு, மான்கள் இன்பம் நுகர்வதாகக் குறிப்பிட்டிருப்பது கார் காலம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. கார்காலம் வந்த பிறகும் தலைவன் வராமல் இருப்பதால் தான் உயிரோடு இருப்பது தவறு என்று தலைவி எண்னுவதாகத் தோன்றுகிறது. மற்றும், மான்கள் தங்கள் துணையோடு மகிழ்ச்சியாக இருக்கும் இந்தக் கார்காலத்தில் நான் மட்டும் என் தலைவனைவிட்டுப் பிரிந்திருக்கிறேனே என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்.