Sunday, July 17, 2016

217. தோழி கூற்று

217. தோழி கூற்று

பாடியவர்: தங்கால் முடக்கொல்லனார். தங்கால் என்பது விருதுநகருக்கு அருகிலுள்ள ஓரூர்இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால்என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவரின் பெயர் புறநானூற்றில் தங்கால் பொற்கொல்லன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அகநூல்களில் இவர்பெயர் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்றும் தங்கால் முடக்கொல்லனார் என்றும் காணப்படுகிறது. இவர் புறநானூற்றில் ஒருபாடலும் (326), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (48, 108, 355), நற்றிணையில் ஒருபாடலும் (313), குறுந்தொகையில் ஒரு பாடலும் (217) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: உடன்போக்கு நயப்பத் (நயத்தல் = விரும்புதல்) தோழி தலைமகட்கு க் கூறியது.
கூற்று விளக்கம்: பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிப் பெருமூச்சுவிட்டான்; அவனுடைய எண்ணம் சரியானதுதான் என்று  நான் கூறினேன்என்று தோழி தலைவியிடம் கூறி, அவள் உடன்போக்கை மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கிறாள்.

 தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. 

கொண்டு கூட்டு: தினைகிளி கடிக எனில் பகலும் ஒல்லும்இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; எம் இடும்பை நோய்க்கு   யாங்குச் செய்வாம் என, ஆங்கியான் கூறிய அனைத்திற்கு, ஓங்குமலை நாடன் பிறிது செத்து, உயிர்த்தோன் மன்றகாமம் ஐது. யான்  கழிமுதுக் குறைமையும் பழியும் என்றிசின்.

அருஞ்சொற்பொருள்: கடிதல் = வெருட்டுதல்; ஒல்லும் = இயலும்; ஊறு = துன்பம்; அஞ்சுவல் = அஞ்சுகிறேன்; இடும்பை = துன்பம்; செத்து = நினைத்து; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்; ஐது = நுண்ணியது; கழி = மிகுந்த; முது = பேறறிவு; முதுக்குறை = பேறறிவுடைமை; என்றிசின் = என்றேன்.

உரை:தினைப்புனத்திற்குச் சென்று கிளிகளை வெருட்டுகஎன்று தாய் சொன்னால், பகலில் உன்னைச் சந்திக்க இயலும். ஆனால், தாய் அவ்வாறு சொல்லவில்லை. நீ இனி இரவில் வரலாம் என்றால், நீ வரும் வழியில் உனக்கு நேரக்கூடிய துன்பங்களுக்காக நான் அஞ்சுகிறேன். துன்பத்தைத் தரும் எமது நோயைத் தீர்ப்பதற்கு , என்ன செய்யலாம்?” என்று நான் தலைவனைக் கேட்டேன். நான் அவ்வாறு கூறியதற்கு, உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன், வேறு ஒன்றை நினைத்து, அந்நினைவினால் பெருமூச்சு விட்டான். நிச்சயமாக, காமநோய் நுட்பமானது. அவனது குறிப்பை உணர்ந்த நான், ”நீ நினைத்தவாறு செய்வது மிகுந்த அறிவுடைய செயல்தான். ஆனால் அது பழிக்கும் காரணம் ஆகும்என்றேன்.

சிறப்புக் குறிப்பு: தோழி, “எம் நோய்என்றது, தலைவி துன்புறுவது கண்டு தானும் துன்புறுவதைக் குறிக்கிறது.


தலைவன் பிறிதொன்றை நினைத்துப் பெருமூச்சு விட்டான் என்பது, அவன் உடன்போக்கைப் பற்றியும் அதனால் வரும் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பெருமூச்சு விட்டான் என்பதைக் குறிக்கிறது. அதை அறிந்த தோழி, “ அவ்வாறு செய்தலே மிகுந்த அறிவுடைய செயல். ஆனால், அவ்வாறு செவதால் பழி வரும்.” என்று தலைவனிடம் கூறுகிறாள். பழி வந்தாலும் அறிவுடைய செயலைச் செய்வதற்குத் தயங்கக் கூடாது என்று நினைத்த தோழிதலைவனின் கருத்தை ஆமோதிக்கிறாள். தலைவியையும்  உடன்போக்குக்கு உடன்படுமாறு தோழி ஊக்குவிக்கிறாள்

216. தலைவி கூற்று

216.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 213 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பருவ வரவின்கண்ஆற்றாள்எனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததால் தலைவி ஆற்றாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும் வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவி கூறியது.

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே. 

கொண்டு கூட்டு:
தோழி! அவர், கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசுஇலை
வாடா வள்ளியங் காடு இறந்தோர்யான், தோடு ஆர் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசின்.  மாமழை அன்னள் அளியள் என்னாது,
என் இன்னுயிர் குறித்தே. இன்னும் பெய்ய முழங்கி மின்னும்.

அருஞ்சொற்பொருள்: விழுப்பொருள் = சிறந்த செல்வம்; தோடு = தொகுதி; ஆர் = அழகிய; எல் = ஒளி; பாடு = தூக்கம்; கூர்தல் = மிகுதல்; மா = கரிய; மழை = மேகம்.


உரை: தோழி! அத் தலைவர், கேடில்லாத சிறந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்காக, பசுமையான இலைகளையுடைய, வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்.  நான் அணிந்திருந்த வளையல்கள் தொகுதியாக, அழகாகாக , ஒளிபொருந்தியனவாக இருந்தன. அவை இப்பொழுது நெகிழும்படி, கவலையுற்று, உறங்குவதற்குரிய படுக்கையில் வீழ்ந்து, மிகுந்த துன்பமுறுகிறேன். நான் அத்தகையதுன்பத்தை உடையவள்; இரங்கத் தக்கவள்என்று எண்ணாமல், கரிய மேகம் இன்னும் மழையைப் பெய்யும் பொருட்டு இடியிடித்து முழக்கம் செய்து, எனது இனிய உயிரைக் கொல்லக் குறிக்கொண்டு மின்னுகிறது.

215. தோழி கூற்று

215.  தோழி கூற்று

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறதுஇவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பாடியனவாக அகநானூற்றில் ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (188, 215), நற்றிணையில் மூன்று பாடல்களும் (82, 297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் (388) காணப்படுகின்றன. அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில் உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார் என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்என்று தோழி உறுதி கூறுகிறாள்.

படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
என்றூழ் மாமலை மறையும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நீரில்
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்
கொடுவரி இரும்புலி காக்கும்
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நீர்இல் வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக் கொடுவரி இருபுலி காக்கும் நெடுவரை மருங்கில் சுரன் இறந்தோர் சுடரும் என்றூழ் மாலை மறையும் இன்று  அவர் வருவர்! படரும் பைப்பயப் பெயரும்!

அருஞ்சொற்பொருள்: படர் = துன்பம்; பைபய = மெல்ல மெல்ல (பையப்பைய என்பது திரிந்து பைபய என்று வந்தது); என்றூழ் = ஞாயிறு; கயம் = குளம்; துழைஇய = துழாவிய; துழாவல் = கிளறுதல்; இலங்குதல் = விளங்குதல்; மருப்பு = கொம்பு (தந்தம்); பொறை = பாறை; மருங்கு = பக்கம்; அமர்தல் = விரும்புதல்; தழீஇ = தழுவி; கொடு = வளைந்த; வரி = கோடு; இரு = பெரிய; சுரன் = பாலை நிலம்; இறந்தோர் = கடந்து சென்றவர்; கொல்அசைநிலை.

உரை: தோழி! நீ வாழ்க! நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளையுடைய ஆண்யானைகள், சிறிய பாறைகளின் அருகில், தாம் விரும்புகின்ற, தம்முடைய துணையாகிய பெண்யானைகளைத் தழுவி, வளைந்த கோடுகளையுடைய பெரிய புலியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்ற, உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, அத் தலைவர், ஒளியுடன் விளங்குகின்ற ஞாயிறு, பெரிய மலையில் மறைகின்ற மாலை நேரத்தில் இன்று வருவார்! உன் துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்.


சிறப்புக் குறிப்பு: ஆண்யானைகள் தம் பெண்யானைகளைப் பாதுகாப்பதைப் பார்த்த தலைவரின் உள்ளம் கனியும். தலைவிமீது உள்ள காதல் அவரை விரைவில் திரும்பிவரச் செய்யும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.

214. தோழி கூற்று

214. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்ட விடத்து அறத்தொடுநின்றது.
கூற்று விளக்கம்: தலைவி உடல் மெலிந்து வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட  தலைவியின் தாய் முதலியோர் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதைக் கண்ட தோழி,  “இவளுக்குத் தழையுடை கொடுத்து அன்பு செய்தவன் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியாட்டு நடத்துவதால் பயனில்லை” என்று கூறித் தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள்.

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு:
மரங்கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும், புறந்தாழ் அம் சில் ஓதி அசையியல் கொடிச்சி திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயலது அரலை மாலை சூட்டி
இவ் அழுங்கல் ஊர் ஏம் உற்றன்று.

அருஞ்சொற்பொருள்: மரம் கொல்லுதல் = மரத்தை வேரோடு அழித்தல்; கானவன் = குறிஞ்சி நிலத்து மகன் (குறவன்); புனம் = கொல்லை; துளர்ந்து = உழுது; பிறங்குதல் = விளங்குதல்; குரல் = கதிர்; இறடி = தினை; புறம் = முதுகு; அம் = அழகிய; சில் = சிலவாகிய; ஓதி = பெண்ணின் கூந்தல்; அசைதல் = மெலிதல், இளைத்தல்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண்; இழை = அணி (இங்கு மேகலையைக் குறிக்கிறது); அல்குல் = இடை; செயலை = அசோக மரம்; முழுமுதல் = மரத்தின் அடிப்பக்கம்; அரலை = அரளி; ஏமம் = மயக்கம் (ஏம் என்பது ஏமம் என்பதின் திரிபு); அழுங்கல் = ஆரவாரம்.

உரை: மரங்களை வெட்டிய குறவன், கொல்லையை உழுது விளைத்த, விளங்குகின்ற கதிர்களையுடைய தினையைக் காவல் செய்யும், முதுகில் தாழ்ந்த, அழகிய சிலவாகிய கூந்தலையும், அசைந்து நடக்கும் இயல்பையும் உடைய தலைவியின் சிறந்த ஆபரணங்களை அணிந்த இடைக்குத் தகுந்த, பெரிய தழையாலாகிய ஆடையைத் தலைவன் அளித்ததால், அசோக மரத்தின் பெருத்த அடி மரம் தழைகள் இல்லாமல் இருந்தது. அதன் பக்கத்திலே இருந்த அரளி மலர்களைப் பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து, (முருகன் வாழ்வதாகக் கருதப்படும்) கடம்ப மரத்திற்குச் சூட்டி, வெறியாட்டு நடத்தும் ஆரவாரத்தை உடைய இந்த ஊர் மயக்கமுற்றது.


சிறப்புக் குறிப்பு: தலைவன் தலைவிக்குத் தழையாடை தருவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. தலைவன் தழையாடை செய்வதற்காக, அசோகமரத்தின் அடிப்பக்கத்தில் இருந்த இலைகளைப் பறித்ததால், “செயலை முழுமுதல் ஒழியஎன்று கூறப்பட்டது.

Sunday, June 26, 2016

213. தோழி கூற்று

213. தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.  கச்சிப்பேடு என்பது காஞ்சிபுரத்துக்கு அருகே இருந்த ஓரூர். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் இரண்டு பாடல்கள் ( 213, 216)  உள்ளன.
திணை: பாலை.
கூற்று: நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. (இடைநின்று மீள்வர்பணியை முடிக்காமல் தலைவியை நினைத்து இடைவழியில் திரும்பி வருதல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் மீது மிகுந்த விருப்பம் உடையவன். ஆனால், அவன்  பொருள் தேடுவதற்காக அவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுக்க முடியாமல், தலைவைன் பொருள் தேடும் பணியை இடையிலே நிறுத்திவிட்டு  திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி நினைக்கிறாள். “தலைவன் தன் கடமையை நன்கு அறிந்தவன். ஆகவே, தலைவன் தன் பணியை முடித்து, விரும்பிய பொருளைப் பெற்ற பிறகுதான் திரும்புவான்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! நசை நன்கு உடையர். நம் இன்துயில் முனிநர் சென்ற ஆறு ஞெரேரெனக் கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிபசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் ஒழியின் உண்டு, வழுஇல் நெஞ்சின்தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி நின்று வெயில் கழிக்கும் என்ப!

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம்; ஞெரல் = விரைவு; ஞெரேரென = ஞெரேர் +என = விரைவாக; கவை = கிளை; கலை = ஆண்மான்; ஒற்றுதல் = தள்ளுதல் (உதைத்து வீழ்த்துதல்); இறைஞ்சுதல் = வளைதல்; ததரல் = சிதைந்த பட்டை; ஒழியின் = மிஞ்சினால்; வழு = குற்றம்; தெறித்தல் = துள்ளுதல்; மறி = ஆடு, குதிரை, மான் ஆகியவற்றின் குட்டி; முனிநர் = வெறுத்தவர்; ஆறு = வழி.

உரை: தோழி, தலைவர் உன்னிடம் மிகுந்த  விருப்பம்  உடையவர்; ஆயினும், உன்னோடு உறங்கும் இனிய உறக்கத்தை வெறுத்து அவர் பிரிந்து சென்றார். அவர் போன வழியில், கிளை போன்ற கொம்பை உடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான், விரைவாகக் காலால் உதைத்துப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த, பருத்த பெரிய மரப் பட்டையை தனது குட்டி உண்டபின், எஞ்சினால் தான் அதை உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினையுடைய,  தனது குட்டிக்கு நிழலாகி, நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.

சிறப்புக் குறிப்பு:   வழு என்பது  அறத்தின் நீங்கிய செயலைக் குறிக்கிறதுதன் குட்டி பசித்திருக்கத்  தான் உண்பதும், அது வெயிலால் வாடத் தான் ஓடுவதும் அறத்தின் நீங்கிய செயலாதலால் அவை வழுவாகும்.  தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயிலின் வெம்மையைக் கருதாமல் தன் குட்டிக்கு நிழலாக இருந்து தன் கடமையைப் புரிந்ததால் ஆண்மான் வழுவில்லாத நெஞ்சுடையது என்ற கூறப்பட்டது.
தலைவர் சென்ற வழியில், தன்னலம் கருதாது தன் குட்டியின் நலத்தைப் பேணுவதைத் தன் கடமையாகக் கொண்ட ஆண்மானைக் காண்பார். அந்த ஆண்மானைப் போலத் தம் விருப்பத்தை மட்டும் கருதாது தமக்கு இல்லறத்தில் உள்ள கடமையை நினைத்து அதற்கு உரிய பொருளைத் தேடிய பிறகுதான் திரும்பி வருவார் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.

இப்பாடல், தொல்காப்பியத்தில் உள்ள பாடல் ஒன்றுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தலைவி இறைச்சிப் பொருள் வைத்துக் கூறுமிடங்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியத்தில் கீழ்வரும் அடிகள் காணப்படுகின்றன.
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். (தொல்காப்பியம் – 1094)

பொருள்: முன்பு களவொழுக்கத்தில் இருந்த பொழுது, தலைவி உடன்போக்கில் சுரவழியில் நடைபெறும் காட்சிகளைக் கண்டாள். பாலை நிலத்தில் உள்ள கருப்பொருளாகிய பறவைகளைப் பற்றியும் விலங்குகளைப் (புறா, மான், யானை, குருவி முதலியவற்றைப்) பற்றியும் அவள் பேசுவாள். அவற்றின் அன்பான வாழ்க்கையைச் சுட்டிப் பேசும் அவள், அவற்றைப் பார்க்கும் தலைவன், தான் பொருள்தேடச் சென்ற பணியை முற்றிலும் முடிக்காமல் திரும்பி வந்துவிடுவானோ என்று அஞ்சுவாள்.

212. தோழி கூற்று

212.  தோழி கூற்று

பாடியவர்: நெய்தற் கார்க்கியன். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55 – இல் காணலாம்
திணை: நெய்தல்.
கூற்று: குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது.    (குறை நேர்ந்த - தலைவனது குறையை நிறைவேற்றுவதற்குஉடன்பட்ட, குறை நயப்ப - தலைவனது குறையைத் தீர்த்தலைத் தலைவி விரும்பும் வண்ணம்.)
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு ஊடி இருக்கிறாள். அவளைக் காண்பதற்காக, தலைவன் தன் தேரில் வருகிறான். ஆனால், தலைவி அவனை காண விரும்பவில்லை. ”உன்னைக் காண வந்தவனைக் காணாமல் திருப்பி அனுப்புவது அறச்செயல் அன்று; உன் செயல் நாணத் தகுந்தது. தலைவன் உன்மீது கொண்ட காதலை நினைத்து நான் வருந்துகிறேன். நீஅவனை ஏற்றுக்கொள்என்று தோழி தலைவியை வேண்டுகிறாள்.

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே. 

கொண்டு கூட்டு: கொண்கன் ஊர்ந்த, கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கடல் அடைகரைத் தெளிமணி ஒலிப்பகாண வந்து நாணப் பெயரும்காமம் அளிதோ தானே;  மன்ற விளிவது; யான் நோகு. 

அருஞ்சொற்பொருள்: கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; கொடுஞ்சி = தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேரின் முன்பக்கத்தில் நடப்பட்டிருக்கும் ஓர் உறுப்பு. தேரில் செல்பவர்  இதனைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம்;  அளிது = இரங்கத் தக்கது; விளிவது = அழிவது. ஓகாரம், ஏகாரம், தான் அசை நிலைகள்.

உரை:  நெய்தல் நிலத் தலைவன் ஏறி வந்த, கொடுஞ்சியை உடைய தேரானது, தெளிந்த  நீரைஉடைய கடற்கரையில்,  தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, நம்மைக் காண வந்தது. ஆனால், நாம் நாணும்படி திரும்பிச் சென்றது.  தலைவனின் காமம் இரங்கத் தக்கது;  அது நிச்சயமாக அழியக் கடவதாகும்.  இவற்றை நினைத்து நான் வருந்துகின்றேன்.


சிறப்புக் குறிப்பு:  தம்மை நாடி வந்தவரின் குறையைத் தீர்க்காமல்  அவரை வறிதே திருப்பி அனுப்புவது அறநெறி அன்று. ஆகவே, தலைவியின் செயல் நாணத் தக்கதாயிற்று.

211. தோழி கூற்று

211.  தோழி கூற்று

பாடியவர்: காவன்முல்லைப் பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 104 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: ”இடைச்சுரத்துக் கவலுவன  (கவலுதல் = மனம் வருந்துதல்) கண்டு, நம்மை ஆற்றாரென நினைந்து மீள்வர்கொல்எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் செல்லும் வழியில் பறவைகளும் விலங்குகளும் தங்கள் துணையைப் பிரிந்திருப்பதால் வருந்துவதைக் கண்டு, தன் தலைவியும் அவ்வாறு வருந்துவாளோ என்று எண்ணித் தலைவன் பொருள் தேடுவதை விட்டுவிட்டுத் திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி கவலைப்படுகிறாள். அதைக் கண்ட தோழி, தலைவன் மிகுந்த மன வலிமை உடையவன். ஆகவே, அவன் சென்ற காரியத்தை முடிக்காமல் திரும்பி வரமாட்டான்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி
ஆராது பெயருந் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழிஎஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும்  தும்பி நீர்இல்  வைப்பின் சுரன் இறந்தோர் அம் சில் ஓதி யாய் வளை நெகிழ நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; சில் = சிலவாகிய ; ஓதி = பெண்ணின் கூந்தல்; நேர்தல்  = உடன்படல்; நீத்தார் = பிரிந்து சென்றவர் ; எஞ்சுதல் =குறைதல் , விலகுதல்ஓங்கல் = உயர்ச்சி ; வெஞ்சினை = காய்ந்த கிளை; இணர் = கொத்து; ஆராது = உண்ணாமல் ; தும்பி = வண்டு; வைப்பு = இடம்; சுரன் = பாலை நிலம்; இறந்தோர் = கடந்தோர்; எஞ்சினம் = நீங்கினோம்.

உரை: தோழி!, குறைவின்றி முற்றிலும் தீய்ந்துபோன மராமரத்தின் உயர்ந்த, வற்றிய கிளையில் இருந்த, வேனிற் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் உள்ள தேனை ஊதி (உண்டு),பசி நிறைவு பெறாது திரும்பிய வண்டுகளையுடைய,  நீரில்லாத இடங்களுள்ள  பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர்,  அழகிய சிலவாகிய கூந்தலையுடைய உனது, அழகிய வளையல்கள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்கு உடன்பட்டு,  நமக்கு அருள் செய்யாதவர்அவர் பிரிவுக்காக  நாம் அஞ்சுவதைத் தவிர்ப்போம்.


சிறப்புக் குறிப்பு: பொருள் தேடச் சென்றவர், தாம் சென்ற பணியை முடிக்காமல் இடையிலே திரும்பி வருவது அறமாகாது என்பதனால் தலைவி வருந்துகிறாள். தலைவர் இரங்கும் நெஞ்சுடையவராக இருந்தால், வளையல்கள் நெகிழும்படி தனக்கு உண்டாகும் துன்பத்தையும், நீரில்லாத பாலைவனத்தில் தமக்கு உண்டாகும் துன்பத்தையும் நினைத்துப் பார்த்துப் பிரியாமல் இருந்திருப்பார் என்று தோழி கூறுகிறாள். தலைவர் தலைவிக்கும் தனக்கும் ஏற்படக் கூடிய துன்பங்களை எண்ணிப் பார்க்காமல், பிரிந்து சென்றதால், அவர் வலிமையுடைய நெஞ்சினர் என்றும் அவர் தேடிச் சென்ற பொருளை அடையாமல் திரும்ப மாட்டார் என்றும் கூறி, தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.