Sunday, June 26, 2016

211. தோழி கூற்று

211.  தோழி கூற்று

பாடியவர்: காவன்முல்லைப் பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 104 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: ”இடைச்சுரத்துக் கவலுவன  (கவலுதல் = மனம் வருந்துதல்) கண்டு, நம்மை ஆற்றாரென நினைந்து மீள்வர்கொல்எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் செல்லும் வழியில் பறவைகளும் விலங்குகளும் தங்கள் துணையைப் பிரிந்திருப்பதால் வருந்துவதைக் கண்டு, தன் தலைவியும் அவ்வாறு வருந்துவாளோ என்று எண்ணித் தலைவன் பொருள் தேடுவதை விட்டுவிட்டுத் திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி கவலைப்படுகிறாள். அதைக் கண்ட தோழி, தலைவன் மிகுந்த மன வலிமை உடையவன். ஆகவே, அவன் சென்ற காரியத்தை முடிக்காமல் திரும்பி வரமாட்டான்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி
ஆராது பெயருந் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழிஎஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும்  தும்பி நீர்இல்  வைப்பின் சுரன் இறந்தோர் அம் சில் ஓதி யாய் வளை நெகிழ நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; சில் = சிலவாகிய ; ஓதி = பெண்ணின் கூந்தல்; நேர்தல்  = உடன்படல்; நீத்தார் = பிரிந்து சென்றவர் ; எஞ்சுதல் =குறைதல் , விலகுதல்ஓங்கல் = உயர்ச்சி ; வெஞ்சினை = காய்ந்த கிளை; இணர் = கொத்து; ஆராது = உண்ணாமல் ; தும்பி = வண்டு; வைப்பு = இடம்; சுரன் = பாலை நிலம்; இறந்தோர் = கடந்தோர்; எஞ்சினம் = நீங்கினோம்.

உரை: தோழி!, குறைவின்றி முற்றிலும் தீய்ந்துபோன மராமரத்தின் உயர்ந்த, வற்றிய கிளையில் இருந்த, வேனிற் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் உள்ள தேனை ஊதி (உண்டு),பசி நிறைவு பெறாது திரும்பிய வண்டுகளையுடைய,  நீரில்லாத இடங்களுள்ள  பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர்,  அழகிய சிலவாகிய கூந்தலையுடைய உனது, அழகிய வளையல்கள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்கு உடன்பட்டு,  நமக்கு அருள் செய்யாதவர்அவர் பிரிவுக்காக  நாம் அஞ்சுவதைத் தவிர்ப்போம்.


சிறப்புக் குறிப்பு: பொருள் தேடச் சென்றவர், தாம் சென்ற பணியை முடிக்காமல் இடையிலே திரும்பி வருவது அறமாகாது என்பதனால் தலைவி வருந்துகிறாள். தலைவர் இரங்கும் நெஞ்சுடையவராக இருந்தால், வளையல்கள் நெகிழும்படி தனக்கு உண்டாகும் துன்பத்தையும், நீரில்லாத பாலைவனத்தில் தமக்கு உண்டாகும் துன்பத்தையும் நினைத்துப் பார்த்துப் பிரியாமல் இருந்திருப்பார் என்று தோழி கூறுகிறாள். தலைவர் தலைவிக்கும் தனக்கும் ஏற்படக் கூடிய துன்பங்களை எண்ணிப் பார்க்காமல், பிரிந்து சென்றதால், அவர் வலிமையுடைய நெஞ்சினர் என்றும் அவர் தேடிச் சென்ற பொருளை அடையாமல் திரும்ப மாட்டார் என்றும் கூறி, தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.

No comments:

Post a Comment