Sunday, June 12, 2016

203. தலைவி கூற்று

203. தலைவி கூற்று
பாடியவர்: நெடும் பல்லியத்தனார். இவர் இயற்றியதாகப்  புறநானூற்றில் ஒருபாடலும் (64) குறுந்தொகையில் ஒரு பாடலும் (203) உள்ளனபல்லியம் என்ற சொல்லுக்குப் பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள்இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு வாழ்கிறான். அவன் செய்த தவற்றை அவன் உணர்கிறான். ஆனால், அவனுக்குத் தலைவியைச் சந்தித்துத் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்பதற்குத் துணிவில்லை. ஆகவே, அவன் தலைவி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்தாலும் அவளைக் காண்பதைத் தவிர்க்கிறான். தலைவன் தலைவியின் தோழியைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். தலைவி, “நான் முன்பெல்லாம் என் கணவன்மீது அன்புடையவளாக இருந்தேன். இப்பொழுது, அந்த அன்பு மறைந்துவிட்டதுஎன்று தோழியிடம் கூறுகிறாள்.

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே. 

கொண்டு கூட்டு:
மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என் ஐக்குப்  யான் பண்டொரு கால் (பரியலென்! மன்!

அருஞ்சொற்பொருள்: தலைஅசைநிலை; நண்ணு வழி = அருகில் உள்ள இடம்; கடவுள் = முனிவர்; நண்ணிய = அருகில்; பால் = பகுதி; கடவுள் நண்னிய பாலோர் = முனிவர்களைச் சார்ந்து வாழ்பவர்; ஒரீஇ = விலகி; = தலைவன்; பரியலென் = பரிவுடையேன்; மன்அது கழிந்தது என்னும் பொருளில் வந்த இடைச்சொல்; பண்டு ஒரு கால் = முன்பு ஒரு காலத்தில்.

உரை: தலைவர் இருக்கும் ஊருக்கும் நான் இருக்கும் ஊருக்கும் இடையே மலைகள் இல்லை; அவர், மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதால் காணமுடியாத ஊராரும் அல்லர்;  கண்ணாலே காணும்படி, விரைவில் வருதற்குரிய அண்மையான இடத்திலிருந்தும், முனிவரை அணுகி வாழ்பவர்களைப்போல், மனத்தால் நீங்கி வாழ்கின்ற என் தலைவர்பொருட்டு, நான், முன்பு ஒரு காலத்தில் அன்புடையவளாக இருந்தேன். அந்த அன்பு இப்பொழுது மறைந்து விட்டது.

சிறப்புக் குறிப்பு: ” மலையிடை யிட்ட நாட்டரும் அல்லர் என்றது  தலைவியின் கணவன் வேற்று நாட்டில் இருப்பவன் அல்லன் என்பதைக் குறிக்கிறது. ”மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்என்றது அவன் காடுகளைக் கடந்து உள்ள ஊரில் இருப்பவன் அல்லன் என்பதைக் குறிக்கிறது.  ”கண்ணிற் காண நண்ணுவழிஎன்றது கணவன் கண்ணால் காணக்கூடிய அளவில், மிக அருகில் உள்ளான் என்பதைக் குறிக்கிறது.

 முனிவரைக் காண்பவர்  தம் தூய்மையின்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகுவதைப் போலத் தலைவன் தன்னிடத்திலிருந்து  விலகி வாழ்கிறான் என்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது.  இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது பரத்தை ஒழுக்கத்தால் தலைவனுடைய தூய்மையின்மையையும் தலைவி குறிப்பால் உணர்த்துகிறாள்.

No comments:

Post a Comment