Sunday, June 12, 2016

201. தலைவி கூற்று

201. தலைவி கூற்று 

பாடியவர்:
இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று: கடிநகர் புக்கு, ''வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் தங்கள் இல்லத்தில் வாழ்கிறார்கள். தலைவியைக் காணத் தோழி வருகிறாள். “நீ திருமணம் நடைபெறும் வரை பொறுமையாக இருந்தாயே! அது எவ்வாறு உன்னால் முடிந்தது?” என்று தோழி கேட்கிறாள். தோழியின் கேள்விக்குத் தலைவியின் மறுமொழியாக இப் பாடல் அமைந்துள்ளது.

அமிழ்த முண்கநம் அயலி லாட்டி
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்
கழைநிவந் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றாளே. 

கொண்டு கூட்டு: பால் கலப்பு அன்ன தேக்கொக்கு அருந்துபு  நீலம் மென்சிறை வள்உகிர்ப் பறவை நெல்லியம் புளி மாந்தி அயலது முள்ளில் அம்பணை மூங்கில் தூங்கும் கழை நிவந்து ஓங்கிய சோலை மலைகெழு நாடனை நம் அயல்இல் ஆட்டி வரும்  என்றாள். (அவள்)அமிழ்தம் உண்க.

அருஞ்சொற்பொருள்: ஆட்டி = பெண்மணி ; கொக்கு = மாமரம்; தேக்கொக்கு = தேமாம்பழம்; நீலம் =நீலநிறம்; வள் = கூர்மை; உகிர் = நகம்; வள்ளுகிர்ப் பறவைவௌவால்; மாந்தி = உண்டு; பணை = பருத்த; கழை = மூங்கில்; நிவந்து = உயர்ந்து.

உரை: (தோழி!),  பாலைக் கலந்தாற் போன்ற இனிமையையுடைய, தேமாம்பழத்தைத் தின்று, கரிய மெல்லிய சிறகுகளையும், கூரிய நகங்களையும் உடைய வௌவால்,  நெல்லியின் புளித்த காயை உண்டு, அருகில் உள்ள, முள்ளில்லாத அழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்றது. அத்தகைய மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளையுடைய, மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவன், என்னைத் திருமணம் செய்துகொள்வதற்காக வரப்போகிறான் என்று நமது அடுத்த வீட்டுப் பெண்மணி கூறினாள். ஆகவே,  அவள் அமிழ்தத்தை உண்பாளாக!


சிறப்புக் குறிப்பு: இனிய தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு புளிப்புச் சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு முள்ளில்லாத மூங்கிலில் தூங்கியதுபோல, களவொழுக்கத்தில்  இன்பத்தைத் துய்த்த தலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இன்னல்களையும் அடைந்து, பின்னர் தலைவியை திருமணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்கிறான் என்பது குறிப்பு.

No comments:

Post a Comment