Sunday, June 12, 2016

198. தோழி கூற்று


198. தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் கானலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் ஒரு குறிப்பிட்ட  இடத்தில் சந்திப்பது வழக்கம். அந்த இடத்திற்குத் தலைவியின் தாய் வந்தாலும் வரக்கூடும் என்பதை அறிந்த தோழி, “இனிமேல், இங்கே  தலைவியைச் சந்திக்க நீ வர வேண்டாம். நானும் தலைவியும் தினைப்புனம் காப்பதற்குப் போகப்போகிறோம். ஆகவே, இனி, நீ அங்கே வந்தால், எங்களைச் சந்திக்கலாம்.” என்று கூறுகிறாள்.

யாஅம் கொன்ற மரம்சுட்டு இயவிற்
கரும்புமருள் முதல பைந்தாள் செந்தினை
மடப்பிடித் தடக்கை அன்னபால் வார்பு
கரிக்குறட்டு இறைஞ்சிய செறிகோள் பைங்குரல்
படுகிளி கடிகம் சேறும் அடுபோர்
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே.

கொண்டு கூட்டு: யாஅம் கொன்ற மரம்சுட்டு இயவில் கரும்புமருள் முதல பைந்தாள் செந்தினைமடப்பிடித் தடக்கை அன்ன பால் வார்பு கரி குறட்டு இறைஞ்சிய, செறிகோள் பைங்குரல் படுகிளி கடிகம் சேறும். யாய் வருகுவள்! அடுபோர் எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து ஆரம் நாறும்  மார்பினை வாரற்க! தில்ல !

அருஞ்சொற்பொருள்: யா = யாமரம்; கொன்ற = வெட்டிய; இயவு = காடு, வழி; மருள் = போன்ற; பை = பசிய; தாள் = அடித்தண்டு; செந்தினை = சிவந்த தினை; மடம் = இளமை; பிடி = பெண்யானை; தடக்கை = வளைந்த கை; வார்பு = ஒழுகும் (நிரம்பி); கரிக் குறடு = கொல்லர் கரியை எடுக்கப் பயன்படுத்தப்படும் குறடு; இறைஞ்சிய = வளைந்த; செறிகோள் = நிறைந்து முற்றிய; குரல் = கதிர்; படுதல் = தாழ்தல், வீழ்தல்; கடிதல் = வெருட்டுதல்; சேறும் = சேர்வோம்; அடுதல் = அழித்தல், கொல்லுதல்; எஃகு = வேல் (வேற்படை); தடக்கை = பெரிய கை; மலையன் = மலையமான் திருமுடிக் காரி; கானம் = காடு; ஆரம் = சந்தனம்; வாரற்க = வரவேண்டாம்; தில்ல = விருப்பம்.

உரை: வெட்டிய யாமரங்களைச் சுட்ட இடத்தில், கரும்பைப் போன்ற அடியும் பசிய காம்பையும் உடைய சிவந்த தினையின், இளம் பெண்யானையின் வளைந்த தும்பிக்கை போல் காணப்பட்டு, பால்நிரம்பி, கரியை எடுக்கின்ற குறடைப்போல வளைந்த, நிறைந்து முற்றிய பசுமையான கதிர்களைத் தின்னும் பொருட்டு வரும் கிளிகளை  ஓட்டுவதற்கு நாங்கள் செல்வோம்.  இவ்விடத்தில் தாய் வருவாள்; பகைவரைக் கொல்லும் போர்க்குரிய, வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய, மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர்க் காட்டில் வளர்ந்த, சந்தனம் மணக்கின்ற மார்பினையுடையவனே! இனி, நீ இங்கு வரவேண்டாம். நாங்கள் இருக்கும் தினப்புனத்திற்கு வருக. அதுவே, எங்கள் விருப்பம்..

சிறப்புக் குறிப்பு:  யாமரத்தை வெட்டி, சுட்டுப்பொசுக்கி, அவ்விடத்தில் தினை விதைப்பது வழக்கம்செழிப்பான நிலத்தில் விளைந்த தினையின் கதிர், யானையின் தும்பிக்கை போலக் காட்சி அளிக்கிறதுவளைந்த கதிர், கொல்லன் கரியை எடுப்பதற்குப் பயன்படுத்தும் குறடுபோல் காட்சி அளிக்கிறது. நீண்ட கதிருக்குத் தும்பிக்கையையும் வளைந்த கதிருக்குக் குறடும் உவமைகள். இங்கு, மலையமான் என்றது, கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக் காரியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment