Sunday, June 12, 2016

197. தலைவி கூற்று

197. தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 30 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: ”கார்காலம்  கழிந்து குளிர்காலம் வந்துவிட்டது என்பது தலைவருக்கும் தெரியும். ஆகவே, விரைவில் வருவார். நீ வருந்தாதேஎன்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ”தலைவர் வருவதாகச் சொல்லிச் சென்ற கார்காலம் கழிந்தது. ஆனால், அவர் இன்னும் வரவில்லை. வாடைக் காற்றோடு கூடிய குளிர்காலமும் வந்துவிட்டது இனி, நான் என்ன செய்வேன்?” என்று தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி தோழியிடம் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள்.

யாதுசெய் வாம்கொல் தோழி நோதக
நீர்எதிர் கருவிய கார்எதிர் கிளைமழை
ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த என்குறித்து வருமே. 

கொண்டு கூட்டு: தோழி! நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளைமழை  ஊதையம் குளிரொடு, பேதுற்று மயங்கியகூதிர் உருவின் கூற்றம் காதலர்ப் பிரிந்த என் குறித்து நோதக  வரும். யாது செய்வாம்?

அருஞ்சொற்பொருள்: நோ = துன்பம்; எதிர்தல் = பெறுதல் (ஏற்றுக்கொள்ளுதல்); கருவி = தொகுதி; கருவிய = மின்னல், இடி முதலிய கருவிகளை உடைய; கார் = குளிர்ச்சி; கார் எதிர் = குளிர்ச்சியை ஏற்றுக்கொண்ட; கிளை மழை = பல இடங்களிலும் பெய்யும் மழை; ஊதை = ஊதைக் காற்று; பேது = மயக்கம்; மயங்கிய = கலந்த; கூதிர் = குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்).

உரை: தோழி!  கடல் நீரை ஏற்றுக் கொண்ட மேகம்,  மின்னல் இடி ஆகியவற்றோடு  கூடிப் பல இடங்களில் தோன்றும் மழையுடன், ஊதைக் காற்றின் குளிர்ச்சியோடு மிகவும் மயங்கிக் கலந்து, கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம், தலைவரைப் பிரிந்திருக்கும் என்னைக் குறி வைத்துக் கொல்வதற்காகத்  துன்பம் உண்டாகுமாறு வருகின்றது. நாம் என்ன செய்வோம்?


No comments:

Post a Comment