Sunday, May 15, 2016

196. தோழி கூற்று

196.  தோழி கூற்று
பாடியவர்: மிளைக் கந்தனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு ஊடியிருக்கிறாள். ஊடலை நீக்கித் தலைவி தன்னை ஏற்றுக் கொள்வதற்குத் தோழியின் உதவியைத் தலைவன் வேண்டுகிறான். முன்பு, நீர் மிகுந்த அன்புடையவராக இருந்தீர். இப்பொழுது, நீர் அவ்வாறு அன்புடையவராக இல்லை. ஆகவே, தலைவி எவ்வாறு உம்மை ஏற்றுக் கொள்ளுவாள்?” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே. 

கொண்டு கூட்டு: ஐய! என் தோழி வேம்பின் பைங்காய் தரின் தேம்பூங் கட்டி என்றனிர்; இனியேபாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்! அன்பின் பால் அற்று

அருஞ்சொற்பொருள்: பைங்காய் = பசிய காய்; தேம் = இனிமை; தேம்பூங் கட்டி = இனிய மணமுள்ள வெல்லக்கட்டி; என்றனீர் = என்று கூறினீர்; பாரிபாரி ஒரு குறுநிலமன்னன்; அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; பறம்பு = பறம்பு மலை; தண்ணிய = குளிர்ந்த; வெய்ய = வெப்பமான; உவர்த்தல் = உவர்ப்புச் சுவையை உடையதாக இருத்தல்; அற்று = அத்தன்மையது; பால் = இயல்பு.


உரை: ஐயஎன் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம் வேம்பின் பச்சைக் காயைத் தந்தால், அதை இனிய மணமுள்ள  வெல்லக்கட்டி, என்று பாராட்டிக் கூறினீர்; இப்பொழுது, பாரியென்னும் வள்ளலுக்குரிய பறம்பு மலையிலுள்ள, சுனையில் ஊறிய தெளிந்த நீரை தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும், அதை வெப்பமுடையதாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் கூறுகின்றீர்.  உமது அன்பின் இயல்பு அத்தகையதாய் உள்ளது!

No comments:

Post a Comment