Sunday, May 15, 2016

193. தலைவி கூற்று

193.  தலைவி கூற்று

பாடியவர்: அரிசில் கிழார். இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர்.  அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் என்பவர் குறிப்பிடுகிறார்.  வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அரசலாற்றின் கரையில் இருந்த ஊர் என்றும் கருதுவர்.  இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது.  இவர் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர்.  இவர் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தில் புகழ்ந்து பாடியுள்ளார்.  பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெருமகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான்.  ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

            வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற குறுநில மன்னன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  அவன் தன் மனைவியைத் துறந்து வேறொருத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தான்.  அரிசில் கிழார், பேகனை அவனுடைய மனைவியோடு சேர்ந்து வாழுமாறு புறநானூற்றுப் பாடல் 146-இல் அறிவுரை கூறுகிறார்.  தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதியமான் எழினி என்பவன் இறந்ததால் வருந்திய அரிசில் கிழார் தன் வருத்தத்தைப் பாடல் 230 - இல் கூறுகிறார்.  இவர் புறநானூற்றில் ஏழு பாடல்களையும் (146, 230, 281, 285, 300, 304, 342) குறுந்தொகையில் ஒருபாடலும் (193) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: தோழி கடிநகர் (மண வீடு) புக்கு, “நலந்தொலையாமே நன்கு ஆற்றினாய்என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு, தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நடத்துகிறார்கள். தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள். தலைவன் வெளியூருக்குச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்ட தோழி வியப்படைகிறாள். ”அவர் பிரிவை நினைத்து நீ வருந்தாமல் இருக்கிறாயே!” என்று கூறித் தன் வியப்பை வெளிப்படுத்துகிறாள். இப்பாடல், தோழியின் கேள்விக்குத் தலைவியின் மறுமொழியாக அமைந்துள்ளது.

மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்எம் தோளே
இன்று முல்லை முகைநா றும்மே. 

கொண்டு கூட்டு:
மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரைதட்டைப் பறையின் கறங்கு நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
நெடுந்தோளே மணந்தனன். இன்றும் முல்லை முகை நாறும்

அருஞ்சொற்பொருள்: மட்டம் (மட்டு) = கள்; மணி = நீலமணி, கலம் = பாத்திரம்; இட்டு = நுணுக்கம்; இட்டுவாய் = சிறிய வாய்; சுனை = நீரூற்று; பகுவாய் = பிளந்த வாய்; தட்டைப் பறை = தினைத்தட்டையை ஒடித்து, பலவாகப் பிளந்து ஒன்றோடு ஒன்று ஓசை உண்டாகும்படி தட்டப்படும்பறை க்குத் தட்டைப்பறை என்று பெயர்.
 கறங்கும் = ஒலிக்கும்; தொல்லைத் திங்கள் = முன்பு ஒரு முழுநிலா அன்று; மணந்தனன் = தழுவினான்; முகை = மொட்டு.

உரை: கள்ளைப் பெய்துவைத்த நீலநிறக்குப்பி போன்ற சிறிய வாயையுடைய சுனையில் உள்ள, பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகளை வெருட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தட்டைப்பறையைப் போல் ஒலிக்கும் நாட்டுக்குரியவன் நம் தலைவன். அவன் (வெளியூருக்குப் போகுமுன்) கடந்த மாதத்தில், முழுவெண்ணிலா ஒளி வீசியபொழுது, என் தோள்களைத் தழுவி என்னைக் கூடினான். அப்பொழுது, அவன் அணிந்திருந்த முல்லை மொட்டுக்களின் நறுமணம் இன்னும் என் தோள்களில் வீசுகிறது.


சிறப்புக் குறிப்பு: கடந்த மாதம் தலைவன் தழுவியபோது அவன் மேனியில் இருந்த முல்லை மொட்டுக்களின் நறுமணம் இன்றும் தன் தோள்களில் வீசுகிறது என்று தலைவி கூறுவது, தலைவன் மிகுந்த அன்புடையவன் என்பதையும், அவன் அன்பினால் அவள் வருத்தமின்றி அவன் வரவை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருக்கிறாள் என்பதையும் குறிக்கிறது.  

No comments:

Post a Comment