Sunday, May 1, 2016

184. தலைவன் கூற்று

184.  தலைவன் கூற்று

பாடியவர்:
ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன். ஆரிய அரசர் பலர் ஆர்வத்தோடு தமிழைக் கற்றதாகக் கூறப்படுகிறது.  இந்த அரசன் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. (கழறல் = இடித்துரைத்தல்)
கூற்று விளக்கம்: அறிவிற் சிறந்த தலைவன் ஒருவன் கடற்கரைச் சோலையில் இருந்த பெண் ஒருத்தியைக் கண்டான். அவளைக் கண்டவுடன் அவள்மீது காதல் கொண்டான்.  அவள் நினைவாகவே இருந்தான். அதைக் கண்ட அவன் தோழன் அவனைக் கடிந்துரைத்தான். அதற்குத் தலைவன், “அந்த கடற்கரைச் சோலை அருகே உள்ள் சிற்றூருக்குச் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தப்பெண் தன் கண்ணால் வீசும் வலையில் அகப்படாமல் இருக்க முடியாதுநான் கூறுவது உண்மை. அவள் வாழும் சிற்றூருக்குச் செல்லுவதைத் தவிர்கஎன்று மறுமொழி கூறுகிறான்.

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்குஇது மாண்டது என்னாது அதற்பட்டு
ஆண்டொழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கான லானே. 

கொண்டு கூட்டு: மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கானலான், மாண்தகை நெஞ்சம்  இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு, ஆண்டு ஒழிந்தன்று. ஆன்றோர்க்கு அறிகரி பொய்த்தல் இல்லை. சிறுகுடிச் செலவு குறுகல் ஒம்புமின்!


அருஞ்சொற்பொருள்: கரி = சாட்சி; ஆன்றோர் = அறிஞர் (பெரியோர்); குறுகல் = அடைதல், செல்லுதல்; ஓம்புதல் = தவிர்த்தல்; மாண்டது = பெருமையுடையது; ஆண்டு = அங்கே; மாண் = மாட்சிமை; மாண்தகை = மாட்சிமைப்பட்ட தகுதி; பரதவர் = நெய்தல் நில மக்கள்; மடம் = இளமை; கானல் = கடற்கரைச் சோலை.


உரை: மயிலின் தோகையில் உள்ள கண்ணைப் போன்ற அழகிய முடியையுடைய பாவை போன்றவளாகிய அந்த இளம்பெண் நுண்ணிய வலையையுடைய மீனவரின் மகள். அவள் வாழ்கின்ற கடற்கரைச் சோலைக்குச் செல்லுபவர்கள் அவள் கண்ணால் வீசும் வலையில் சிக்கிக்கொள்வார்கள். எனது சிறந்த மாசற்ற மனமும், இதற்கு இது சிறப்புடையது என்று ஆராயாமல் அவள் கண்வலையில் சிக்கிகொண்டு, அவள் இருக்கும் கடற்கரைச் சோலையிலையே தங்கிவிட்டது. தாம் அறிந்த ஒன்றை இல்லை என்று பொய்ச்சான்று கூறும் வழக்கம் அறிவறிந்த சான்றோரிடம் இல்லை. எனவே, நான் கூறுவதை உண்மை என்று உணர்ந்து, அவள் வாழும் சிற்றூருக்குச் செல்லுவதைத் தவிர்க

No comments:

Post a Comment