Sunday, June 12, 2016

204. பாங்கன் கூற்று

204. பாங்கன் கூற்று

பாடியவர்: மிளைப்பெருங் கந்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 146 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒரு பெண்ணின்மீது காதல் கொண்டு, காம நோயால் வருந்துகிறான். அவன் நிலையைக் கண்ட தோழன் அவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

கொண்டு கூட்டு:
பெருந்தோளோயே! காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றேநினைப்பின் முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந்தாங்கு
காமம் விருந்தே.

அருஞ்சொற்பொருள்: அணங்கு = வருத்தம் ; முதை = பழைய; சுவல் = மேட்டு நிலம்;  கலித்தல் = தழைத்தல் ; மூதா = மூது + = முதிய பசு; தைவருதல் = தடவுதல்.

உரை: பெரிய தோளையுடைய தலைவ!  காமம் காமம் என்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர். அக்காமமானது வருத்தமும் அன்று;  நோயும் அன்று; ஆராய்ந்து பார்த்தால், பழைய  மேட்டு நிலத்தில் தழைத்த,  முதிராத இளம் புல்லை, முதிய பசு (பற்கள் இல்லாத முதிய பசு),  நாவால் தடவி இன்புற்றாற் போல, நினைக்கும் காலத்து அக்காமம் புதிய இன்பத்தைத் தருவதாகும்.


சிறப்புக் குறிப்பு: பழைய கொல்லையாகிய மேட்டு நிலத்தில் இளம்புல் வளர்ந்திருக்கிறது. ஓரு முதிய பசு அந்தப் புல்லைத் தின்பதற்கு முயற்சி செய்கிறது. அந்த முதிய பசுவிற்கு பற்கள் இல்லாததால் புல்லைக் கடித்து மென்று தின்று அதன் சுவையை நுகர முடியவில்லை. அந்தப் புல்லைத் தின்பதனால் கிடைக்கக்கூடிய சுவையை, அந்தப் பசு கற்பனை செய்துகொள்கிறது. அதைப்போல், காமமும் நமது நினைப்பின் அளவில் மட்டுமே இன்பத்தை அளிக்கின்றது. நமது அறிவால் அதை அடக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு, அறிவால் காமத்தை அடக்கினால் அந்த இன்பம் தோன்றாதுஎன்று தோழன் கூறுகிறான்.

No comments:

Post a Comment