Thursday, October 15, 2015

101. தலைவன் கூற்று

101. தலைவன் கூற்று

பாடியவர்:   பரூஉ மோவாய்ப் பதுமர். பருத்த மோவாயை உடைய பதுமர் என்பது இப் பெயரின் பொருள். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. 
திணை: குறிஞ்சி.
 கூற்று - 1: தலைமகட்குப் பாங்காயினார் (தோழி முதலியோர்) கேட்பச் சொல்லியது.
கூற்ரு – 2: வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதூஉமாம். (செலவழுங்குதல் என்றால் பிரிதலைத் தவிர்த்தல் என்று பொருள்)
கூற்று விளக்கம்: இப்பாடல் இரண்டு வகையான பின்னணியில் இயற்றப்பட்டதாக எண்ணிப் பார்க்கலாம்தலைவியைப் பிரிந்து செல்ல விரும்பாத தலைவன் தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறியதாகக் கருதலாம். தலைவியைவிட்டுப் பிரிய விரும்பாத தலைவன் பிரிவைத் தவிர்க்கும் எண்ணத்தோடு தனக்குக்தானே சொல்லியதாகவும் கருதலாம். இரண்டாவது கருத்து சிறந்ததாகத் தோன்றுகிறது.

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.

கொண்டு கூட்டு: விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குல் குறுமகள்
எமக்குத் தோள்மாறு படூஉம் வைகலோடு இரண்டும் சீர்தூக்கின் சாலா.

அருஞ்சொற்பொருள்: திரை = அலை; வளைஇய = சூழ்ந்த; அரிதுபெறு = பெறுதற்கரிய; புத்தாள் நாடு = துறக்க உலகம் (சுவர்க்க உலகம்); சீர்தூக்குதல் = ஒப்பு நோக்குதல்; சாலுதல் = ஒவ்வுதல்; உண்கண் = மைதீட்டிய கண்கள்; மாண் = மாட்சிமை; வரி = தேமல்; அல்குல் = இடை.

உரை: விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலக இன்பம்,   பெறுதற்கரிய சிறப்பையுடைய தேவருலக இன்பம் ஆகிய இரண்டும், பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன்னைப் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட தேமலையுடன் கூடிய இடைகளையும் உடைய, தலைவியுடன்  தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளில் எமக்குக் கிடைக்கும்  இன்பத்திற்கு ஈடாகா.


சிறப்புக் குறிப்பு: மண்ணுலக இன்பம் பொருளால் வருவது. தேவருலக இன்பம் அறத்தால் வருவது. ஆகவே, பொருளாலும் அறத்தாலும் பெறும் இன்பத்தைவிட காமத்தால் கிடைக்கும் இன்பம் சிறந்தது என்று தலைவன் எண்ணுகிறான். தோள் மாறுபடுதல் என்பது ஒருவரின் இடது தோள் மற்றவரின் வலது தோளிலும், ஒருவரின் வலது தோள் மற்றவரின் இடது தோளிலும் பொருந்துமாறு தழுவுவதைக் குறிக்கிறது.  “எமக்குஎன்றதால் தோளோடு தோள் மாறுபடத் தழுவுவதால் தலைவன் தலைவி ஆகிய இருவரும் இன்பம் அடைந்தார்கள் என்பது பெறப்படுகிறது

No comments:

Post a Comment