96. தலைவி கூற்று
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகனை இயற்பழித்துத் (இயல்பைப் பழித்துத்) தெருட்டும் ( தெளிவு படுத்தும்) தோழிக்குத் தலைமகள் இயற்படச் ( இயல்பைச் சிறப்பித்துச்)
சொல்லியது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் தலைவன் செய்யவில்லை. இதை அறிந்த தோழி தலைவன்மீது கோபம் கொள்கிறாள். ஆகவே,
அவள் தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். அதைக் கேட்ட
தலைவி , “ நீ விளையாட்டுக்காக அவ்வாறு பேசினாய் என்று நினைக்கிறேன். நீ தலைவனைப் உண்மையாகவே பழித்துப்
பேசியிருந்தால், நீ மிகவும் துன்பப்படுவாய்.” என்று கூறித் தோழியிடம் சினந்துகொள்கிறாள்.
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.
கொண்டுகூட்டு: நன்னுதல் !அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு ”யான் எவன் செய்கோ ?” என்றி. யான் அது நகை என உணரேன் ஆயின் நீ என்ஆகுவை?
அருஞ்சொற்பொருள்: வேங்கை = ஒரு வகை மரம்; என் செய்கோ = என்ன
செய்வேன்; நகை = மகிழ்ச்சி தோன்ற விளையாட்டாகப்
பேசுவது; நன்னுதல் = நல் +நுதல் = நல்ல நெற்றி.
உரை: நல்ல
நெற்றியை உடைய தோழி
! அருவியின் அருகில் வளரும் வேங்கை மரங்களையுடைய, பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனை என்னால் என்ன செய்ய முடியும் என்று
கூறி நீ அவனை பழித்துப் பேசினாய். நீ அங்ஙனம் கூறியதை, நான் நீ விளையாட்டுக்காக கூறினாய் என்று எண்ணாமல் இருந்திருந்தால் நீ என்ன
பாடு பட்டிருப்பாய் என்று தெரியுமா?
சிறப்புக்
குறிப்பு:
”அருவி வேங்கைப் பெருமலை நாடன்” என்றது, அருவி தன்னைச் சார்ந்த வேங்கையைப் பாதுகாப்பதைப் போலத் தலைவன் தன்னை பாதுகாப்பான்
என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment