93. தலைவி கூற்று
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
தினை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
பரத்தையரோடு சிலகாலம் வாழ்ந்து, இப்பொழுது மனைவியோடு இல்லறத்தைத்
தொடர்வதற்காக வந்திருக்கிறான். தலைவி மிகுந்த கோபத்தோடு இருக்கிறாள்.
“அவர் உன்மீது மிகுந்த அன்புடையவர். அவரை ஏற்றுக்கொள்.
வேண்டுமானால், கொஞ்சம் ஊடல் செய்து, அதன் பிறகு அவரை ஏற்றுக்கொள்.” என்று தோழி தலைவியிடம்
தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்.“ ”அவருக்காக நீ என்னிடம் பரிந்து
பேசாதே. எனக்கு அவர்மீது கோபம்தான் உள்ளதே தவிர காதல் இல்லை.
நான் ஏன் அவரோடு ஊட வேண்டும்?” என்று கூறித் தலைவி
தன் கணவனை ஏற்க மறுக்கிறாள்.
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
கொண்டுகூட்டு: தோழி! நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் ! அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங் கடையே புலவி அஃது எவனோ?
அருஞ்சொற்பொருள்: நன்னலம் = பெண்மை நலம்; தொலைதல்
= கெடுதல்; சாய்தல் = மெலிதல்;
கழிதல் = நீங்குதல்; உரையல்
= சொல்லாதே; அத்தன் = தந்தை;
புலவி = ஊடல்; கடை
= இடம்.
உரை: தோழி, என்னுடைய நல்ல பெண்மை நலம் கெட்டு,
உடலழகு மிகவும் மெலிந்து என் இனிய உயிரே போனாலும் அவரைப் பற்றிப் பரிவான
சொற்களை என்னிடம் சொல்லாதே. என் கணவரை நான் என்னுடைய தாயைப் போலவும்
தந்தையைப் போலவும் மதிக்கிறேன். ஆனால், ஒருமனைவிக்கு கணவனிடத்தில் இருக்க வேண்டிய அன்பு (காம
உணர்வு) எனக்கு அவரிடம் இல்லாததால் அவரோடு நான் ஏன் ஊட வேண்டும்?
சிறப்புக்
குறிப்பு:
தலைவனிடத்தில்
தலைவிக்குக் கோபம் மட்டுமே உள்ளது. தன் பெற்றோரிடம் மரியாதை
உடையவளாக இருப்பதுபோல் அவனிடமும் பழக விரும்புகிறாள். அவன் அவளைவிட்டுப்
பிரிந்து பரத்தையரோடு வாழ்ந்ததால் அவள் அவன்மீது கோபமாக இருக்கிறாள். “என் கணவரிடம் எனக்குக் காமம் இருந்தால்தானே ஊடவேண்டும் என்ற எண்ணம் எனக்குத்
தோன்றும். எனக்குத்தான் அவரோடு கூட வேண்டும் என்ற விருப்பமே இல்லயே.
நான் ஏன் அவரோடு ஊடவேண்டும்? ” என்று தலைவி எண்ணுகிறாள்.
நீரும் நிழலது
இனிதே;
புலவியும்
வீழுநர் கண்ணே
இனிது. (குறள் – 1308)
என்ற குறளும்,
ஊடுதல் காமத்திற்கு
இன்பம்;
அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(குறள் 1330)
என்ற
குறளும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை.
No comments:
Post a Comment