95. தலைவன் கூற்று
பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று
விளக்கம்:
மனம்
வருந்தி உடல் மெலிந்து காணப்படும் தலைவனை நோக்கித் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன
?” என்று கேட்கிறான். “ஒரு இளம்பெண்னின் மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த
நிலை வந்தது.” என்று
தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.
கொண்டுகூட்டு: மால்வரை
இழிதரும் தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக்
குறவன் பெருந்தோள் குறுமகள் நீரோரன்ன சாயல் தீயோரன்ன என் உரன் அவித்தன்றே.
அருஞ்சொற்பொருள்: மால் = பெரிய ; வரை = மலை; இழிதல் = விழுதல்; தூ =
தூய்மையான; முகை = குகை;
கன்முகை = கல் + முகை
= பாறைகளின் வெடிப்பு; ததும்புதல் = ஒலித்தல்; சாரல் = மலைப்பக்கம்;
குறவன் = குறிஞ்சிநிலத்தில் வாழ்பவன்; ஓர் – அசைச்சொல்; சாயல்
= மென்மை; உரன் = மனவலிமை,
ஊக்கம்; அவித்தல் = கெடுத்தல்.
உரை: தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,
பாறைகளின் வெடிப்புக்களில்
ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின்
நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச்
செய்தது.
சிறப்புக்
குறிப்பு:
”ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு
(1308).” என்ற குறளில் வள்ளுவர் “ போர்க்களத்தில்
வலிய பகைவரும் அஞ்சி நடுங்கத் தக்க என் பெருமிதம், இவள் ஒளி
பொருந்திய நெற்றிக்கு ஆற்றாமல் தோற்று விட்டதே!”, என்று
கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எதிர்ப்பட்ட பொருள் அனைத்தையும்
அழிக்கும் தன்மை உடையதால், அழிக்கும் வலிமைக்குத் தீயை உவமை
கூறுவது மரபு. “வளித்தலைஇய
தீயும்... போல... தெறலும் ... உடையோய் (புறநானூறு.
2:4-8)” என்று
புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகனார் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனின் வலிமைக்குத்
தீயை உவமையாகக் குறிப்பிட்டிருப்பதும், ”நீரினும் இனிய சாயல்
பாரி வேள்” என்று புறநானூற்றுப் பாடல் 105 – இல் கபிலர் பாரியின் இனிய தன்மைக்கு நீரை உவமையாகக் கூறியிருப்பதும் இங்கு
ஒப்பு நோக்கத் தக்கது.
|
No comments:
Post a Comment