89.
தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19-இல் காணலாம்.
திணை: மருதம் (குறிஞ்சி).
கூற்று -1: தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று – 2: தலைமகற்குப்
பாங்காயினோர் கேட்பச் சொல்லி வாயில் மறுத்ததூஉம் ஆம்.
கூற்று
விளக்கம்
1: மகளிர்
உரலில் நெல் முதலியவற்றை இட்டு உலக்கையால் இடிக்கும்போது அதனால் உண்டாகும் சோர்வு தோன்றாதிருப்பதற்காகப்
பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு எனப்படும். தலைவன், அரசன், தெய்வம் ஆகியோரின் சிறப்பைப் பாடுபொருளாக வைத்து
வள்ளைப் பாட்டைப் பாடுவது இயல்பு. வள்ளைப் பாட்டு, அவலிடி என்றும் அம்மனை வள்ளை என்றும், உலக்கைப்
பாட்டென்றும் கூறப்படும்.
தலைவன்
பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடிக்கொண்டு,
உரலில் உள்ள நெல்லை உலக்கையால் தலைவி குற்றிக்கொண்டிருக்கிறாள்.
அங்கே, ஓரிடத்தில் தலைவன் மறைவாக நின்றுகொண்டிருக்கிறான்.
தலைவன் அங்கே இருப்பதை உணர்ந்த தோழி, “இவள் இப்படித்
தலைவனைப் பற்றிப் பாடினால், இந்த ஊர் மக்கள் இவளைப் பற்றி அலர்
தூற்றலாம். யார் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அதற்ககாக நாங்கள் ஏன் வருந்த வேண்டும்?” என்று கூறுகிறாள்.
அவள் சொல்லுவது தலைவனின் காதில் விழுந்தால் அவன் விரைவில் திருமணத்திற்கான
முயற்சிகளைச் செய்வான் என்று அவள் நினைக்கிறாள்.
கூற்று விளக்கம் – 2: இப்பாடல் வேறொரு சூழ்நிலையை அடிப்படையாக வைத்துப் பாடப்பட்டதாகவும்
சிலர் கூறுகின்றனர். அதாவது, தலைவன்
தலைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறான். தன் மனைவி கோபமாக இருப்பதை
அறிந்த தலைவன், தன் தோழனைத் தன் மனைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான்,
“தலைவன் தனக்கு இழைத்த கொடுமைகளைக் கூறித் தலைவி வள்ளைப் பாட்டைப் பாடினால்,
எங்களோடு தொடர்பில்லாதவர்கள் குறை கூறுகிறார்கள். அவர்கள் குறை கூறுவதற்காக நாங்கள் ஏன் அஞ்சவேண்டும்.” என்று தோழி தலைவனின் தோழன் கேட்குமாறு கூறித் தலைவி தலைவனை ஏற்றுக்கொள்ள மறுப்பதை
மறைமுகமாகக் கூறுகிறாள். இந்தக் கருத்து அவ்வளவு சிறப்புடையதாகவும்
பாடலுக்குப் பொருத்தமானதாகவும் தோன்றவில்லை.
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.
கொண்டுகூட்டு: பெரும்பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய நல்லியல் பாவை அன்ன இம் மெல்லியல் குறுமகள் பாடினள் குறின், பாவடி உரல பகுவாய் வள்ளை ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப. இப்பேதை ஊர்க்கு அழிவது எவன்கொல்?
அருஞ்சொற்பொருள்: பா = பரந்த; பகுவாய் = திறந்த வாய்;
வள்ளை = உரலில் தானியங்களை இட்டுக் குற்றும்பொழுது
அயர்வு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்படும் பாட்டு; ஏதில் மாக்கள்
= தொடர்பில்லாத மக்கள் (அயலார்); நுவலல் = சொல்லுதல்;
அழிவது = வருந்துவது; பேதைமை
= அறிவின்மை; பெரும்பூண் = பெரிய அணிகலன்; பொறையன் = சேரன்;
பேஎம் = அச்சம்; முதிர்தல்
= மிகுதல்; கொல்லி = கொல்லிமலை;
குடவரை = மலையின் மேற்குப் பக்கத்தில்;
எழுதுதல் = சிலை வடித்தல், செதுக்குதல்; குறுமகள் = இளம்பெண்
(இங்கு, தலைவியைக் குறிக்கிறது); குறின் = குற்றினால்.
உரை: பெரிய
அணிகலன்களை அணிந்த சேர மன்னனது, மிகுந்த அச்சத்தைத் தரும் கொல்லிமலையில், கரிய
கண்களையுடைய தெய்வமாகிய கொல்லிப்பாவை, அம்மலையின் மேற்குப்
பக்கத்தில் சிலையாக வைக்கப்பட்டுள்ளது. நல்ல அழகுடைய அந்தக் கொல்லிப்பாவையை ஒத்த,
மெல்லிய இயல்பையுடைய தலைவி, பரந்த அடிப்பாகத்தையுடைய
உரலின் திறந்த வாயில் நெல்லை இட்டுக் குற்றும்போது, வள்ளைப் பாட்டில்
தலைவனுடைய பெயரைக் கூறிக் குற்றுவாளாயின், அதைக் கேட்ட இந்த ஊரில்
உள்ள தொடர்பில்லாத மக்கள் பழிச்சொற்களை சொன்னாலும் சொல்லக்கூடும். அறிவில்லாத இந்த ஊர் மக்களின் சொற்களுக்காக நாம் ஏன் வருந்த வேண்டும்?
சிறப்புக் குறிப்பு: கொல்லிமலை வல்வில் ஓரி என்ற
குறுநில மன்னனுக்கு உரியதாக இருந்தது. காரி என்னும் குறுநில மன்னன்
ஓரியை வென்று, கொல்லிமலையைச் சேரனுக்கு அளித்தான் என்பதை அகநானுற்றுப் பாடல் 209 –இல் காணலாம். இம்மலையின்
மேற்குப்பகுதியில் கதிரவனின் ஒளிபடுமாறு மேற்கு நோக்கியவாறு அமைக்கப்பட்ட பாவை
ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை கொல்லிப்பாவை என்று அழைக்கப்பட்டது.
இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்பட்டது.
சிறந்த அழகுடைய தலைவிக்குக் கொல்லிப்பாவையை உவமையாகப் பல பாடல்கள்
குறிப்பிடுகின்றன. உதாரணமாக, குறுந்தொகையின் 100–ஆம் பாடலில் தலைவியின் அழகுக்குக்
கொல்லிப்பாவையை உவமையாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
இப்பாடலில்
கொல்லிமலை முதற்பொருளாகவும், கொல்லிப்பாவை
கருப்பொருளாகவும் வந்துள்ளது. உரிப்பொருள் களவொழுக்கத்தைச் சார்ந்த
புணர்ச்சி என்று தோன்றுகிறது. இவற்றைக் கருத்தில் வைத்துப் பார்க்கும்பொழுது,
இப்பாடல் மருதத்திணையைச் சார்ந்ததாகக் கருதாமல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதுவது
சிறப்பானதாகத் தோன்றுகிறது.
கொல், ஏகாரங்கள்: அசைநிலைகள்.
No comments:
Post a Comment