Tuesday, October 6, 2015

92. தலைவி கூற்று

92. தலைவி கூற்று

பாடியவர்: தாமோதரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது.
கூற்று விளக்கம்: மாலைப்பொழுது வந்துவிட்டது. பறவைகள் தங்களின் குஞ்சுகளுக்காக இரையைத் தங்கள் வாயில் கவ்விக்கொண்டு தங்களின் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன. அதை பார்த்த தலைவிக்குத் தன்னுடைய தனிமையும், மாலைநேரத்தில் தன்னைத் துன்புறுத்தும் காமநோயும் நினைவிற்கு வருகின்றன. தன் கணவர் தன்னோடு இல்லையே என்ற வருத்தத்தைத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே. 

கொண்டுகூட்டு: கொடுஞ்சிறைப் பறவை இறையுற ஓங்கிய நெறி அயல் மராஅத்த, பிள்ளை உள்வாய்ச் செரீஇயஇரைகொண்டமையின், ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து  விரையுமாற் செலவு; (அவை) அளிய தாமே.

அருஞ்சொற்பொருள்: படுதல் = மறைதல்; அகல் வாய் = அகன்ற இடம்; அளிய = இரங்கத்தக்கன; கொடு = வளைந்த ; சிறை = சிறகு; இறையுறல் = தங்குதல்; ஓங்கிய = உயர்ந்த; நெறி = வழி; அயல் = அருகில்; மராம் = கடம்பு மரம்; பிள்ளை = குஞ்சு; உள்வாய் = வாயினுள்ளே; செரீஇய = செருகுவதற்கு; இரை = விலங்கு, பறவை முதலியவற்றின் உணவு ; செலவு = பயணம்.

உரை: வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்குவதற்கேற்ப வழியின் அருகில்  உள்ள கடம்பு மரத்தில் இருக்கும் தம் குஞ்சுகளுக்கு, வாய்க்குள் ஊட்டுவதற்காகத் தம் அலகில் இரையை எடுத்துக் கொண்டமையால், கதிரவன் மறைந்த அகன்ற இடத்தையுடைய வானத்தில் விரைந்து பறந்து செல்கின்றன. அவை இரங்கத் தக்கன.

சிறப்புக் குறிப்பு: பிரிந்து சென்ற தன் கணவர் இன்னும்  வரவில்லையே என்று தலைவி இரங்குகிறாள். மாலைநேரத்தில் தோன்றும் காமநோயும் அவளை வருத்துகிறது.  இந்தப் பறவைகளுக்கு உள்ள குடும்பப் பாசம் தன் கணவிரிடம் இல்லையே என்ற ஏக்கமும் அவளைத் துன்புறுத்துகிறது.


அகத்திணைப் பாடல்களில் உரிப்பொருள் இருக்க வேண்டும். அதாவது, “புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல்என்ற ஐந்து வகையான உரிப்பொருள்களில் ஒன்று இருக்க வேண்டும். ஆனால், இப்பாடலில் உரிப்பொருள் எதுவும் வெளிப்படையாக இல்லை. இப்பாடல் தலைவியின் இரங்கலை மறைமுகமாகக்  குறிப்பதால், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment