Sunday, August 14, 2016

234. தலைவி கூற்று

234. தலைவி கூற்று

பாடியவர்: மிளைப்பெருங் கந்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 146 – இல் காணலாம்.
திணை:
முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கூற்று விளக்கம்: கார் காலம் வந்தது. மாலை நேரத்தில் முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. இதைக் கண்ட தலைவிக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. “அறிவு மயங்கியோர், முல்லைப் பூக்கள் மலரும் நேரத்தை மட்டும் மாலை நேரம் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப்போல் தம் துணைவரைப் பிரிந்திருப்பவர்களுக்கு எந்நேரமும் மாலை நேரம்தான்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.


சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே. 

கொண்டு கூட்டு: மயங்கியோர், சுடர்செல் வானம் சேப்ப,  படர்கூர்ந்து எல் அறு
பொழுதில் முல்லை மலரும் மாலை என்மனார்; துணையிலோர்க்கு நெடுநகர்
குடுமிக் கோழி இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலைபகலும் மாலை.

அருஞ்சொற்பொருள்: சுடர் = கதிரவன்; சேப்ப = சிவக்க; படர் = துன்பம்; எல் = ஓளி; நெடுநகர் = பெரிய நகரம் ; குடுமி = கோழியின் கொண்டை; இயம்பும் = கூவும்; விடியல் = விடியற் காலம்.


உரை: (தோழி!),அறிவு மயங்கியோர், கதிரவன் மறைந்து சென்ற வானம் சிவப்பு நிறத்தை அடைந்து, துன்பம் மிகுகின்ற, ஒளி மங்கிய பொழுதில், முல்லைப்பூ மலர்கின்ற, நேரத்தை மாலைக் காலம், என்று கூறுவர்;  துணைவரைப் பிரிந்தவர்களுக்கு, பெரிய நகரத்தில், உச்சிக் கொண்டையையுடைய கோழி கூவுகின்ற,  பெரிய இருள் விலகுகின்ற விடியற் காலமும், மாலைக் காலமாகும்; பகற் காலமும் மாலைக் காலமாகும்.

233. தலைவன் கூற்று

233.  தலைவன் கூற்று

பாடியவர்: பேயனார். முல்லைத் திணை வளங்களை சிறப்பாகப் பாடுவதில் இவர் மிக்க ஆற்றல் உடையவர். இவர் ஐங்குறுநூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைத்திணைப் பாடல்களையும் (401 – 500), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (233, 359, 400), அகநானூற்றில் ஒரு பாடலும் (234) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பட்டபின்றை (பட்ட பின்றை - களவு வெளிப்பட்ட பிறகு) வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச்             சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய களவொழுக்கம் அனைவருக்கும் தெரிய வந்ததுதலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தான், அதனால், திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்றான். அவன் தேடிய பொருளோடு திரும்பிவரும் பொழுது, தன் தலைவியின் ஊரை மகிழ்ச்சியோடு தேர்ப்பாகனுக்குச் சுட்டிக்காட்டுகிறான்.

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! 

கொண்டு கூட்டு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றிநிரைகோல் குறுந்தொடி தந்தை ஊர் கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஓள் வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினது.

அருஞ்சொற்பொருள்: கவலை = ஒரு வகைக் கிழங்கு; கெண்டிய = தோண்டிய; ஒள் = ஒளி பொருந்திய ; வீ = பூ; தாஅய் = பரவிய ; மூய் = மூடி ; புறவு = முல்லை நிலம்; மிச்சில் = எஞ்சிய பொருள்; வரைகோள் = இவ்வளவு என்று ஒரு எல்லை கொள்ளுதல்; சொன்றி = சோறு; கோல் = திரண்ட.


உரை: (பாக!) திரண்ட சிறிய வளையல்களை வரிசையாக அணிந்துள்ள என் தலைவியினுடைய தந்தையின் ஊர், உயர்ந்தவர்களுக்கு நீரோடு தானம் செய்து கொடுத்த  பிறகு எஞ்சிய பொருளும், யாவருக்கும் எல்லை இல்லாத அளவுக்குச் சோறும் உடையது.  அந்த ஊர், கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகளில்,  ஒளி பொருந்திய கொன்றை மலர் நிறைந்து பரவி இருப்பதால்,  செல்வந்தர்கள், பொன்னையிட்டு வைக்கும் பெட்டியின், மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது.

232. தோழி கூற்று

232. தோழி கூற்று

பாடியவர்:
ஊண் பித்தையார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர் என்றும், இவர் உணவின்மேல் அதிக விருப்பமுடையவராக இருந்ததால், இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
திணை: . பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது (வற்புறுத்தியது = துணிவாகச் சொல்லியது).
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, தலைவனின் பிரிவால் வருந்துகிறாள். அதைக் கண்ட தோழிஅவர் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார்சென்ற வேலை முடியாததால் அவர் இன்னும் வரவில்லை. வேலை முடிந்ததும், அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழிமரல் புகா அருந்திய மா எருத்து இரலை உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய,  யாஅ வரிநிழல் துஞ்சும் மா இரும் சோலை மலை இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்?

அருஞ்சொற்பொருள்: உள்ளுதல் = நினைத்தல்; வாய்ப்பு = வாய்த்தல்; மரல் = ஒரு வகைக் கொடி; புகா = உணவு ; மா = பெரிய; எருத்து = கழுத்து; இரலை = ஆண்மான்; யாஅ = யா மரம்; வரி = புள்ளி; இரும் = பெரிய; துஞ்சும் = தூங்கும்; இறந்தோர் = கடந்து சென்றவர்.

உரை: தோழி! மரல் என்னும் கொடியை உணவாக உண்ட, பெரிய கழுத்தையுடைய ஆண்மான், உரலைப் போன்ற காலை உடைய யானை முறித்து உண்டு எஞ்சிய, யா மரத்தின் புள்ளிகளை உடைய நிழலில் தூங்குகின்ற, மிகப் பெரிய சோலைகளை உடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், நம்மை நினைக்க மாட்டாரோ? அவர் நிச்சயம் நம்மை நினைப்பார். அவர் நம்மை நினைத்தாலும், எதற்காகச் சென்றாரோ அந்த வேலையை முடித்துத் திரும்பிவருவதற்குரிய காலத்தை உணராததால், அவர் இன்னும் வராமல் இருக்கிறார்.

சிறப்புக் குறிப்பு: யா மரத்தின் இலைகளை யானை தின்றதால், எஞ்சியுள்ள இலைகளால் உண்டாகும் நிழல் அடர்த்தியானதாக இல்லை. அதனால்தான், அந்த நிழல்புள்ளிகளையுடைய நிழல்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரல் என்னும் கொடியை உண்ட பிறகு, யாமரத்தின் அடியில் இளைப்பாறும் ஆண்மானைக் கண்டவுடன், தானும் தன் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று தலைவியுடன் இன்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவனுக்குத் தோன்றும் என்பது குறிப்பு.


231. தலைவி கூற்று

231. தலைவி கூற்று 

பாடியவர்:
பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் வாழ்ந்தான். பின்னர் தன் நடத்தை தவறானது என்பதை உணர்ந்தான். இப்பொழுது, தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். தோழி, “உன் கணவர் உன்னோடு வாழ விரும்புகிறார். அவர் தன் தவறை உணர்ந்துவிட்டார். அவரை மன்னித்து ஏற்றுக்கொள்என்று தலைவியிடம் வேண்டுகிறாள். தலைவி, தலைவன்மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தித் தோழியின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள்.

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.

கொண்டு கூட்டு: ஓரூர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; நாணட்டு நல்லறிவு இழந்த காமம் வில்லுமிழ் கணையிற் சென்று சேண் பட, ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப.

அருஞ்சொற்பொருள்: சேரி = தெரு (சேர்ந்து வாழும் இடம் சேரி); ஆர = மிக (நன்றாக); முயங்குதல் = தழுவுதல். ஏதிலாளர் = அயலார்; சுடலை = சுடுகாடு; மன், அசைச்சொற்கள்; அட்டு = அழித்து; கணை = அம்பு;சேண் = தொலை.

உரை: தலைவர் நம்மோடு ஓரே ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார். நாம் இருக்கும்  தெருவிற்கு வந்தாலும் அவர் என்னை நன்றாகத் தழுவ மாட்டார். நாணத்தை அழித்து, நன்மை தீமைகளை உணரும் அறிவை இழந்த என்னுடைய காமம், வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, நெடுந்தூரத்தில் விழுந்து அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுவது போல் நம்மைக் கண்டும் காணாதவர் போல் விலகிச் செல்கிறார்.


சிறப்புக் குறிப்பு: காதல் விரைவில் அழிவதற்கு, வில்லிலிருந்து எறியப்பட்ட அம்பு உவமை.

230. தோழி கூற்று

230.  தோழி கூற்று


பாடியவர்: அறிவுடை நம்பி. இவரும் பாண்டியன் அறிவுடை நம்பி என்பவரும் ஒருவர் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் ஒரு பாடலும் (188), குறுந்தொகையில் ஒரு பாடலும் (230), நற்றிணையில் ஒரு பாடலும் (15), அகநானூற்றில் ஒருபாடலும் (28) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.
கூற்று விளக்கம்: சில நாட்களாக, ஏதோ காரணத்தினால் தலைவன் தலைவியைக் காண வரவில்லை. தான் வராததால் தன்மீது தலைவி கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், “என்னை ஏற்றுக் கொள்ளுமாறு தலைவியிடம் கூறுஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, ”தலைவன் உன்னைக் காண வராமல் இருப்பவன் அல்லன். நான்தான் உன்னிடம் எனக்குள்ள உரிமையினால், அவன் மனம் புண்படும்படி ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அவன்மீது கோபம் கொள்ளாமல் அவனை ஏற்றுக்கொள்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
சின்னாள் அன்ன வரவறி யானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! கொண்கன்வயச்சுறா வழங்கும் நீர் அத்தம் சின்னாள் அன்ன வரவு அறியான். தான் அது துணிகுவன் அல்லன். யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: அம்ம = நான் சொல்வதைக் கேட்பாயாக; கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; துணிகுவன் = துணிபவன்; தகை = உரிமை; கெழுமி = பொருந்தி (அணுகி); நோதக = வருந்துமாறு; வயம் = வலிமை; அத்தம் = வழி; சின்னாள் = சில் + நாள் = சில நாட்கள்; கொல், , அசைச்சொற்கள்.

உரை: தோழி! நீ வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! நெய்தல் நிலத் தலைவன், வலிய சுறா மீன்கள் வழங்குகின்ற நீரை உடைய வழியில்,சில நாட்களாக, முன்னர் வந்து கொண்டிருந்தது போல் வரவில்லை. அவன் தானாகவே அவ்வாறு வராமல் இருப்பதற்குத் துணியக்கூடியவன் அல்லன். நான் என் அறிவின்மையாலும், உன்னிடம் எனக்குள்ள பெரிய உரிமையாலும் அவன் வருந்தி இங்கே வாராதவாறு செய்த ஒரு குற்றத்தை உடையேன்.


Sunday, July 31, 2016

229. கண்டோர் கூற்று

229.  கண்டோர் கூற்று

பாடியவர்: மோதாசானார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:
பாலை.
கூற்று: இடைச் சுரத்துக் கண்டார், தம்முள்ளே சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் சிலர் அவர்களைக் காண்கிறார்கள். தலைவனும் தலைவியும் சிறுவர்களாக இருந்த பொழுது அவர்கள் சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டதையும்,  இப்பொழுது, அவர்கள் இணைபிரியாத காதலர்களாக இருப்பதையும் கண்ட வழிப்போக்கர்கள், அவர்களை சேர்த்துவைத்த ஊழ்வினையை வியந்து பாராட்டுகிறார்கள்.

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

கொண்டு கூட்டு: இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,  காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப, மன்னோமெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய்,  பாலே, நல்லை மன்ற. அம்ம.

அருஞ்சொற்பொருள்: ஐம்பால்  - சங்க காலத்தில், பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்ற ஐந்து வகையாக அலங்கரித்துக் கொள்வது வழக்கிலிருந்தது. அதனால், ஐம்பால் என்பது பெண்களின் கூந்தலைக் குறிக்கும் சொல் ஆகியது; ஓரி = ஆணின் தலைமுடி ; வாங்குதல் = வளைத்து இழுத்தல்; பரிதல் = ஓடுதல்; ஏது = காரணம்; ஏதில் = காரணமில்லாத; செரு = சண்டை; மன்கழிந்தது என்ற பொருளில் வந்த இடைச் சொல்; அம்மஅசைச்சொல்; பால் = ஊழ்வினை; பிணையல் = பின்னிய மாலை.


உரை: சிறுவயதில்,  இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது சிறிய தலைமுடியை வளைத்து இழுத்து ஓடவும், அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும், ஓயாமல், காரணமில்லாமல் இவர்கள் சிறுசிறு சண்டை போட்டுக்கொள்வார்கள்.  இப்பொழுது, மெல்லிய இயல்புடைய மலர்களால் பின்னிய இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்,  மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கிய  ஊழ்வினையே, நிச்சயமாக நீ நன்மையை உடையாய்.

228. - தலைவி கூற்று

228. - தலைவி கூற்று

பாடியவர்: செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.  சங்க காலத்தில், அரசாங்கத்தின் செய்திகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் பணியினைச் செய்தவர்கள் வள்ளுவர் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, இவர் அத்தகைய பணியைச் செய்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: ’கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நடத்துகிறார்கள். தலைவியைக் காணத் தோழி வருகிறாள். திருமணத்திற்குமுன் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதும் அந்தப் பிரிவிவின் பொழுது தலைவி பொறுமையாக இருந்ததும் தோழிக்கு நினைவிற்கு வருகிறது. “திருமணத்திற்குமுன் நீ உன் தலைவைனைவிட்டுப் பிரிந்திருந்த பொழுது, உன்னால்  வருத்தப்படாமல் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது?” என்று தோழி கேட்கிறாள். அதற்குத் தலைவி, “ அவர் வெகு தொலைவில் இருந்தாலும் அவர் நாட்டிலிருந்து கடல் அலைகள் என் சிற்றூருக்கு வந்தன. அது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அதனால், நான் பொறுமையாக இருக்க முடிந்ததுஎன்று மறுமொழி அளிக்கிறாள்.


வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. 

கொண்டு கூட்டு: நம் துறந்து நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும், நெஞ்சிற்கு அணியர் தண்கடல் நாட்டு வீழ்தாழ் தாழை ஊழ்உறு கொழுமுகை குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரைவந்து பெயரும் என்ப

அருஞ்சொற்பொருள்: வீழ் = விழுது; ஊழ்உறு = முற்றிய; கொழுமுகை = வளமான மொட்டு ; குருகு = நாரை; உளர் = கோதுதல்; விரிபு = விரிந்து; தோடு = மடல்; கானல் = கடர்கரைச் சோலை; நண்ணிய = அருகில் உள்ள; முன்றில் = முற்றம்; சேண் = தொலை; அணியர் = அருகில் உள்ளவர்.


உரை: தோழி!  நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்று, வெகு தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், அவர் என் நெஞ்சிற்கு மிக அருகிலேயே இருந்தார். அவர் இருந்தகுளிர்ந்த  கடலையுடைய நாட்டிலிருந்து, விழுதுகள் தொங்கும் தாழையின், முதிர்ந்த, வளமான மொட்டுகள், நாரைகள் கோதுகின்ற சிறகைப் போல, விரிந்து மடல்களாக மலர்கின்ற, கடற்கரைச் சோலைக்கு அருகில் உள்ள நமது  சிற்றூரின் முன்னிடத்தில், அலைகள் வந்து திரும்பிச் செல்லும் என்பர்.