Sunday, November 6, 2016

267. தலைவன் கூற்று

267. தலைவன் கூற்று

பாடியவர்: காலெறி கடிகையார்.  இவர் இயற்பெயர் தெரியவில்லை. கரும்பின் அடிப்பாகம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்பதைகரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்னஎன்று இவர் இப் பாடலில் குறிப்பிட்டதால்  இவர்காலெறி கடிகையார்என்று அழைக்கப்பட்டார்இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது.

கூற்று விளக்கம்: முன்னோரைப் பின்பற்றித்  தானும் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று தலைவன் நினைக்கிறான்பொருள் தேடச் செல்வதானால், தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டும். தலைவியோடு கூடியிருப்பதால் அவன் பெறும் இன்பத்தையும்  வாழ்க்கையின் நிலையாமையையும் எண்ணிப் பார்க்கிறான். பின்னர், தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தவிர்க்கிறான்.

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: நாளும் உறல்முறை மரபின் கூற்றத்து, அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோர்இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசைஇல் தீநீர்க் கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார்.

அருஞ்சொற்பொருள்: இரு = பெரிய: ஞாலம் = உலகம்; பயம் = பயன்; இயைவது = கிடைப்பது; கால் = அடிப்பக்கம்; எறிதல் = வெட்டுதல்; கடிகை = துண்டு; அயில்தல் = உண்ணுதல்; வால் = தூய்மை; எயிறு = பல்; வசை = குற்றம்; தீ = இனிமை; கோல் = திரட்சி; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஒழிதல் = நீங்குதல்; ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம்; நாளும் = நாள்தோறும்; உறல் = அடைதல் (வருதல்); கோள் = கொலை; அறனில் கோள் = இரக்கமின்றி உயிரைக் கொண்டு போவது; நற்கு = நன்கு; அறிந்திசினோர் = அறிந்தவர்கள்.

உரை: (நெஞ்சே!) நாள்தோறும், முறையாக வருகின்ற வழக்கத்தையுடைய கூற்றுவனின் இரக்கமில்லாத கொலைத்தொழிலை நன்றாக அறிந்தோர், பெரிய இடத்தை உடைய இவ்வுலகில் உள்ள பெரிய செல்வம் அனைத்தும் ஒருங்கே கிடைப்பதாயினும்,  கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டதைப் போல் சுவையை உடைய,  தூய்மையான பற்களில் ஊறிய குற்றமற்ற, இனிமையான நீரையும், திரண்ட சிறிய வளையல்களயும் உடைய,  இளைய தலைவி தனித்து இருக்க, பொருள்தேடும்   முயற்சியின் பொருட்டு, தாம் மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:    கூற்றுவனது கொலைத்தொழிலை அறிந்தவர், ”நாம் பிரிந்தால்  இருவருள் ஒருவர் உயிர் இழக்க நேரிடலாம். அதனால் மீண்டும் கூடுதல் இயலாது.“ என்று அஞ்சிப் பொருளுக்காகப் பிரிய மாட்டர்கள்.  இது வாழ்க்கை நிலையமையைப் பற்றிய சிந்தனையினால் பிரிவைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது. தலைவியின் வாயில் ஊறும் இனிய நீரை நினைத்து தலைவன் மகிழ்வது அவன் தலைவியிடம் பெறும் இன்பத்தைக் குறிக்கிறது. அவளைக் குறுமகள் என்று குறிப்பிட்டதால், தலைவி இளமைப் பருவம் உடையவளென்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தலைவன் கூறியது, ”இந்த இளமைப் பருவத்தில் நுகரும் இன்பத்தை இடையீடில்லாமல்  நுகராவிட்டால்  இது பின்னர் பெறுதற்கு அரியதாகும்என்னும் குறிப்பை உடையது. இது தலைவனின் இளமை நிலையாமையைப் பற்றிய சிந்தனையைக் குறிக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிலையாமை, தலைவியிடமிருந்து பெறும் இன்பத்தின் அருமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று சிந்தனைகளாலும் தலைவன் பிரிவைத் தவிர்த்தான்.


266. தலைவி கூற்று

266.  தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 -  இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் கூடிப் பழகினார்கள். திருமணத்திற்குமுன் பிரிந்து  சென்ற தலைவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துகிறாள். பிரிந்து சென்ற தலைவன் ஒரு தூதுகூட அனுப்பவில்லையே என்று தோழியிடம் கூறுகிறாள்.

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 

கொண்டு கூட்டு: மறப்ப அரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர், புள்வாய்த் தூது நமக்கு ஒன்று உரையாராயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணையாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்

அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = பொருந்துதல்; படப்பை = தோட்டம்; வேங்கை = வேங்கை மரம்; பணை = பருத்த; மரீஇ = கூடி, தழுவி; துறத்தல் = பிரிதல்; வல்லியோர் = வல்லமை உடையவர்; புள் =  பறவை; வாய் = வாயிலாக.

உரை: (தோழி!),  மறத்தற்கரிய நம் பருத்த தோளைத் தழுவிய பிறகும், நம்மைப் பிரிந்து செல்லும் மனவலிமையையுடைய  தலைவர், பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு அனுப்பாவிட்டாலும்,  தமக்குத் துன்பம் தரும் இரவில், இனிய துணையாக இருந்த,  தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குக்கூடத்  தூது மொழியை அனுப்புவதை மறந்தாரோ?

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், செய்தியை ஒலையில் எழுதி, அதைப் பறவையின் காலில் கட்டி அனுப்புவது வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.


பிரிவதற்குமுன், தலைவனும் தலைவியும் இரவு நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் சந்திப்பது வழக்கம். இப்பொழுது, தலைவன் பிரிந்து சென்றதால், அவன் இரவில் தனிமையில் இருப்பான். அத்தகைய இரவு நேரங்களில், வேங்கை மரத்தடியில் தன்னோடு கூடி இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்ப்பான் என்று தலைவி நினைக்கிறாள். ஆகவே, கூடி இன்புறுவதற்கு இடமளித்த அந்த வேங்கை மரத்திற்காவது தூது அனுப்பலாமே என்று தலைவி கூறுகிறாள்.  

265. தோழி கூற்று

265.  தோழி கூற்று

பாடியவர்: கருவூர்க்கதப் பிள்ளை. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 64 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது பிரிந்த இடத்து, அவர் பிரிந்தது நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தானெனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி யாரையோ அடிக்கடி சந்திக்கிற்றாள் என்பதை அறிந்த தாய்அவளை வீட்டிலில் காவலில் வைத்தாள். அதனால், தலைவனும் தலைவியும் சந்திக்க முடியவில்லை. தலைவியின் நிலையை உணர்ந்த தோழி, தலைவனைப் பார்த்து,
நீ  இன்னும் எவ்வளவு காலம் களவொழுக்கத்தைத் தொடரப் போகிறாய்?” என்று கேட்டாள். தலைவன் தன்னால் தலைவிக்கு இந்த நிலை வந்தது என்பதைக் குறித்து நாணினான். ”நான் இப்பொழுதே, திருமணத்திற்காகப் பொருள்தேடப் போகப் போகிறேன். நான் விரைவில் திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறினான். ”தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத்தான் சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகா வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! காந்தள் அம் கொழுமுகை காவல் செல்லாதுவண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு  இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்நின்னிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக, இஃது ஆகாவாறு, தான் நாணினன் நன்னர் நெஞ்சத்தன்.

அருஞ்சொற்பொருள்:  அம் = அழகிய; முகை = மொட்டு; கொழுமுகை = வளமான மொட்டு; காவல் = காத்திருத்தல்; தாம் அறி செம்மை = தாம் அறிந்த நடுநிலைமையுள்ள; கடன் = கடமை; தளை = கட்டு; ஏகல் = உயர்ச்சி; வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; நன்னர் = நல்ல; இஃது ஆகா ஆறு = இனி இக்களவொழுக்கம் நடைபெறாமல்.

உரை: தோழி! காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள், தானாக மலரும்வரை காத்திருக்காமல், வண்டுகள் வாய் திறக்கும் சமயத்தில், மூடிய இதழ்களை, வண்டுகளுக்கு  இடம் கொடுத்துத் திறந்து மலர்கின்றன. அது , முன்பு தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டவுடன், எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரின் செயலைப் போல் உள்ளது. அத்தகைய மலர்கள் உள்ள உயர்ந்த மலைகளை உடைய தலைவனிடம்,  உன் நிலையை, நான் எடுத்துரைத்தேன். உடனே, அவன் நாணம் அடைந்தான். இனி, இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.


சிறப்புக் குறிப்பு: சான்றோரைக் கண்டவுடன் இடங்கொடுத்து அவரை வரவேற்கும் கடமையை உணர்ந்த மக்களைப்போல் காந்தள் மலர்கள் வண்டுகளுக்கு இடமளிக்கும் நாடு என்பது தோழி தலைவியின் நிலையைக் கூறியவுடன், தன் கடமையை  உணர்ந்து, நாணி, தலைவியை மணந்துகொள்வதற்குத் தலைவன் முன்வந்தான் என்பதை உள்ளுறை உவமமாகக் குறிப்பிடுகிறது.

264. தலைவி கூற்று

264. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவால் தலைவியின் உடலில் பசலை தோன்றியது. அதைக் கண்டு தோழி கவலைப் படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, “நான் தலைவனின் நட்பின் உறுதியை நன்கு அறிவேன். ஆகவே, நான் இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். என் உடலில் பசலை தோன்றினாலும், என் மன உறுதியால், இந்தப் பசலை நிலைத்து நிற்காமல் மறைந்து போய்விடும்.” என்று கூறுகிறாள்.

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

கொண்டு கூட்டு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலி ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாது. 

அருஞ்சொற்பொருள்: கலி = இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்; கெழீஇய = பொருந்திய; கான்யாறு = காட்டாறு; ஒலித்தல் = தழைத்தல்; இகுதல் = தாழ்தல்; இகுகரை = தாழ்ந்த கரை; பீலி = மயில்தோகை; துயல்வரும் = அசையும்; இயலி = நடந்து; அகவுதல் = கூவுதல்; நயத்தல் = விரும்புதல்; கேண்மை = நட்பு; பயந்தக் காலும் = பசலையைத் தந்தாலும்; பயப்பு = பசலை; ஒல்லாது = பொருந்தாது.

உரை: (தோழி!)  ஒலியுடன் பெய்கின்ற மழையுடன் பொருந்திய, காட்டாற்றின் தாழ்ந்த கரையில்,  தழைத்த நெடிய தோகை அசைய நடந்து, ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்ட நட்பானது, நமக்குப் பசலையைத் தந்தாலும், அப் பசலை நம்முடன் பொருந்தாமல் மறைந்து போய்விடும்.

சிறப்புக் குறிப்பு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகுகரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலிஆடுமயில் அகவும் நாடன்என்றது, கார்காலம் வந்ததைத் தலைவன் உணர்வான் என்பதையும், ஆண்மயில் பெண்மயிலைக் கூவி அழைப்பதை கண்ட தலைவன், தலைவியை நாடி விரைவில் வருவான் என்பதையும் குறிக்கிறது. இதை இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம். மற்றும், முன்பு ஒலியுடன்கூடிப் பெய்த மழை இப்பொழுது காட்டாற்றில் வெள்ளமாக வருவதைக் கண்டு ஆண்மயில் பெண்மயிலை அழைக்கிறது என்றது தலைவன் முன்பு அன்போடு இருந்ததை நினைத்துத் தலைவி இப்பொழுது இன்புறுகிறாள் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.


நயந்தனன் கொண்ட கேண்மைஎன்றது  தலைவன் தலைவியை நாடிவந்து நட்பு கொண்டான் என்பதைக் குறிக்கிறது.  தலைவனுடைய உறுதியான நட்பைத் தலைவி நன்கு அறிந்தவளாகையால், தலைவன், விரைவில் தன்னை நாடி வருவான் என்று எண்ணுகிறாள். அதனால், தன் பசலை நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும் என்று தோழியிடம் கூறுகிறாள்

263. தோழி கூற்று

263. தோழி கூற்று

பாடியவர்: பெருஞ்சாத்தனார்.  இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : "அன்னை வெறியாட்டெடுக்கக் கருதா நின்றாள்; இனி, யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?" எனத் தோழி, தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி களவொழுக்கத்தை விரும்பவில்லை. அவள் தலைவனைத் திருமணம் செய்துகொள்ள ஆவலாக இருக்கிறாள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளாததால் தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். வருத்தத்தால் தலைவி உடல் மெலிந்தாள். தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்ட  தாய், வெறியாட்டு நடத்த முடிவெடுத்தாள். ஒருநாள் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக வந்து மறைவிடத்திலே நிற்கிறான். அவன் காதுகளில் விழுமாறு, தலைவியின் தாய் வெறியாட்டு நடத்தப் போவதைத் தோழி தலைவியிடம் உரைக்கிறாள். அந்தச் செய்தியைக் கேட்டால் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தலைவன் விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே. 

கொண்டு கூட்டு: தோழி! மால்வரை மழை விளையாடு நாடனைப் பிழையேமாகிய நாம் இதற்பட, மறிக்குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇச் செல் ஆற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்தி, ”இவள் பேஎய்க் கொளீஇயள் எனப் படுதல் நோதக்கன்று.

அருஞ்சொற்பொருள்: மறி = ஆட்டுக்குட்டி; குரல் = கழுத்து; பிரப்பு = தானியங்களை பலியாக வைத்தல்; இரீஇ = இருத்தி; கவலை = ஆற்றின் நடுவே உள்ள மணல்மேடு; பல்லியம் = பலவகையான இசைக்கருவிகள்; கறங்க = ஒலிக்க; தோற்றம் = வெளிப்படுதல் (சாமி வந்து ஆடுதல்); பேய்க் கொளீஇயள் = பேயால் கொள்ளப்பட்டவள்; நோதக்கன்று = வருந்தத் தக்கதாகும்; மால் = பெருமை; வரை = மலை.

உரை: தோழி! பெரிய மலையினிடத்து,  மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவனிடம் மாசற்ற கதல் கொண்டவர்களாகிய நாம், இக் களவொழுக்கத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அதை அறியாமல், ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, அதன் குருதியோடு கலந்த தினையை பலியாக வைத்து, ஓடுகின்ற ஆற்று நடுவில் உள்ள மணல்மேட்டில், பலவகையான இசைக் கருவிகள் முழங்க, வெறியாட்டு நடத்தும்பொழுது, வேலன்மீது தெய்வம் வெளிப்படுதலை அன்றி,  நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத,  வேறு பல பெருந்தெய்வங்கள் பலவற்றை ஒருங்கே வாழ்த்தி, இவள் பேயால் கொள்ளப் பட்டாள்.” என்று கூறுவது, வருந்துதற்கு உரியதாகும்.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் காமநோய்க்குப் பரிகாரம் தலைவன்தான். ஆகவே, இங்குவேற்றுப் பெருந்தெய்வம்என்று தோழி கூறியது வஞ்சப் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது

Sunday, October 16, 2016

262. தோழி கூற்று

262. தோழி கூற்று

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : உடன்போக்கு நேர்ந்த தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. (நேர்ந்த = உடன்பட்ட)
கூற்று விளக்கம்: ஊர்மக்கள் தலைவன் தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றிப் பழிச்சொற்கள் பேசுகிறார்கள். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விப்பதற்கு அவள் பெற்றோர்கள் உடன்படவில்லை. தலைவியின் தாய் தலைவியைக் காவலில் வைத்தாள்.  தலைவனும் தலைவியும் தங்களின் சூழ்நிலையை நினைத்து மிகவும் வருந்துகிறார்கள். அவர்களின் நிலையைக் கண்ட தோழி, தலைவனுடன் பேசி அவர்களின் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்தாள். தான் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்ததைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனி லன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 

கொண்டு கூட்டு: ஊஉர் அலரெழ, சேரி கல்லெனஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை தன்மனையானே தானே இருக்க, சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவான்  கரும்புநடு பாத்தி அன்ன பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீர் நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க அவரொடு உணல் யான் ஆய்ந்திசின்

அருஞ்சொற்பொருள்: கல் = ஆரவாரத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு; ஆனாது = இடைவிடாது; அலைக்கும் = துன்புறுத்தும்; எயிறு = பல்; தயங்க = விளங்க; ஆய்ந்திசின் = சிந்தித்து  முடிவு செய்துள்ளேன்; ஆல்அசைச்சொல்; சேய்மை =நெடுந்தூரம் ; நிவந்த = உயர்ந்த; விலங்குதல் = குறுக்கிடுதல்; கவான் = பக்கமலை; நிலைஇய = தங்கிய.

உரை: ஊரில் பழிச்சொல் உண்டாக, தெருவில் உள்ளவர்கள் கல்லென்று ஆரவாரிப்ப,  இடைவிடாமல் நம்மை வருத்துகின்ற,  அறநெஞ்சம் இல்லாத தாய் தன் வீட்டில்,  உன்னைப் பிரிந்து தான் தனியாக இருக்கட்டும்.  நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண், வானத்தைத் தொடும்படி உயர்ந்த,  குறுக்காக வளர்ந்த மலையின் அடிவாரத்தில் உள்ள, கரும்பை நடுவதற்குத் தோண்டிய  குழியைப் போன்ற,  பெரிய ஆண்யானையினது அடிச்சுவட்டில் தங்கிய நீரை, உன் தலைவரோடு,  நெல்லிக்காயைத் தின்ற, முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும்படி நீ உண்ணுவதை நான் நினைத்தேன்.

சிறப்புக் குறிப்பு: நெல்லிக்காய் சற்று புளிப்பாக இருக்கும். அதைத்தின்ற பிறகு நீரைக் குடித்தால், அந்த நீர் இனிப்பாக இருக்கும். அதுபோல், உடன்போக்கில் துன்பம் இருந்தாலும், தலைவனோடு கூடி வாழும் வாழ்க்கை இனிதாக இருக்கும் என்று தோழி கூறுகிறாள்.

261. தலைவி கூற்று

261. தலைவி கூற்று

பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 35 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக இரவில், தலைவியின் வீட்டுக்கு அருகில் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவரது வரவை எதிர்பார்த்து நான் வருந்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்தேன்." என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு, தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். அவள் வருத்தத்தை அறிந்தால், தலைவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று தலைவி நினைக்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி என்  நெஞ்சு புண்ணுற்ற விழுமத் தானே பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக் காய் எண்ணின் சில்பெயல் கடைநாள் சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும் அஞ்சுவரு பொழுதினானும் என்கண் துஞ்சா.  

அருஞ்சொற்பொருள்: பதன் = பதம்; உருகுதல் = மெலிதல்; சிதடு = உள்ளீடின்மை; சிதட்டுக்காய் = உள்ளீஈடு இல்லாத காய்; எண் = எள்ளு; முனைஇய = வெறுத்த; காரான் = எருமை; நள் = செறிந்த; யாமம் = நள்ளிரவு; கரைதல் = ஒலித்தல்; துஞ்சுதல் = தூங்குதல்; காவலர் = நாழிகைக் கணக்கர்; கணக்கு = நாழிகைக் கணக்கு; விழுமம் = துன்பம்.
உரை: தோழி!, வாழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராய்வதைப் போல், ஆராய்ந்து வருந்தி,  நெஞ்சம் புண்பட்ட  துயரத்தால் நான் உறக்கம் இழந்தேன். முன்பு, மிகுதியாக மழை பெய்ததால் பதம் கெட்டு அழிந்து மெலிந்த,  உள்ளீடு இல்லாத காய்களை உடைய எள்ளுச்செடிகளைப் போல், மன உளைச்சலுடன் தன் நிம்மதியை இழந்து,குறைவாக மழை தூறும் கார்காலத்தின் இறுதி நாட்களில்,  சேற்றில் நிற்பதை வெறுத்து,  சிவந்த கண்களை உடைய எருமை,  இருள் செறிந்த நடு இரவில்,  என்று கத்துகின்ற,  அச்சம் உண்டாகும் காலத்திலும், என்னுடைய கண்கள், தூங்காமல் விழித்திருந்தன.
சிறப்புக் குறிப்பு: நாழிகைக் கணக்கர் இரவில் தூங்காமல் நாழிகையைக் கணக்கிட்டு அதை மணியோசையால் ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர். ”நாழிகைக் கணக்கர் உறங்கிவிட்டால், நாழிகை அறிவிப்பது தவறிவிடும். அதுபோல், நான் உறங்கிவிட்டால், தலைவன் வரும் நேரத்தை அறியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் போய்விடும்.” என்று தலைவி கூறுகிறாள். அச்சம் தரும் இரவு நேரத்தில், தான் துயரத்தோடு உறங்காமல் இருப்பதை அறிந்தால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு, தலைவன் காதுகளில் கேட்குமாறு தன் நிலையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பழமழை பொழிந்து எள் பதன் அழிந்து சிதட்டுகாய் எண்ணின்என்றது கார்காலத்தில் மிகுந்த அளவில் மழை பெய்ததால் எள்ளுச்செடிகளில் உள்ள காய்கள் பதம் அழிந்து, அழுகி உள்ளீடு ஒன்றும் இல்லாமற் போனது என்பதைக் குறிக்கிறது. கார்காலத்தில் அதிக மழை பெய்ததால் எருமை இருக்கும் இடத்தில், கார்காலத்தின் இறுதி நாட்களில்கூட சேறு மிகுதியாக இருக்கிறது. சேற்றை விரும்புவது எருமையின் இயல்பு. அத்தகைய எருமைகூட, கார்காலத்தில் அதிகமாகப் பெய்த மழையால் சேற்றில் இருப்பதை வெறுக்கிறது. அதிகமாக மழை பெய்த கார்காலம் முழுவதும் தலைவனுக்காகக் காத்திருந்து, எள்ளுச் செடி தன் உள்ளீட்டை இழந்தது போல், எருமை தன் மன நிம்மதியை இழந்தது போல், தலைவியும் தன் மன வலிமையை இழந்து வருந்தி உறங்காமல் இருக்கிறாள் என்றும் பொருள்கொள்ளலாம்.