Sunday, November 20, 2016

269. தலைவி கூற்று

269. தலைவி கூற்று

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 260 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவி நெய்தல் நிலத்தில் வாழ்பவள். அவள் தந்தை ஒரு மீனவன். சுறாமீன் தாக்கியதால் உண்டாகிய புண்ணால் அவள் தந்தை பல நாட்கள் வீட்டில் தங்கினான். அவனுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தலைவியின் தாயும் வீட்டில் இருந்தாள். அதனால், தலைவனும் தலைவியும் பல நாட்கள் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்நிலையில் தலைவன் ஒருநாள் வந்து தலைவியின் வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் நின்றான். அவன் முன்பு பலமுறை வந்து தலைவியைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றான். இன்றும் தலைவன் தன்னைக் காணாமல் போய்விட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்ட  தலைவி, முன்பு தம் கூட்டத்திற்குத் தடையாக இருந்த தந்தையும் தாயும் இன்று வீட்டில் இல்லை என்பதையும் தன்னைச் சந்திப்பதற்கு இதுவே தக்க சமயம் என்பதையும் யாராவது  தலைவனிடம் சொல்லுவதற்காகத் தூது சென்றால் நான்றாக இருக்கும் என்று அவன் காதுகளில் விழுமாறு தோழியிடம் கூறுகிறாள்.

சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே. 

கொண்டு கூட்டு: ந்தையும் வயச்சுறா எறிந்த புண்தணிந்து, நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்புவிளை கழனிச் சென்றனள்; அதனால், ”பனியிரும் பரப்பின் சேர்ப்பற்கு இனிவரின் எளியள் என்னும் தூதே சேயாறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்று மன், தில்ல

அருஞ்சொற்பொருள்: சேயாறு = சேய் + ஆறு = நெடுவழி; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; அசாவாது = சோர்வுறாமல்; உசாவுநர் = ஆலோசனை கூறுவோர்; தில்லவிழைவுக் குறிப்பு; வயம் = வலிமை; தரீஇய = கொண்டு வருவதற்கு; உப்புவிளை கழனி = உப்பு விளைகின்ற அளம்; பனி = குளிர்; இரு = பெரிய; பரப்பு = அகன்ற இடம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்.

உரை: (தோழி!) வலிமை உடைய சுறாமீன் தாக்கியதால் உண்டான புண் ஆறி,  மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு, என் தந்தை நீல நிறத்தை உடைய பெரிய கடலுக்குப் போய்விட்டான்;  என் தாயும்,  உப்பை விற்று,  வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு,  அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றிருக்கிறாள்; அதனால், குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய நெய்தல் நிலத்தலைவனுக்கு,  இப்பொழுது இங்கே வந்தால் தலைவியை எளிதில் கண்டு மகிழலாம்என்ற தூது மொழியை, விரைந்து செல்வதற்கு வருந்தாமல், நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து சென்று, ஆலோசனை கூறுகின்றவரைப்  பெற்றால் மிகவும் நல்லதாகும். இதையே நான் விரும்புகிறேன்.


சிறப்புக் குறிப்பு: “வயச்சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன்என்றது இதுவரைத் தலைவனைக் காணமுடியாமல் இருந்ததற்குக் காரணத்தைக் குறிப்பிடுகிறது. மற்றும், “நீனிறப் பெருங்கடல்என்றது தந்தை திரும்பிவருவதற்கு நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. தலைவன் வெகுதூரத்தில் இருப்பவனாகையால் விரைந்து செல்லும் தூதுவர் வேண்டும் என்று  தலைவி விரும்புகிறாள்.   தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்வதால், தூது செல்பவர் பிறர் அறியாமல் ஆராய்ந்து தான் சொல்ல வேண்டியதைச் சரியான முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காகஉசாவுநர்என்று குறிப்பிடுகிறாள்

268. தோழி கூற்று

268. தோழி கூற்று

பாடியவர்: கருவூர்ச் சேரமான் சாத்தனார். இவர் இயற்றியதாக ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தலைவன், நள்ளிரவிலும், இடியும் மழையும் இருந்தாலும் தவறாது வந்து தலைவியைச் சந்திக்கிறான். இருவரும் கூடி மகிழ்கிறார்கள். இவ்வாறு களவொழுக்கத்தைத் தொடர்வதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. தலைவன் இரவில் வந்தால் அவனுக்குக் கொடிய விலங்குகளாலும் இடி, மழை போன்றவற்றாலும் இன்னல்கள் நேரிடலாம் என்று தலைவியும் தோழியும் அஞ்சுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், களவொழுக்கம் நீடித்தால், அது ஊராருக்குத் தெரியவரும். ஊராருக்குத் தெரிந்தால் அவர்கள் அலர் பேசுவார்கள். தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் அவளைக் கடுமையான காவலில் வைக்கலாம்தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டால் இந்த இன்னல்கள் எல்லாம் இல்லாமற் போகும். அதுவே சிறந்தது என்ற முடிவுக்குத் தலைவியும் தோழியும் வருகிறார்கள். தலைவனிடம் நேரிடையாகத் திருமணத்தைப் பற்றி பேச முடியாது. ஆகவே, ஒருநாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் பொழுது, “தலைவன் வந்து உன் தோளைத் தழுவி, நீங்கள் இன்புற்றாலும், அவன் இவ்வாறு இரவில் வருவதில் பல இன்னல்கள் உள்ளனவே! அவனை வரச்சொல்லவும் தயக்கமாக இருக்கிறது. வந்தால் போகச் சொல்லுவதற்கும் தயக்கமாக இருக்கிறது.” என்று அவன் காதுகளில் விழுமாறு தோழி கூறுகிறாள். அவள் சொல்லுவதைக் கேட்டால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழியும் தலைவியும் நினைக்கிறார்கள்.

சேறிரோ எனச் செப்பலு மாற்றாம்
வருவி ரோஎன வினவலும் வினவாம்
யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: தோழி! பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்துநெடுமென் பணைத்தோள் அடைந்திசினோர். ”சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம்; ”வருவிரோஎன வினவலும் வினவாம்யாங்குச் செய்வாங்கொல்?

அருஞ்சொற்பொருள்: சேறீரோ = செல்கின்றீரோ; செப்புதல் = கூறுதல்; ஆற்றாம் = இயலாதவராக இருக்கிறோம்; வினவுதல் = கேட்டல்; வினவாம் = கேட்க மாட்டோம்; யாங்கு = எவ்வாறு; கொல்அசைச்சொல்; பை = படம்; துமித்தல் = துண்டித்தல்; ஏறு = இடி; நடுநாள் = நள்ளிரவு; பணை = மூங்கில்.


உரை:    தோழி! படத்தை உடைய பாம்புகளின் பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய, நடுஇரவு என்றுகூட எண்ணிப் பார்க்காமல், இங்கு வந்து, நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற உன் தோள்களைத் தழுவிய தலைவரிடம், ”செல்கின்றீரோ என்று,  சொல்லுவதற்கு வலிமை இல்லாதவர்களாக இருக்கின்றோம்.   ”சென்றால் மீண்டும் வருவிரோ என்று கேட்கவும் முடியவில்லை. என்ன செய்வது?

Sunday, November 6, 2016

267. தலைவன் கூற்று

267. தலைவன் கூற்று

பாடியவர்: காலெறி கடிகையார்.  இவர் இயற்பெயர் தெரியவில்லை. கரும்பின் அடிப்பாகம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்பதைகரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்னஎன்று இவர் இப் பாடலில் குறிப்பிட்டதால்  இவர்காலெறி கடிகையார்என்று அழைக்கப்பட்டார்இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது.

கூற்று விளக்கம்: முன்னோரைப் பின்பற்றித்  தானும் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று தலைவன் நினைக்கிறான்பொருள் தேடச் செல்வதானால், தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டும். தலைவியோடு கூடியிருப்பதால் அவன் பெறும் இன்பத்தையும்  வாழ்க்கையின் நிலையாமையையும் எண்ணிப் பார்க்கிறான். பின்னர், தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தவிர்க்கிறான்.

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: நாளும் உறல்முறை மரபின் கூற்றத்து, அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோர்இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசைஇல் தீநீர்க் கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார்.

அருஞ்சொற்பொருள்: இரு = பெரிய: ஞாலம் = உலகம்; பயம் = பயன்; இயைவது = கிடைப்பது; கால் = அடிப்பக்கம்; எறிதல் = வெட்டுதல்; கடிகை = துண்டு; அயில்தல் = உண்ணுதல்; வால் = தூய்மை; எயிறு = பல்; வசை = குற்றம்; தீ = இனிமை; கோல் = திரட்சி; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஒழிதல் = நீங்குதல்; ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம்; நாளும் = நாள்தோறும்; உறல் = அடைதல் (வருதல்); கோள் = கொலை; அறனில் கோள் = இரக்கமின்றி உயிரைக் கொண்டு போவது; நற்கு = நன்கு; அறிந்திசினோர் = அறிந்தவர்கள்.

உரை: (நெஞ்சே!) நாள்தோறும், முறையாக வருகின்ற வழக்கத்தையுடைய கூற்றுவனின் இரக்கமில்லாத கொலைத்தொழிலை நன்றாக அறிந்தோர், பெரிய இடத்தை உடைய இவ்வுலகில் உள்ள பெரிய செல்வம் அனைத்தும் ஒருங்கே கிடைப்பதாயினும்,  கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டதைப் போல் சுவையை உடைய,  தூய்மையான பற்களில் ஊறிய குற்றமற்ற, இனிமையான நீரையும், திரண்ட சிறிய வளையல்களயும் உடைய,  இளைய தலைவி தனித்து இருக்க, பொருள்தேடும்   முயற்சியின் பொருட்டு, தாம் மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:    கூற்றுவனது கொலைத்தொழிலை அறிந்தவர், ”நாம் பிரிந்தால்  இருவருள் ஒருவர் உயிர் இழக்க நேரிடலாம். அதனால் மீண்டும் கூடுதல் இயலாது.“ என்று அஞ்சிப் பொருளுக்காகப் பிரிய மாட்டர்கள்.  இது வாழ்க்கை நிலையமையைப் பற்றிய சிந்தனையினால் பிரிவைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது. தலைவியின் வாயில் ஊறும் இனிய நீரை நினைத்து தலைவன் மகிழ்வது அவன் தலைவியிடம் பெறும் இன்பத்தைக் குறிக்கிறது. அவளைக் குறுமகள் என்று குறிப்பிட்டதால், தலைவி இளமைப் பருவம் உடையவளென்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தலைவன் கூறியது, ”இந்த இளமைப் பருவத்தில் நுகரும் இன்பத்தை இடையீடில்லாமல்  நுகராவிட்டால்  இது பின்னர் பெறுதற்கு அரியதாகும்என்னும் குறிப்பை உடையது. இது தலைவனின் இளமை நிலையாமையைப் பற்றிய சிந்தனையைக் குறிக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிலையாமை, தலைவியிடமிருந்து பெறும் இன்பத்தின் அருமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று சிந்தனைகளாலும் தலைவன் பிரிவைத் தவிர்த்தான்.


266. தலைவி கூற்று

266.  தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 -  இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் கூடிப் பழகினார்கள். திருமணத்திற்குமுன் பிரிந்து  சென்ற தலைவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துகிறாள். பிரிந்து சென்ற தலைவன் ஒரு தூதுகூட அனுப்பவில்லையே என்று தோழியிடம் கூறுகிறாள்.

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 

கொண்டு கூட்டு: மறப்ப அரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர், புள்வாய்த் தூது நமக்கு ஒன்று உரையாராயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணையாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்

அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = பொருந்துதல்; படப்பை = தோட்டம்; வேங்கை = வேங்கை மரம்; பணை = பருத்த; மரீஇ = கூடி, தழுவி; துறத்தல் = பிரிதல்; வல்லியோர் = வல்லமை உடையவர்; புள் =  பறவை; வாய் = வாயிலாக.

உரை: (தோழி!),  மறத்தற்கரிய நம் பருத்த தோளைத் தழுவிய பிறகும், நம்மைப் பிரிந்து செல்லும் மனவலிமையையுடைய  தலைவர், பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு அனுப்பாவிட்டாலும்,  தமக்குத் துன்பம் தரும் இரவில், இனிய துணையாக இருந்த,  தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குக்கூடத்  தூது மொழியை அனுப்புவதை மறந்தாரோ?

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், செய்தியை ஒலையில் எழுதி, அதைப் பறவையின் காலில் கட்டி அனுப்புவது வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.


பிரிவதற்குமுன், தலைவனும் தலைவியும் இரவு நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் சந்திப்பது வழக்கம். இப்பொழுது, தலைவன் பிரிந்து சென்றதால், அவன் இரவில் தனிமையில் இருப்பான். அத்தகைய இரவு நேரங்களில், வேங்கை மரத்தடியில் தன்னோடு கூடி இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்ப்பான் என்று தலைவி நினைக்கிறாள். ஆகவே, கூடி இன்புறுவதற்கு இடமளித்த அந்த வேங்கை மரத்திற்காவது தூது அனுப்பலாமே என்று தலைவி கூறுகிறாள்.  

265. தோழி கூற்று

265.  தோழி கூற்று

பாடியவர்: கருவூர்க்கதப் பிள்ளை. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 64 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது பிரிந்த இடத்து, அவர் பிரிந்தது நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தானெனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி யாரையோ அடிக்கடி சந்திக்கிற்றாள் என்பதை அறிந்த தாய்அவளை வீட்டிலில் காவலில் வைத்தாள். அதனால், தலைவனும் தலைவியும் சந்திக்க முடியவில்லை. தலைவியின் நிலையை உணர்ந்த தோழி, தலைவனைப் பார்த்து,
நீ  இன்னும் எவ்வளவு காலம் களவொழுக்கத்தைத் தொடரப் போகிறாய்?” என்று கேட்டாள். தலைவன் தன்னால் தலைவிக்கு இந்த நிலை வந்தது என்பதைக் குறித்து நாணினான். ”நான் இப்பொழுதே, திருமணத்திற்காகப் பொருள்தேடப் போகப் போகிறேன். நான் விரைவில் திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறினான். ”தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத்தான் சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகா வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! காந்தள் அம் கொழுமுகை காவல் செல்லாதுவண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு  இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்நின்னிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக, இஃது ஆகாவாறு, தான் நாணினன் நன்னர் நெஞ்சத்தன்.

அருஞ்சொற்பொருள்:  அம் = அழகிய; முகை = மொட்டு; கொழுமுகை = வளமான மொட்டு; காவல் = காத்திருத்தல்; தாம் அறி செம்மை = தாம் அறிந்த நடுநிலைமையுள்ள; கடன் = கடமை; தளை = கட்டு; ஏகல் = உயர்ச்சி; வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; நன்னர் = நல்ல; இஃது ஆகா ஆறு = இனி இக்களவொழுக்கம் நடைபெறாமல்.

உரை: தோழி! காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள், தானாக மலரும்வரை காத்திருக்காமல், வண்டுகள் வாய் திறக்கும் சமயத்தில், மூடிய இதழ்களை, வண்டுகளுக்கு  இடம் கொடுத்துத் திறந்து மலர்கின்றன. அது , முன்பு தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டவுடன், எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரின் செயலைப் போல் உள்ளது. அத்தகைய மலர்கள் உள்ள உயர்ந்த மலைகளை உடைய தலைவனிடம்,  உன் நிலையை, நான் எடுத்துரைத்தேன். உடனே, அவன் நாணம் அடைந்தான். இனி, இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.


சிறப்புக் குறிப்பு: சான்றோரைக் கண்டவுடன் இடங்கொடுத்து அவரை வரவேற்கும் கடமையை உணர்ந்த மக்களைப்போல் காந்தள் மலர்கள் வண்டுகளுக்கு இடமளிக்கும் நாடு என்பது தோழி தலைவியின் நிலையைக் கூறியவுடன், தன் கடமையை  உணர்ந்து, நாணி, தலைவியை மணந்துகொள்வதற்குத் தலைவன் முன்வந்தான் என்பதை உள்ளுறை உவமமாகக் குறிப்பிடுகிறது.

264. தலைவி கூற்று

264. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவால் தலைவியின் உடலில் பசலை தோன்றியது. அதைக் கண்டு தோழி கவலைப் படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, “நான் தலைவனின் நட்பின் உறுதியை நன்கு அறிவேன். ஆகவே, நான் இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். என் உடலில் பசலை தோன்றினாலும், என் மன உறுதியால், இந்தப் பசலை நிலைத்து நிற்காமல் மறைந்து போய்விடும்.” என்று கூறுகிறாள்.

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

கொண்டு கூட்டு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலி ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாது. 

அருஞ்சொற்பொருள்: கலி = இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்; கெழீஇய = பொருந்திய; கான்யாறு = காட்டாறு; ஒலித்தல் = தழைத்தல்; இகுதல் = தாழ்தல்; இகுகரை = தாழ்ந்த கரை; பீலி = மயில்தோகை; துயல்வரும் = அசையும்; இயலி = நடந்து; அகவுதல் = கூவுதல்; நயத்தல் = விரும்புதல்; கேண்மை = நட்பு; பயந்தக் காலும் = பசலையைத் தந்தாலும்; பயப்பு = பசலை; ஒல்லாது = பொருந்தாது.

உரை: (தோழி!)  ஒலியுடன் பெய்கின்ற மழையுடன் பொருந்திய, காட்டாற்றின் தாழ்ந்த கரையில்,  தழைத்த நெடிய தோகை அசைய நடந்து, ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்ட நட்பானது, நமக்குப் பசலையைத் தந்தாலும், அப் பசலை நம்முடன் பொருந்தாமல் மறைந்து போய்விடும்.

சிறப்புக் குறிப்பு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகுகரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலிஆடுமயில் அகவும் நாடன்என்றது, கார்காலம் வந்ததைத் தலைவன் உணர்வான் என்பதையும், ஆண்மயில் பெண்மயிலைக் கூவி அழைப்பதை கண்ட தலைவன், தலைவியை நாடி விரைவில் வருவான் என்பதையும் குறிக்கிறது. இதை இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம். மற்றும், முன்பு ஒலியுடன்கூடிப் பெய்த மழை இப்பொழுது காட்டாற்றில் வெள்ளமாக வருவதைக் கண்டு ஆண்மயில் பெண்மயிலை அழைக்கிறது என்றது தலைவன் முன்பு அன்போடு இருந்ததை நினைத்துத் தலைவி இப்பொழுது இன்புறுகிறாள் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.


நயந்தனன் கொண்ட கேண்மைஎன்றது  தலைவன் தலைவியை நாடிவந்து நட்பு கொண்டான் என்பதைக் குறிக்கிறது.  தலைவனுடைய உறுதியான நட்பைத் தலைவி நன்கு அறிந்தவளாகையால், தலைவன், விரைவில் தன்னை நாடி வருவான் என்று எண்ணுகிறாள். அதனால், தன் பசலை நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும் என்று தோழியிடம் கூறுகிறாள்

263. தோழி கூற்று

263. தோழி கூற்று

பாடியவர்: பெருஞ்சாத்தனார்.  இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : "அன்னை வெறியாட்டெடுக்கக் கருதா நின்றாள்; இனி, யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?" எனத் தோழி, தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி களவொழுக்கத்தை விரும்பவில்லை. அவள் தலைவனைத் திருமணம் செய்துகொள்ள ஆவலாக இருக்கிறாள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளாததால் தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். வருத்தத்தால் தலைவி உடல் மெலிந்தாள். தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்ட  தாய், வெறியாட்டு நடத்த முடிவெடுத்தாள். ஒருநாள் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக வந்து மறைவிடத்திலே நிற்கிறான். அவன் காதுகளில் விழுமாறு, தலைவியின் தாய் வெறியாட்டு நடத்தப் போவதைத் தோழி தலைவியிடம் உரைக்கிறாள். அந்தச் செய்தியைக் கேட்டால் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தலைவன் விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே. 

கொண்டு கூட்டு: தோழி! மால்வரை மழை விளையாடு நாடனைப் பிழையேமாகிய நாம் இதற்பட, மறிக்குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇச் செல் ஆற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்தி, ”இவள் பேஎய்க் கொளீஇயள் எனப் படுதல் நோதக்கன்று.

அருஞ்சொற்பொருள்: மறி = ஆட்டுக்குட்டி; குரல் = கழுத்து; பிரப்பு = தானியங்களை பலியாக வைத்தல்; இரீஇ = இருத்தி; கவலை = ஆற்றின் நடுவே உள்ள மணல்மேடு; பல்லியம் = பலவகையான இசைக்கருவிகள்; கறங்க = ஒலிக்க; தோற்றம் = வெளிப்படுதல் (சாமி வந்து ஆடுதல்); பேய்க் கொளீஇயள் = பேயால் கொள்ளப்பட்டவள்; நோதக்கன்று = வருந்தத் தக்கதாகும்; மால் = பெருமை; வரை = மலை.

உரை: தோழி! பெரிய மலையினிடத்து,  மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவனிடம் மாசற்ற கதல் கொண்டவர்களாகிய நாம், இக் களவொழுக்கத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அதை அறியாமல், ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, அதன் குருதியோடு கலந்த தினையை பலியாக வைத்து, ஓடுகின்ற ஆற்று நடுவில் உள்ள மணல்மேட்டில், பலவகையான இசைக் கருவிகள் முழங்க, வெறியாட்டு நடத்தும்பொழுது, வேலன்மீது தெய்வம் வெளிப்படுதலை அன்றி,  நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத,  வேறு பல பெருந்தெய்வங்கள் பலவற்றை ஒருங்கே வாழ்த்தி, இவள் பேயால் கொள்ளப் பட்டாள்.” என்று கூறுவது, வருந்துதற்கு உரியதாகும்.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் காமநோய்க்குப் பரிகாரம் தலைவன்தான். ஆகவே, இங்குவேற்றுப் பெருந்தெய்வம்என்று தோழி கூறியது வஞ்சப் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது