Sunday, August 13, 2017

383. தோழி கூற்று

383. தோழி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்.
திணை: பாலை.
கூற்று : உடன்போக்கு நேர்வித்து வந்த தோழிநாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது. (நேர்வித்து = தலைவனைச் சம்மதிக்கச் செய்து)
கூற்று விளக்கம்: தலைவனோடு உடன்போகத் தலைவி சம்மதித்ததால், தோழி தலைவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னாள். தலைவனும் குறித்த இடத்திற்கு வந்தான். ஆனால், தலைவி நாணத்தால் வருந்தி, தலைவனோடு உடன்போவதற்குத் தயங்குகிறாள். அப்பொழுது, தோழி, “நீ உடன்பட்டதால்தான் நான் தலைவனை வரச் சொன்னேன். இப்பொழுது, நீ இப்படித் தயங்கினால், நான் என்ன செய்வேன்?” என்று கூறுகிறாள்.
நீயுடம் படுதலின் யான்தர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலும் ஓய்வன அழுங்கத்
தீயுறு தளிரின் நடுங்கி
யாவதும் இலையான் செயற்குரி யதுவே. 
கொண்டு கூட்டு: நீ உடம்படுதலின், யான் தர, குன்ற நாடன்  வந்து குறி நின்றனன். இன்றை அளவை சென்றைக்கஎன்றிகையுங் காலும் ஓய்வன அழுங்க, தீ உறு தளிரின் நடுங்கியான் செயற்குரியது யாவதும் இலை. 

அருஞ்சொற்பொருள்: தருதல் = அழைத்தல் (கூறுதல்); இன்றை அளவை = இன்றைய பொழுது.


உரை: நீ தலைவனோடு உடன்போகச் சம்மதித்ததால் , நான் அழைக்க, மலைநாட்டையுடைய  தலைவன்,  குறித்த இடத்தில் வந்து நின்றான்நீயோ,  இன்றைய பொழுது போகட்டும் என்று கூறுகிறாய். நீ இவ்வாறு காலம் கடத்துவதால், என் கையும் காலும் ஓய்ந்து வருந்தி, நான் நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்குகிறேன். இனி, நான் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை.

382. தோழி கூற்று

382. தோழி கூற்று

பாடியவர்: குறுங்கீரனார்.
திணை: முல்லை.
கூற்று : பருவவரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ”பருவமன்று. வம்புஎன்று வற்புறீஇயது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவந்துவிடுவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. அதன் அறிகுறியாக மழை பெய்கிறது. முல்லைக்கொடிகளில் மலர்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வராததால் வருத்தமடைந்த தலைவியை நோக்கித் தோழி, “ இது கார்காலம் அன்று. இப்பொழுது பெய்யும் மழை காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை. இது கார்காலமானால், தலைவர் வாராமல் இருப்பாரோ?” என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை
முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாரா ரோநம் காத லோரே. 

கொண்டு கூட்டு: தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகை தலை திறந்த நாற்றம் புதல்மிசை பூமலி தளவமொடு, தேம் கமழ்பு கஞலமழை வம்புப் பெய்யும். இது வம்பன்றுகார்ப் பருவமாயின்  நம் காதலோர் வாராரோ?

அருஞ்சொற்பொருள்: தலை திறந்த = அவிழ்ந்த; புதல் = புதர்; மலிந்த = நிறைந்த; தளவம் = செம்முல்லை; கஞலுதல் = நெருங்குதல்; வம்பு = புதுமை; வம்பு பெய்யும் = காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை.

உரை: குளிர்ந்த மழைத்துளியை எதிர்கொண்ட பசுமையான  கொடியாகிய முல்லையின், அரும்புகள் மலர்ந்த மணம், புதரில், பூக்கள் நிறைந்த  செம்முல்லையோடு, தேன்மணக்கும் வண்ணம் நெருங்கித் தோன்றும்படி, மேகம் காலமல்லாத காலத்துப் பெய்யும் மழையைப் பெய்கிறது. இது உண்மையான கார்காலமானால், நம்தலைவர் வாராதிருப்பாரோ?
சிறப்புக் குறிப்பு:  “தலைவர் தாம் கூறிய சொல் தவறாதவர். அவர் வராமல் இருப்பது, இது கார்காலம் அன்று என்பதற்கு அடையாளம். மற்றும்,  முல்லையும் தளவமும் மலர்தலும், மழை பெய்வதும் கார்காலத்திற்குரிய அடையாளம் அல்லஎன்பது தோழியின் கருத்துகார்காலம் வந்துவிட்டது என்பதைத் தோழி அறிந்திருந்தாலும், தலைவியை ஆற்றுவிப்பதற்காக, அது கார்காலம் அன்று என்று கூறினாள். தோழியின் கூற்று,  
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த   
நன்மை பயக்கு மெனின்.                                                                 (குறள் - 292)

என்ற குறளுக்கு எடுத்துகாட்டு என்பது குறிப்பிடத் தக்கது.

381. தோழி கூற்று

381. தோழி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துரைத்தல்)
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால், தலைவி, தன் அழகை இழந்து, தோள் மெலிந்து, துன்பத்தோடு, பசலையுற்றுக் காணப்படுகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “தலைவனோடு கூடி மகிழ்ந்ததின்  பயன், இவ்வாறு வருத்தத்தில் வாடுவதுதானா?” என்று தலைவியிடம் தலைவனைப் பழித்துரைக்கிறாள்.
தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்
அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ
வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற்
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதருந் துறைவனொ
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே.

கொண்டு கூட்டு: வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்பூமலி பொதும்பர் நாள்மலர் மயக்கி விலங்குதிரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயன், தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, பசலையாகி விளிவது கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: கவின் = அழகு; சாஅய் = மெலிய; அல்லல் = துன்பம்; அல்கல் = இரவு; விளிதல் = அழிதல்; நரல் = ஒலி (பறவைகள் தம் துணையைத் தேடி மென்மையாக ஒலிப்பதைக் குறிக்கிறது); கானல் = கடற்கரை; பொதும்பர் = மரம் அடர்ந்த சோலைகள்; நாள்மலர் = அன்று மலர்ந்த மலர்; விலங்குதல் = குறுக்கிடுதல்; இலங்குதல் = விளங்குதல்; நகுதல் = மகிழ்தல்.

உரை: வெண்ணிறமுள்ள நாரைகள் ஒலிக்கின்ற, குளிர்ச்சியும் மணமும் பொருந்திய கடற்கரையிலேயுள்ள, மலர் நிறைந்த சோலையில், அன்று மலர்ந்த மலர்களைக் கலக்கி, குறுக்காக கஓடிவரும் அலைகள்,  உடைந்து செல்கின்ற துறையையுடைய தலைவனோடு, விளங்குகின்ற பற்கள் தோன்றுமாறு சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன், பழைய அழகு அழிய, தோளின் நலம் மெலிய, துன்பத்தையுடைய நெஞ்சோடு, இரவுதோறும் தூங்காமல், பசலையுற்று, நாம் அழிவதுவோ?

சிறப்புக் குறிப்பு: கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை முதலிய மரங்கள், அலைகள் தொடும் அளவுக்குத் தாழ்ந்திருந்ததால், அலைகள், குளிர்ச்சியுடன் மணக்கின்ற புதுமலர்களை கலங்கச் செய்தன

380. தோழி கூற்று

380. தோழி கூற்று
பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை.
திணை: பாலை.
கூற்று : பனிப்பருவங் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவவரவின்கண் வேறுபடுவாளாயினும், கதுமென ஆற்றுவிப்பது அரிதுஎன்னும் கருத்தினளாய், கூதிர்ப் பருவத்துத் தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் முன்பனிக் காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச்சென்றான். இப்பொழுது குளிர்காலத்தில் இறுதி நாட்கள் வந்துவிட்டன. அடுத்து, முன்பனிக் காலம் வந்தால் தலைவி வருந்துவாளே என்று எண்ணிய தோழி, தலைவியை நோக்கி,  “முன்பனிக் காலம் வரப்போகிறது. தலைவர் நம்மை நினைந்திலர்; நாம் என் செய்வேம்!என்று கூறுகிறாள்.

விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர்
வென்றெறி முரசின் நன்பல முழங்கிப்
பெயலா னாதே வானம் காதலர்
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே
யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய
வண்ணத் துய்ம்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. 

கொண்டு கூட்டு: தோழி! விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் வென்று எறி முரசின் நன்பல முழங்கிவானம் பெயல் ஆனாது.  காதலர் நனிசேய் நாட்டர். நம் உன்னலர். ஈங்கைய வண்ணத் துய்ம்மலர் உதிரமுன்னர்த் தோன்றும் பனிக்கடு நாள் யாங்குச் செய்வாம் கொல்?

அருஞ்சொற்பொருள்: விசும்பு = ஆகாயம்; பாஅய் = பரவி; ஆனாது = நீங்காது (விடாது பெய்கின்றது); உன்னுதல் = நினைத்தல்; உன்னலர் = நினையார்; ஈங்கை = கூதிர் காலத்தில் (குளிர் காலத்தில்) மலர்ந்து உதிரும் இயல்புடைய ஒருவகை மலர்ச் செடி; துய் = மலரில் உள்ள ஒருவகைக் கொழுந்து.


உரை: தோழி! வானம் மறையும்படி மேகங்கள் பரவின. வேந்தர்கள் பகைவர்களை வென்று அறைகின்ற முரசத்தைப் போல நன்மையையுடைய பல இடி முழக்கங்களும் வானில் எழுந்தன. மழை விடாது பெய்தது. தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் உள்ளார்; அவர் நம்மை நினைத்தாரல்லர்; ஈங்கையில் உள்ள வண்ணத்தையும் துய்யையும்  உடைய மலர்கள் உதிரத் தொடங்கினஇனி வரப்போகும்  கடுமையான  பனிக்காலத்தில் நாம்  என்ன செய்வோம்!

379. தோழி கூற்று

379. தோழி கூற்று 

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தொடு நின்றது. (நொதுமலர் = காதலனல்லாத பிறர்)
கூற்று விளக்கம்: தலைவனல்லாத வேறு ஒருவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தலைவியின் வீட்டுக்கு வந்தான். அப்பொழுது, தோழி தலைவியை நோக்கி, “முன்பு உன்னிடம் அன்போடு இருந்த தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ?” என்று கேட்டுத் தலைவியின் களவொழுக்கத்தைத் தலைவியின் தாய் முதலியோருக்கு வெளிப்படுத்துகிறாள்.

இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்
பொம்மல் ஓதி நீவி யோனே. 


கொண்டு கூட்டு: தோழி! குன்றத்துப்  பழங்குழி அகழ்ந்த கானவன், கிழங்கினொடு, கண்அகன் தூமணி பெறூஉம் நாடன் செறிதொடிஅறிவு காழ்க்கொள்ளும் அளவை,  நீ எம் இல் வருகுவைஎனப் பொம்மல் ஓதி நீவியோன் இன்று யாண்டையனோ?

அருஞ்சொற்பொருள்: கண் அகன் = அகன்ற இடம்; காழ்க்கொள்ளுதல் = முதிர்தல்; அளவை = காலம்; பொம்மல் = அடர்த்தி; ஓதி = கூந்தல் ( பெண்களின் தலைமயிர்) நீவுதல் = தடவுதல்.

உரை: தோழி! குன்றத்தில், பழைய குழியைத் தோண்டிய வேட்டுவன், கிழங்கோடு,  பெரிய அளவுள்ள, தூய மாணிக்கத்தையும் பெறும் நாட்டை உடைய தலைவன், ”செறிந்த வளையல்களை அணிந்தவளே! உன் அறிவு முதிர்கின்ற காலத்தில்,  நீ எம்முடைய வீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாய்என்று கூறி, உன்னுடைய அடர்த்தியான கூந்தலைத் தடவிய தலைவன்,  இன்று எங்குள்ளானோ?


சிறப்புக் குறிப்பு: நிலத்தைத் தோண்டும் பொழுது, கிழங்கோடு, விலைமதிப்பிற்கரிய மாணிக்கத்தையும் வேட்டுவன் பெற்றதைப் போல், வேட்டையாட வந்த தலைவன் மிகச் சிறந்த தலைவியையும் கண்டு காதல் கொண்டான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்

378. செவிலி கூற்று

378. செவிலி கூற்று

பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது (வழிபட்டது).
கூற்று விளக்கம்: தலைவனுடன் தலைவி உடன்போனதை அறிந்த செவிலித்தாய், தன் மகள் சென்ற வழியில் இன்னல்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று கடவுளை வணங்குகிறாள்.
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே. 

கொண்டு கூட்டு: நம் நீத்து, சுடர்வாய் நெடுவேல் காளையொடு மடம் மா அரிவை போகிய சுரன்ஞாயிறு காயாது, மரம்நிழல் பட்டுமலைமுதல் சிறுநெறி மணல் மிகத் தாஅய், தண் மழை தலையின்று ஆக

அருஞ்சொற்பொருள்: மலைமுதல் = மலை அடியிலுள்ள; தாஅய் = பரவி; தலைதல் = மழைபெய்தல்; தலையின்று ஆக = பெய்வதாக (இன்றுஅசைச்சொல்);  நீத்து = பிரிந்து; சுடர் = ஒளி; மடம் = அழகு; மா = மாந்தளிர் நிறம்; அரிவை = இளம்பெண் ( இங்கு, தலைவியைக் குறிக்கிறது). வாய், முதல்ஏழாம் வேற்றுமை உருபுகள்.


உரை: நம்மைப் பிரிந்து, ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, அழகையும் மாந்தளிர் போன்ற நிறத்தையும் உடைய தலைவி, சென்ற பாலைநிலத்தில், கதிரவனின் வெயில் படாமல், மரத்தின் நிழல் படிந்து, மலையில் உள்ள சிறிய வழியில், மணல் மிகுதியாகப் பரவி,  குளிர்ந்த மழை பெய்வதாக.

Sunday, July 23, 2017

377. தலைவி கூற்று

377. தலைவி கூற்று

பாடியவர்: மோசிக் கொற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மண்ந்துகொள்வதற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான்தலைவனின் பிரிவால் தலைவி உடல் மெலிந்து காணப்பட்டாள். தன் தோற்றத்தில் உள்ள மாற்றங்களைக் கண்டு, தனக்காகக் கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “ என் உடல் மெலிந்தாலும், நான் தலைவனின் நல்லியில்புகளை எண்ணிப் பிரிவைப் பொறுத்துகொண்டிருக்கிறேன். நீ ஏன் இவ்வாறு வருந்துகிறாய்?” என்று வினவுகிறாள்.
மலரேர் உண்கண் மாணலந் தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. 
கொண்டு கூட்டு: தோழி! அறிதற் கமையா நாடனொடு செய்து கொண்டது ஓர் சிறுநல் நட்பு, மலர்ஏர் உண்கண் மாண்நலம் தொலைய வளைஏர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்று; ஆற்றலையே.

அருஞ்சொற்பொருள்: ஏர் = போன்ற; உண்கண் = மை தீட்டிய கண்; மாண் = சிறந்த; தொலைய = நீங்க; வளையேர் = வளை ஏர் = வலையல்கள் பொருந்திய; நலம் = அழகு; மாற்று = பரிகாரம்.


உரை: தோழி! நம்மால் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முடியாத இயல்பினை உடையவன் தலைவன். அவனோடு  நாம் செய்துகொண்டது ஒரு சிறிய நல்ல நட்பு. அந்த நட்பு,  பூவைப் போன்ற  என்  மையுண்ட கண்களின் சிறந்த அழகு நீங்க, வளையையுடைய அழகிய மெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும், அத்துன்பங்கள் தீர்தற்குரிய பரிகாரமாக உள்ளது. அது கருதியே, அவன் பிரிவால் தோன்றிய வருத்தத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், நீ என் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாக இருக்கின்றாயே!