Sunday, August 20, 2017

397. தோழி கூற்று

397. தோழி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவன்  புறப்பட்டான். அதை அறிந்த தோழி, தலைவனை நோக்கி,  “என் தோழியாகிய தலைவி, உன்னுடைய பாதுகாப்பின் எல்லைக்கு உட்பட்டவள். அவள் துன்பங்களைக்  களைபவர் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை. அதனால், விரைவில் திரும்பிவந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!” என்று கூறுகிறாள்.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.

கொண்டு கூட்டு: நனைமுதிர் ஞாழல் தினைமருள் திரள் வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போலஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்பதாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல இன்னா செயினும், இனிது தலையளிப்பினும் என் தோழி நின் வரைப்பினள். தன் உறு விழுமம் களைஞர் இலள். 
 
அருஞ்சொற்பொருள்: நனை = அரும்பு; ஞாழல் = புலிநகக் கொன்றை; சினை = மீனின்  முட்டை; மருள் = போன்ற (உவம உருபு); திரள் = உருண்டை; வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக வந்தது.); ஊதை = குளிர்காற்று; உரவு = வலிமை; உரவு நீர் = வலிய நீர் (கடல்); உடன்று = சினந்து; அலைத்தல் = அடித்தல்; அன்னா - அன்னை என்பது திரிந்து அன்னா என்று வந்தது; தலையளி செய்தல் = கருணை காட்டுதல்; வரைப்பு = எல்லை; விழுமம் = துன்பம்.

உரை: அரும்புகள் முதிர்ந்த ஞாழல் மரத்தின், மீனின் முட்டையைப் போன்ற உருண்டையான  மலர்களை, கீழே உள்ள நெய்தலின் கரிய மலர்களின்மேல் பெய்வதைப்போல, குளிர்காற்று வீசி நீர்த்துளிகளைத் தூற்றும் வலிய கடற்கரைத் தலைவ! தாய் சினந்து அடித்தாலும், வாய்திறந்து அம்மா!” என்று அழும் குழந்தையைப் போல, என் தோழியாகிய தலைவி, நீ அவளுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தாலும், இனிதாக அவளிடம் கருணை காட்டினாலும், அவள் உன்னால்  பாதுக்காக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; அவள் உன்னையன்றித் தனது  துன்பத்தைக் களைபவர்கள் எவரும் இல்லாதவள்.


சிறப்புக் குறிப்புஞாழலின் மலர்கள் கரிய நெய்தல் மலர்களின்மேல் விழுவது, குளிர்காற்று நீர்த்துளிகளை கடலின்மீது தூவுவதுபோல் உள்ளது. தலைவிக்கு குழந்தையும், தலைவனுக்குத் தாயும் உவமைகள்

396. செவிலி கூற்று

396. செவிலி கூற்று

பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட்போக்கிய தாய் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு உடன்சென்றாள். தலைவியின் இளமையையும் பாலைநிலத்தின் வெம்மையையும் நினைத்து, தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைத் தலைவியினுடைய தாயின் கூற்றாகவும் கருதலாம்.

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.

கொண்டு கூட்டு: பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள், இனிமுளிசினை ஓமை குத்திய, உயர்கோட்டு ஒருத்தல்வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்கழைதிரங்கு ஆரிடை அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: மேவுதல் = விரும்புதல்; அயர்தல் = விளையாடுதல்; முளிதல் = உலர்தல்; சினை = கிளை; ஓமை = ஒருவகை மரம்; கோடு = கொம்பு; ஒருத்தல் = விலங்கேற்றின் பொதுப் பெயர் (இங்கு, ஆண்யானையைக் குறிக்கிறது.); வேனில் = கோடைக்காலம்; வரை = மலை; கவாஅன் = மலையின் அடிவாரம்; மழை = மேகம்; ஓர்க்கும் = கேட்கும்; கழை = மூங்கில்; திரங்குதல் = உலர்தல்; ஆரிடை = கடத்தற்கரிய வழி.

உரை: பாலையும் உண்ணாமல்,  பந்து விளையடுவதையும் விரும்பாமல், முன்னர் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இப்பொழுது, கொடிய பாலை நிலவழியில் சென்றாள். அங்கு, உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தைக் குத்திய, உயர்ந்த கொம்பையுடைய ஆண்யானை, கோடை வெப்பம் மிகுந்த மலையின் அடிவாரத்தில் நின்றுகொண்டு, மேகம் முழங்குகின்ற கடுமையான ஒலியைக்  கூர்ந்து கேட்கும், மூங்கில்கள் வெப்பத்தால் உலர்ந்த, கடத்தற்கரிய இடத்தில்,  தன் காதலனோடு செல்லுதல், எளிமையானது என்று உணர்ந்தாளோ?
சிறப்புக் குறிப்பு: பாலையும் உண்ணாமல், தனக்கு இனிய பந்தையும் விரும்பாமல், மகளிர்க் கூட்டத்தோடு விளையாடும் இயல்புடைய இந்த இளம்பெண் எப்படித் தன் தோழிகளைப் பிரியத் துணிந்தாள்!” என்று தலைவியின் செவிலித்தாய் வருந்துகிறாள்.

ஓமைமரத்தின் பட்டையைக் குத்தி அதிலுள்ள நீரையுண்ண விரும்பிய யானை, அது  உலர்ந்திருந்ததால் வருந்தி, இடியின் ஒலியைக்கேட்டு, மழை பெய்யப் போகிறது போலும்  என்று எண்ணி நின்றது. உலர்ந்த கிளையையுடைய ஓமைமரத்தைக் குத்தி வருந்திய  யானையின் நிலை, மூங்கில் உலர்ந்து இருப்பது ஆகியவை கோடைக்காலத்தின் வெம்மையைக் குறிக்கின்றன.

395. தலைவி கூற்று

395. தலைவி கூற்று

பாடியவர்:
இவர் பெயர் தெரியவில்லை.
திணை: பாலை.
கூற்று : வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய, கிழத்தி நாம் ஆண்டுச் சேறும் எனத் தோழிக்கு உரைத்தது. (சேறும் = செல்லுவோம்)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, “ நாம் தலைவன் இருக்கும் இடத்திற்குச் செல்வோம்என்று கூறுகிறாள்.
நெஞ்சே நிறையொல் லாதே யவரே
அன்பின் மையின் அருள்பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே
அரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக்
களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர்
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே. 

கொண்டு கூட்டு: நெஞ்சு நிறை ஒல்லாது. அவர்அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்வன்கண் கொண்டு, வலித்து வல்லுநர் அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக் களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்அஞ்சல்என்மரும் இல்லை. அந்தில் ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படின் நாண் தான் அளிது

அருஞ்சொற்பொருள்: நிறை = ஒரு நிலையில் நிற்றல்; ஒல்லாது = இயலாது; வன்கண் = கொடுமை; வலித்து = துன்புறுத்தி; அரவு = பாம்பு; நுங்குதல் = விழுங்குதல்; இவண்= இங்கு (இவ்வுலகம்); கண்படல் உறங்குதல்; அந்தில் = அசைநிலையாக வரும் இடைச்சொல்; வதிவயின் = இருக்கும் இடம்.

உரை: என் நெஞ்சத்தை ஒருநிலையில் நிறுத்த முடியவில்லை. தலைவர், என்பால் அன்பில்லாமல், அருளைச் சிறந்த பொருளாகக் கருதாமல், இரக்கம் இல்லாமல் என்னைத் துன்புறுத்துவதில் வல்லுநராகிவிட்டார்பாம்பால் விழுங்கப்படும்  திங்களுக்காக  இவ்வுலகத்திலுள்ளோர் பாம்பிடமிருந்து திங்களை மீட்க முயலாதது போல, இங்குள்ளவர்கள் எனது துன்பத்தை நீக்காமல் இனிமையாக உறங்குகின்றனர்.  ”அஞ்சாதேஎன்று கூறி நம்மைத் தேற்றுவார் எவரும் இங்கே இல்லை; ஆதலின், அங்கே அவர் இருக்கும் இடத்திற்கு நாம் நீங்கிச் சென்றால், நம் நாணம் இரங்கத் தக்கதாகும்.


சிறப்புக் குறிப்பு: தலைவன் இருக்கும் இடத்திற்குத் தலைவி அவனை நாடிச் செல்வது, அவளுக்கு இயற்கையாக உள்ள நாணத்தைக் கைவிட்டால்தான் இயலும். அதனால், தன் நாணம் அழியப் போகிறது என்பதை நினைத்துத் தலைவி, “நாணம் இரங்கத் தக்கதுஎன்றாள்.

394. தோழி கூற்று

394. தோழி கூற்று

பாடியவர்: குறியிறையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறுதல்)
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, “ தலைவன் முன்பு மிகவும் இனியவனாக இருந்தான். இப்பொழுது நம்முடைய துன்பத்துக்குக் காரணமானான்என்று தலைவியிடம் தலைவனைப் பழித்துக் கூறுகிறாள்.

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்ந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.

கொண்டு கூட்டு: முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி, நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடிமுன்னாள் இனியதாகிப் பின்னாள் அவர்தினை மேய்ந்தாங்குப்  அவர் நகைவிளையாட்டு, பகையாகின்று.

அருஞ்சொற்பொருள்: முழந்தாள் = முழங்கால்; இரு = கரிய; பிடி = பெண்யானை; கயம் = மென்மை; குழவி = கன்று (இங்கு, யனைக் கன்றைக் குறிக்கிறது.); நறவு = கள்; மலிதல் = மிகுதல்; பாக்கம் = மலைப் பக்கத்து ஊர் (பொதுவாக, பாக்கம் என்ற சொல் கடற்கரையில் உள்ள ஊரைக் குறிக்கும் சொல். ஆனால், இங்கு, பாக்கம் என்ற சொல் மலைப்பக்கத்து ஊரைக் குறிக்கிறது); குறி இறை = சிறிய முன்கை; மறுவரல் = சுழற்சி; மறுவந்து = சுற்றி; நகை விளையாட்டு = கூடி ஆடி மகிழ்ந்தது.


உரை: முழங்காலையுடைய கரிய பெண்யானையின் மென்மையான தலையையுடைய கன்று, கள் மிகுந்த மலைப்பக்கத்து ஊரில், குறத்தி பெற்ற, குறுகிய முன்கையையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடியாடி விளையாடி, முன்பு  இனிதாக இருந்தது. பின்னர், அந்த யானை வளர்ந்த பிறகு, அவர்களுடைய தினையை மேய்ந்தாற் போல,  முன்பு தலைவர் நம்மோடு கூடி ஆடி மகிழ்ந்தது இப்போது பகையாக மாறிவிட்டது.

393. தோழி கூற்று

393. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
கூற்று : தலைமகன் சிறைப்புறமாகத் தோழி அலர் மலிவுரைத்து வரைவு கடாயது. (அலர் மலிதல் ஊரார் கூறும் பழிச்சொற்கள் மிகுதிப்படுதல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின்  வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். தோழி, “தலைவன் உன்னோடு பழகிய காலம் சிறிதாயினும், ஊரில்  உங்களைப் பற்றிய பழிச்சொற்கள் மிகுதியாக உள்ளனஎன்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு கூறிதலைவனும் தலைவியும் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறாள்.

மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: மகிழ்நன் மயங்கு மலர்க் கோதை குழையமுயங்கிய நாள் தவச் சில. அலர், கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினை வல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றைஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது. 

அருஞ்சொற்பொருள்: மகிழ்நன் = மருத நிலத் தலைவன்; மயங்குதல்கலத்தல்; கோதை = மாலை; குழைதல் = கசங்குகுதல்; முயங்குதல் = தழுவுதல்; தவ = மிக; கூகை = கோட்டான்; வாகை = ஓரூர்; பறந்தலை = போர்க்களம்; வினைவல் = செயல்களில் (போரிடுவதில்) வல்ல; ஞான்று = பொழுது; ஆர்ப்பு = ஆரவாரம்.

உரை: பல மலர்களையும் கலந்து  தொடுக்கப்பட்ட உன்னுடைய மாலை கசங்கும்படி, தலைவன் உன்னைத் தழுவிய நாட்கள் மிகச் சிலவேயாகும்ஆனால், அதனால் உண்டான அலர், கோட்டான் பறக்கும், வாகை என்னும் இடத்திலுள்ள போர்க்களத்தில், பசும்பூண் பாண்டியனுக்குத் துணையாகப் போர் புரிந்த, வலிமை மிக்க அதிகன் என்பவன், தனது யானையோடு இறந்த பொழுது, ஒளிவீசும் வாட்படையையுடைய கொங்கர்களின் வெற்றியால் உண்டாகிய ஆரவாரத்தினும் அதிகமாகியது.


சிறப்புக் குறிப்பு: பசும்பூண் பாண்டியன் என்பவனும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவனும் ஒருவனே என்று கருதப்படுகிறது. இப்பாடலில், குறிப்பிடப்பட்ட அதிகன் என்பவன், பசும்பூண் பாண்டியனின் தளபதிகளுள் ஒருவன். கொங்கர்களை அடக்கி வெற்றி பெறுமாறு பசும்பூண் பாண்டியன் அதிகனை வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற போருக்கு அனுப்பினான். அப்போரில், அதிகன் தோல்வியுற்று இறந்தான். அதிகன் இறந்ததால், கொங்கர்கள் ஆரவாரித்தனர்

392. தோழி கூற்று

392. தோழி கூற்று

பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத்  தொடர்ந்து வந்தார்கள். தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதாகத்  தலைவன் உறுதி கூறிய பிறகும் அதற்கான முயற்சிகள் எவற்றையும் அவன் மேற்கொள்ளவில்லை. ஒருநாள், தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வந்து, தலைவியின்  வீட்டுக்கு வெளியே நிற்கிறான். அவன் காதுகளில் கேட்குமாறு, வண்டை நோக்கித் தோழி, “ தலைவி இன்னும் தன் சுற்றத்தரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்என்று கூறுகிறாள்.

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட்
டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற்
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரைசெல னுண்டோல் போலப்
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 

கொண்டு கூட்டு: அம்ம! வாழியோ! அணிச்சிறைத் தும்பிநன்மொழிக்கு அச்சம் இல்லை. அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறியாயின்அரசர் நிரைசெலல் நுண் தோல் போலப் பிரசம் தூங்கும் மலைகிழவோர்க்குகடமை மிடைந்த துடவை அம்  சிறுதினைத்
துளர் எறி நுண்துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ!

அருஞ்சொற்பொருள்: அணி = அழகு; சிறை = சிறகு; தும்பி = வண்டு; வரை = மலை; கடமை = ஒருவகை மான்; மிடைதல் = நிறைதல்; துடவை = தோட்டம்; துளர் = களைக்கொட்டு (களை பறிக்கும் கருவி); துகள் = புழுதி; என்மோ = என்று கூறுவாயாக; நிரை = வரிசை; நுண் தோல் = நுண்ணிய தோலால் செய்யப்பட்ட கேடயம்; பிரசம் = தேனடை; தூங்கும் = தொங்கும்.

உரை: அழகிய சிறகுகளையுடைய தும்பியே! நீ வாழ்க! நான் ஒன்று கூறுவேன். கேட்பாயாக! நல்லவற்றைக் கூறுவதற்கு அஞ்ச வேண்டியதில்லை. தலைவருடய நாட்டிலுள்ள, பெருமைக்குரிய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின், அரசர்களது படைகள் வரிசையாகக் கொண்டு செல்லும்  நுண்ணிய தோலால் செய்யப்பட்ட கேடயங்களைப் போல, தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில், கடமை மான்கள் நிறைந்த, தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையில்,  களை எடுப்பதற்காகக் களைக்கொட்டை வீசி எறிவதால் உண்டாகிய நுண்ணிய புழுபடிந்திருக்கும் களையெடுப்பவரின் தங்கையாகிய தலைவி, தன் சுற்றத்தாரைவிட்டு நீங்காமல் இருக்கிறாள் என்று கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தமரின் தீராள்என்றது, தலைவனைத் திருமணம் செய்துகொண்டு, அவனோடு இல்லறம் நடத்த விரும்பும்  தலைவி இன்னும் தன் சுற்றத்தாரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதைக் குறிக்கிறது. ”தமரின் தீராள்என்பதற்கு, தலைவியின் சுற்றத்தார் அவளைக் காவலில் வைத்தலாகிய கொடுமை செய்தாலும் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் என்றும் பொருள் கொள்ள

391. தலைவி கூற்று

391. தலைவி கூற்று

பாடியவர்: பொன்மணியார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளெனக் கவன்றதோழிக்குக் கிழத்தி அழிந்து (வருந்தி) சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது.  ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வராததால், தலைவி வருந்துவாள் என்று கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் குறித்த காலத்தில் வரவில்லை. கார்காலமும், மாலைப் பொழுதும், மயிகள் கூவுவதும் என் துயரத்தை மிகுதிப்படுத்துகின்றன. நான் எப்படிப் பொறுத்துக்கொள்வேன்?” என்று கூறுகிறாள்.

உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையவே.

கொண்டு கூட்டு: தோழி! உவரி ஒருத்தல் உழாது மடியப் புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்கடிது இடி உருமின் பாம்பு பை அவியஇடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றுவீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலைபூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம் நீர் நனந்தலை புலம்பக் கூஉம். பெரும் பேதைய.

அருஞ்சொற்பொருள்: உவரி = வெறுப்பு; ஒருத்தல் = விலங்கேற்றின் பொது (இங்கு எருதைக் குறிக்கிறது.); புகர் = புள்ளி; புகரி = புள்ளி மான்; புறவு = முல்லை நிலம்; பை = பாம்பின் படம்; தழீஇ = தழுவி; பையுள் = துன்பம்; போழ்தல் = பிளத்தல்; போழ்கண் = பிளவுபட்டதைப் போல் தோன்றும் கண்; மஞ்ஞை = மயில்; தாஅம் = தாவும், பரவும்; நனந்தலை = அகன்ற இடம்; புலம்ப = தனிமையில் வருந்த; பேதைமை = அறியாமை.

உரை: தோழி! எருதுகள் வெப்பத்தை வெறுத்து உழாமல் சோம்பிக்கிடந்தன; மான்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்தியிருந்தன.  மழை இல்லாத முல்லைநிலத்தில், விரைவாக இடிக்கும் இடியோசையால், பாம்புகளின் படம் அழியஇடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையால், தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், மலரையுடைய கொம்பிலிருந்த, பிளவுபட்டதைப் போல் தோன்றும்  கண்களையுடைய மயில்கள், பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடங்களில் தனிமைத் துயரம் வருத்துமாறு கூவுகின்றன. அவை மிகுந்த அறியாமையுடையவை.


சிறப்புக் குறிப்பு: குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்தும் 4 அடி முதல் 8 அடிகளைக் கொண்டவை. ஆனால், அதற்கு விதிவிலக்காக 307 - ஆவது பாடலும் இப்பாடலும் ஒன்பது அடிகளைக் கொண்டவையாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.