Monday, February 6, 2017

302. தலைவி கூற்று

302. தலைவி கூற்று

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 164 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். இந்தப் பிரிவைத் தலைவி எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ என்று தோழி கவலைப் படுகிறாள். அதைக் கண்ட தலைவி, “தலைவனின் பிரிவினால் உண்டாகிய துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறந்து போகலாம் என்றால், அதற்கும் அச்சமாக இருக்கிறது. ஊரார் எங்கள் இருவரையும் பற்றிப் பழிச்சொற்கள் பேசுவதால், தலைவன் என்னை நேரில் காண வருவதற்கு அஞ்சுகிறான் என்று நினைக்கிறேன். அவன் என் நினைவிலே மட்டும் வருகிறான்.” என்று தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே. 

கொண்டு கூட்டு: தோழி ! அருந்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்  பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்.  அன்னோ! இன்னும் நன்மலை நாடன், இருவரும் பிரியா நண்பினர் என்னும் அலரதற்கு அஞ்சினன் கொல்லோ? பலருடன் துஞ்சு ஊர் யாமத்தானும் என் நெஞ்சத்து அல்லது வரவறியானே. அது புரைத்தோ? உரைத்திசின்!

அருஞ்சொற்பொருள்: உரைத்திசின் = உரைப்பாயாக; புரை = உயர்வு; அன்று அசைச்சொல்; உழத்தல் = வருந்துதல்; அதன்தலை = அதற்கும் மேல்; பெரும்பிறிது = இறப்பு; அன்னோ = ஐயோ; துஞ்சும் = ஆழ்ந்து உறங்கும்; யாமம் = நள்ளிரவு.

உரை: தோழி! தலைவனின் பிரிவால் உண்டாகிய, பொறுத்தற்கரிய துயரத்தால் நாம் வருந்துதவதற்குரிய  ஆற்றல் இல்லாதவரானோம்; அதற்கும் மேல், இறப்பதை நினைத்தால்  அதைவிட அதிகமாக  அஞ்சுகின்றோம்; ஐயோ! மேலும், நல்ல மலைநாட்டை உடைய தலைவன், ”நாங்கள் இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையவர்கள் என்று பிறர் கூறும்,  பழிச்சொற்களுக்கு அஞ்சினனோ? ஊரிலுள்ளோர் பலரும் ஒருங்கே நன்கு ஆழ்ந்து உறங்குகின்ற நள்ளிரவிலும், அவன்  என் நினைவிலே வருகின்றானே தவிர, நேரிலே வருவதில்லை. அவன் அவ்வாறு இருப்பது உயர்வுடையதாகுமோ? நீயே கூறுவாயாக!
சிறப்புக் குறிப்பு: ஊரார் கூறும் பழிச்சொற்கள்தான் தங்கள் காதலை வளர்த்துத் தங்கள் உயிரைக் காப்பதற்கு வழி செய்கிறது என்ற உண்மையைத்  தலைவி அறிந்துள்ளாள். ஆனால், தலைவன் ஊரார் கூறும் பழிச் சொற்களுக்கு அஞ்சுகிறான் என்று தலைவி எண்ணுகிறாள்.
ஊராரின் பழிச்சொற்களுக்காகப் பெண்கள் வருந்தினாலும், அவர்கள் அந்தப் பழிச்சொற்களால் தங்கள் களவொழுக்கம் வெளிப்பட்டு, தங்கள் காதல் திருமணத்தில்  நிறைவு பெறும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நூளுகிந் நோய்.                                                                     (குறள் – 1147)


பொருள்: இக் காமநோயாகிய பயிர், ஊரார் கூறும் பழிச்சொற்களை உரமாகவும், அன்னை கூறும் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு  வளர்கின்றது.

301. தலைவி கூற்று

301.  தலைவி கூற்று 

பாடியவர்: குன்றியனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 50 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வைப்ப, “ஆற்ற கிற்றியோ?” என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வரைவிடை வைத்தல்திருமணத்திற்குப் பொருள் தேடத் தலைவன் பிரிந்து செல்லும் காலம்; ஆற்றகிற்றியோ? – பொருள் தேடித் தலைவன் வரும்வரை உன்னால் ஆற்றியிருக்க முடியுமா?)
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். ”தலைவன் பிரிவை உன்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறதா?” என்று தோழி கேட்கிறாள். அதற்குத் தலைவி, “தலைவன் வாராவிட்டாலும், அவனுடைய தேர் வருவது போன்ற ஒலியை நான் கேட்கிறேன். அதனால், அவன் வருவான் என்னும் நினைவினால் நான் என்னுடைய உறக்கத்தை இழந்து வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.

முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.

கொண்டு கூட்டு: தோழி! முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமடல் இழைத்த, சிறுகோல் குடம்பைக் கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல் வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல் மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் வாராதாயினும் வருவது போலச் செவிமுதல் இசைக்கும் அரவமொடு என் கண் துயில் துறந்தன.
அருஞ்சொற்பொருள்: முழவு = முரசு; அரை = அடிமரம்; தடவுவளைவு, பெருமை; பெண்ணை = பனை; குடம்பை = கூடு; காமர் = அழகு; கடுஞ்சூல் = நிறை கருப்பம்; வயவு = கருப்பத்தினால் உண்டாகிய நோய்; பெடை = பெண்பறவை; அகவும் = அழைக்கும் (கூவும்); பானாள் = நள்ளிரவு; கங்குல் = இருள்; மன்றம் = பொதுவிடம்; போழ்தல் = பிளத்தல்; இசைக்கும் = ஒலிக்கும்; அரவம் = ஒலி; துறந்தன = இழந்தன.
உரை: தோழி! முரசைப்போன்ற அடிமரத்தையுடைய, பருத்த பனையின், கொழுவிய மடலில், கரிய கால்களையுடைய அன்றில் பறவைகள் சிறிய சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டி இருக்கின்றன. அக்கூட்டிலுள்ள, அழகிய, நிறை கருப்பத்தால்  உண்டான நோயையுடைய பெண் பறவை, ஆண்பறவையை அழைக்கின்ற, இருள் நிறைந்த நள்ளிரவில், தனது சக்கரத்தால் பொதுவிடத்தின் தரையைப் பிளந்து கொண்டு வரும், நிறைந்த மணிகளையுடைய தலைவனது நெடியதேர் வராவிட்டாலும், வருவது போல, என் காதில் ஒலிக்கும் ஒலியினால், என்னுடைய கண்கள், தூக்கத்தை இழந்தன.

சிறப்புக் குறிப்பு: இரவில் அன்றில் பறவைகள் இன்பமாக வாழ்கின்றன. அவற்றைப்போல் தன் தலைவனோடு கூடி இன்பமாக வாழும் வாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தோடு தலைவன் நினைவாகவே தலைவி இருக்கிறாள். இரவில்  தலைவனது தேர் வருவதால் எழும் மணியோசையை முன்பு கேட்டு அறிந்தவளாதலால், அந்த நினைவால் தேர்மணியின் ஒலி கேட்பதாகத் தலைவிக்குத் தோன்றுகிறது.

Sunday, January 22, 2017

300. தலைவன் கூற்று

300.  தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிவச்சமும் வன்புறையும் (வன்புறை = உறுதிமொழி கூறித்  தலைவன் தலைவியை ஆற்றுவித்தல்.)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்தித்தான்; காதல் கொண்டான்; கூடி மகிழ்ந்தான். தலைவியை நோக்கி, “நான் உன்னைப் பிரிய மாட்டேன்.” என்று கூறினான். அதைக் கேட்ட தலைவி, அப்பொழுதுதான் பிரிவு என்ற ஒன்று உண்டு என்பதை உணர்ந்தாள். ஆகவே, அவள் அஞ்சினாள். “நீ அஞ்சாதே! இவ்வுலகத்தையே பெறுவதாயினும் நான் உன்னை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.” என்று உறுதிமொழி கூறித் தலைவன் தலைவியை ஆற்றுவிக்கிறான்.

குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. 

கொண்டு கூட்டு: குவளை நாறுங் குவைஇரும் கூந்தல்ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண்பல் தித்தி மாஅயோயே!
நீ, ”அஞ்சல்என்ற என் சொல் அஞ்சலையான், குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் நின்னுடை நட்பு விடல் சூழலன். 

அருஞ்சொற்பொருள்: குவை = திரட்சி; பொதிதல் = நிறைதல்; துவர் = சிவப்பு; குண்டு நீர் = ஆழமான நீர்; கொங்கு = பூந்தாது; தித்தி = தேமல்; மாஅயோயே = மாந்தளிர் போன்ற நிறமுடையவளே; குவவுதல் = குவிதல்; சேக்கும் = தங்கும்; மண்டிலம் = உலகம்; சூழலன் = நினைக்க மாட்டேன்.
உரை: குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம் வீசும் இனிமை நிறைந்த சிவந்த வாயையும், ஆழமான நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற நுண்ணிய பல தேமற் புள்ளிகளையுமுடைய, மாந்தளிர் போன்ற நிறமுடையவளே! “நான் பிரிவேன் என்று நீ அஞ்சாதே!” என்று கூறும் என் உறுதிமொழியைக் கேட்டு நீ அஞ்சாதேகுறுகிய காலையுடைய அன்னப் பறவைகள்,  மணல் குவிந்துள்ள இடத்தில் தங்கியிருக்கும் கடல் சூழ்ந்த நிலத்தைப் பெறினும், நான் உன்னுடைய நட்பைக் கைவிடுவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.

சிறப்புக் குறிப்பு: குவளை மலர் போன்ற மணமுள்ள கூந்தலால் மூக்குக்கு இன்பமும், ஆம்பல் மலரின் மணம் வீசும் சிவந்த வாயில் ஊறும் இனிமை நிறைந்த நீரால் நாக்குக்கு இன்பமும், அந்த வாயால் அவள் கூறும் சொற்களால் செவிக்கு இன்பமும், தேமல் நிறைந்த மாந்தளிர் போன்ற மேனியால்  காண்பதற்கு இன்பமும், உடலுக்கு இன்பமும் தலைவியிடத்தில் தான் பெற்றதைத் தலைவன் நினைவுகூர்கிறான்.

299. தலைவி கூற்று

299.  தலைவி கூற்று

பாடியவர்: வெண்மணிப் பூதி.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் வீட்டுக்கு வெளியே, தலைவியைக் காண்பதற்காக வந்து நிற்கிறான். தலைவன் தன்னைக் கூடிய பிறகு, பிரிந்து சென்றால், தன் தோள்கள் மெலிவதாகவும், திருமணம் செய்துகொண்டால், பிரிவு இல்லாமல் இருக்கலாம் என்றும், தலைவன் காதுகளில் கேட்குமாறு, குறிப்பாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே. 

கொண்டு கூட்டு: தோழி! முதுநீர்ப் புணரி திளைக்கும், புள்ளிமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்புணர்குறி வாய்த்த ஞான்றை, கொண்கன் கண்டன மன் எம் கண்ணே;  அவன் சொல் கேட்டன மன் எம் செவியே; மற்று அவன் மணப்பின் மாண் நலம் எய்தி, மற்று அவன் தணப்பின்  என் தட மென்தோள் நெகிழ்பஇது மற்று எவன்?

அருஞ்சொற்பொருள்: முதுநீர் = கடல்நீர்; புணரி = கடல் அலைகள்; திளைத்தல் = பொருதல்; புள் = பறவை; இமிழ்தல் = ஒலித்தல்; எக்கர் = மணல்மேடு; கானல் = கடற்கரைச் சோலை; ஞான்று = பொழுது; கொண்கன் = நெய்தல் நிலத்தலைவன்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்; புணர்குறி = முதன்முதல் இருவரும் கண்டு காதல்கொண்டு கூடியது; ஞான்று = பொழுது; நெகிழ்தல் = தளர்தல் (சோர்தல்).

உரை:  தோழி! நிலத்தைவிடப் பழையதாகிய கடலின் அலைகள் மோதுகின்ற, பறவைகள் ஒலிக்கின்ற, கடற்கரைச் சோலையிலுள்ள, பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னைமரங்கள் வளர்ந்த, மணல்மேட்டில் உள்ள நிழலில், முதன்முதல் இருவரும் கூடி மகிழும் வாய்ப்புக் கிடைத்த பொழுது, எம் கண்கள் நெய்தல் நிலத்தலைவனைப் பார்த்தன;  எம்முடைய காதுகள் அவனுடைய சொற்களைக் கேட்டன.  எமது பரந்த மெல்லிய தோள்கள், அவன் எம்மைக் கூடினால், மிகச் சிறந்த அழகைப்பெற்று, அவன் பிரிந்தால் அவை சோர்ந்துவிடுகின்றன. இது என்ன வியப்பு!

சிறப்புக் குறிப்பு: தலைவனைக் கண்ட கண்ணும், கேட்ட செவியும் எவ்விதமான வேறுபாடும் இல்லாதிருக்கத் தோள்கள் மட்டும் தம் மெலிவைப் பிறர் அறியும்படி நெகிழ்ந்தன.“என்று தலைவி கூறுகிறாள்.  களவொழுக்கத்தின் பொழுது, பிரிதலும் கூடுதலும் இருப்பதால் அவள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் மாறிமாறி அனுபவிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால், வருத்தம் இல்லாமல் இருக்கலாம் என்று தலைவனுக்கு கேட்குமாறு, தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

298. தோழி கூற்று

298.  தோழி கூற்று 
பாடியவர்: பரணர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : கிழத்திக்குத் தோழி குறைமறாமற் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணை விரும்புகிறான். ஆனால், அவனால் அவளைக் காண முடியவில்லை. அவன் அடிக்கடி தலைவி இருக்கும் தெருவிற்கு வருகிறான். தலையின் தோழியிடம் இனிமையாகப் பேசுகிறான். அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோழி எண்ணுகிறாள். “தலைவனின் நிலையை நினைத்துப் பார். அவன் நாள்தோறும் என்னிடத்தில் வந்து உன்னைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறான். ஆனால், அவன் மனதிலே வேறு எதையோ எண்னுகிறான் என்று நினைக்கிறேன்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்விட் டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 
 கொண்டு கூட்டு: தோழி சேரி சேர மெல்ல வந்துவந்துஅரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் நினையாய்.
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானஅவன் நெடும் புறநிலை பிறிதொன்று குறித்தது.

அருஞ்சொற்பொருள்: வைகல் = நாள்; உறையும் = தங்கும்; பைதல் = துன்பம்; நோக்கம் = பார்வை; பின்றை = பின்நிற்றல்; கடை = முனை; அகவன் மகளிர் = கட்டுவிச்சி (குறி சொல்லும் பெண்); பிடி = பெண்யானை; மடப்பிடி = இளம் பெண்யானை; மான = போல; புறநிலை = நீண்ட காலமாகக் கெஞ்சிக் கேட்கும் நிலை.
உரை: தோழி! தலைவன் நம் சேரிப்பக்கம் அடிக்கடி வருகிறான். அவன் அருமையாக வாய்திறந்து, நம் சிந்தைக்கினிய சொற்களைப் பேசுகிறான். நாள்தோறும், தான் நினைத்தது ஒன்றும் கைகூடாததால் தனது உடலின் நிறம் வேறுபட்டுத் தோன்றுகிறது. அத்தலைவனது, துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை, நினைத்துப் பார்ப்பாயாக. இனிய கடுங்கள்ளையுடைய அகுதைக்குப் பின்நிற்கும்வெண்ணிறமான முனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறுகின்ற,  இளமை பொருந்திய பெண்யானையாகிய பரிசிலைப் போல, அவன் நீண்ட காலமாக நம்மைக் கெஞ்சிக் கேட்டு நிற்பது, வேறு எதையோ ஒன்றைக் கருதியதாகும்.

சிறப்புக் குறிப்பு: ”இன் கடுங்கள் என்றது உண்ணுவதற்கு இனிமையும் மயக்கம் தருவதில் கடுமையும் உடைய கள் என்பதைக் குறிக்கிறது. வெள்ளிய நுனி என்றது வெள்ளியால் செய்த பூண் கட்டிய நுனியைக் குறிக்கிறது. “பிரிதொன்று குறித்ததுஎன்றது தலைவன் மனதில் வேறு எதையோ நினைக்கிறான் என்பதைக் குறிக்கிறது. இங்கு, “வேறு எதையோஎன்றது தலைவன் மடலேறக்கூடும் என்பதைக் குறிக்கிறது. யானையைப் பரிசாகப் பெறுவதற்காக, அகவன் மகள் அகுதையிடம் வந்து பாடுவாள்; குறிசொல்லுவாள். ஆனால், அவள் தனக்கு யானையைப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்று வாய்விட்டுக் கூறமாட்டாள். தலைவனின் செயலும் அத்தகையதே என்று தோழி கூறுகிறாள்.

297. தோழி கூற்று

297.  தோழி கூற்று 
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி வரைவு மலிந்தது. (மலிந்ததுதிருமணம் செய்துகொள்ளத் தூண்டுவது)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்துவந்தார்கள். தலைவி தலைவனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகியது. தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விக்கத் தலைவியின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டர்கள் என்பதைத் தோழி தெரிந்துகொண்டாள்.  ஆகவே, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே நீ செய்யக் கூடிய நல்ல செயல்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே. 

கொண்டு கூட்டு: அவ் விளிம்பு உரீஇய, கொடுஞ்சிலை மறவர் வை வார் வாளி விறல் பகை பேணார் மாறுநின்று இறந்த ஆறுசெல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர் நனந்தலை நல்ல கூறிபுணர்ந்து உடன் போதல் பொருள்என அவர் உணரா ஊங்கு மன்ற உணர்ந்தேன்.

அருஞ்சொற்பொருள்: விளிம்பு = நாண்; உரீஇய = உருவி இழுத்துக் கட்டிய; சிலை = வில்; வை = கூர்மை; வார் = நீண்ட; வாளி = அம்பு; விறல் = வலி; பேணல் = காத்தல்; மாறுநின்று = எதிரே நின்று; வம்பலர் = வழிப்போக்கர்; உவல் = தழை; பதுக்கை = குவியல்; நனந்தலை = அகன்ற இடம்.

உரை: மேல் விளிம்பை இழுத்துக் கட்டிய கொடிய வில்லையுடைய மறவர்களின் கூர்மையான நீண்ட அம்பின் வலிய பகையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளாமல், எதிரே நின்று இறந்த வழிப்போக்கர்கள்மீது,  தழையை இட்டுவைத்த குவியல்கள், ஊரைப்போலத் தோன்றுகின்ற, மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற பலை நிலத்தில், நல்ல சொற்களைக் கூறித் தலைவன் உன்னை உடன்போக்கில் அழைத்துச் செல்வதுதான் அவன் செய்யத்தக்க செயல் என்று, அவன்  உணர்வதற்கு முன்னர், நான் அதை  உறுதியாக உணர்ந்தேன்.

296. தலைவி கூற்று

296.  தலைவி கூற்று

பாடியவர்: பெரும்பாக்கனார்.
திணை: நெய்தல்.
கூற்று : காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களொவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். சிலநாட்களாகத் தலைவனைக் காண முடியவில்லைஅதனால் தலைவி வருத்தம் அடைந்தாள்; உடல் மெலிந்தாள். இன்று, அவன் வந்து தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான்அவன் வந்திருப்பதை அறிந்த தலைவி,  ”தலைவனைக் கண்டால், என்னை இவ்வாறு வருத்தம் அடையச் செய்வது முறையா என்று அவனைக் கடுமையாகக் கடிந்துரைக்க வேண்டாம்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.

 கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! புன்னை அலங்குசினை இருந்த அம்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையின், செறுவில்கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின், முன்நின்று,  ”தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ?” என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி

அருஞ்சொற்பொருள்: அலங்குதல் = அசைதல்; சிறை = இறகு; உறுகழி = பெரிய நீர்நிலைகள்; செறு = நெல்வயல்; கள் = மலர்த்தேன்; நயக்கும் = விரும்பும்; தண்ணம் = தண்+அம் = குளிர்ந்த அழகிய; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; கடிய = கடுமையான; கழறல் = இடித்துக் கூறுதல்; ஓம்புதல் = தவிர்த்தல்; தொடியோள் = வளையல் அணிந்தவள்; இன்னள் = இத்தன்மையை உடையவள்; ஓம்புதல் = தவிர்த்தல்.
உரை: தோழி! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! புன்னைமரத்தின் அசையும் கிளையிலிருந்த அழகிய சிறகையுடைய நாரை, உப்பங்கழியில்  உள்ள சிறுமீனை உணவாகக் கொள்வதை வெறுத்ததால், வயலிலுள்ள, தேன் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு உண்ண விரும்புகின்ற, குளிர்ந்த அழகிய கடற்கரைத் தலைவனைக் கண்டால், அவன் முன்னே நின்று, ”வளையலை அணிந்த தலைவி இத்தன்மை உடையவளாகும்படி, பிரிந்து செல்லுதல், உமக்குத் தகுமோ?” என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைப்பதை, நீ தவிர்ப்பாயாக.
சிறப்புக் குறிப்பு: நாரை உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவன்என்றது, “மருதநிலத்திற்குரிய நாரை, நெய்தல் நிலத்தில் உள்ள சிறிய மீன்களைப் பிடித்து உண்ணுவதை வெறுத்ததால், அவ்விடத்தைவிட்டு அகன்று, மருதநிலத்திற்குச் சென்றதைப்போல், தலைவன் களவொழுக்கத்தின் பொழுது தலைவியைச் சந்திப்பது அரிதாக இருப்பதால், அவளிடமிருந்து அவன் பிரிந்திருக்க விரும்புகிறான்என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.
தொடியோள் இன்னளாகஎன்றது  வளையல்களை அணிந்த தலைவி, வருத்தத்தால் உடல் மெலிந்தாள். அவள் உடல் மெலிந்ததால் வளையல்கள் நெகிழ்ந்து இந்த நிலைக்கு உள்ளானாள்.” என்பதைக் குறிக்கிறது.

தோழி தலைவனைக் கடிந்துரைக்கக் கூடாது என்பது தலைவியின் நோக்கம் அன்று. வீட்டுக்கு வெளியே நிற்கும் தலைவன் தன் நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்று தலைவி விரும்புவதால் அவள் தோழியிடம் அவ்வாறு கூறுகிறாள்