Sunday, January 22, 2017

298. தோழி கூற்று

298.  தோழி கூற்று 
பாடியவர்: பரணர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : கிழத்திக்குத் தோழி குறைமறாமற் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணை விரும்புகிறான். ஆனால், அவனால் அவளைக் காண முடியவில்லை. அவன் அடிக்கடி தலைவி இருக்கும் தெருவிற்கு வருகிறான். தலையின் தோழியிடம் இனிமையாகப் பேசுகிறான். அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோழி எண்ணுகிறாள். “தலைவனின் நிலையை நினைத்துப் பார். அவன் நாள்தோறும் என்னிடத்தில் வந்து உன்னைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறான். ஆனால், அவன் மனதிலே வேறு எதையோ எண்னுகிறான் என்று நினைக்கிறேன்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்விட் டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 
 கொண்டு கூட்டு: தோழி சேரி சேர மெல்ல வந்துவந்துஅரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் நினையாய்.
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானஅவன் நெடும் புறநிலை பிறிதொன்று குறித்தது.

அருஞ்சொற்பொருள்: வைகல் = நாள்; உறையும் = தங்கும்; பைதல் = துன்பம்; நோக்கம் = பார்வை; பின்றை = பின்நிற்றல்; கடை = முனை; அகவன் மகளிர் = கட்டுவிச்சி (குறி சொல்லும் பெண்); பிடி = பெண்யானை; மடப்பிடி = இளம் பெண்யானை; மான = போல; புறநிலை = நீண்ட காலமாகக் கெஞ்சிக் கேட்கும் நிலை.
உரை: தோழி! தலைவன் நம் சேரிப்பக்கம் அடிக்கடி வருகிறான். அவன் அருமையாக வாய்திறந்து, நம் சிந்தைக்கினிய சொற்களைப் பேசுகிறான். நாள்தோறும், தான் நினைத்தது ஒன்றும் கைகூடாததால் தனது உடலின் நிறம் வேறுபட்டுத் தோன்றுகிறது. அத்தலைவனது, துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை, நினைத்துப் பார்ப்பாயாக. இனிய கடுங்கள்ளையுடைய அகுதைக்குப் பின்நிற்கும்வெண்ணிறமான முனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறுகின்ற,  இளமை பொருந்திய பெண்யானையாகிய பரிசிலைப் போல, அவன் நீண்ட காலமாக நம்மைக் கெஞ்சிக் கேட்டு நிற்பது, வேறு எதையோ ஒன்றைக் கருதியதாகும்.

சிறப்புக் குறிப்பு: ”இன் கடுங்கள் என்றது உண்ணுவதற்கு இனிமையும் மயக்கம் தருவதில் கடுமையும் உடைய கள் என்பதைக் குறிக்கிறது. வெள்ளிய நுனி என்றது வெள்ளியால் செய்த பூண் கட்டிய நுனியைக் குறிக்கிறது. “பிரிதொன்று குறித்ததுஎன்றது தலைவன் மனதில் வேறு எதையோ நினைக்கிறான் என்பதைக் குறிக்கிறது. இங்கு, “வேறு எதையோஎன்றது தலைவன் மடலேறக்கூடும் என்பதைக் குறிக்கிறது. யானையைப் பரிசாகப் பெறுவதற்காக, அகவன் மகள் அகுதையிடம் வந்து பாடுவாள்; குறிசொல்லுவாள். ஆனால், அவள் தனக்கு யானையைப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்று வாய்விட்டுக் கூறமாட்டாள். தலைவனின் செயலும் அத்தகையதே என்று தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment