Sunday, January 22, 2017

300. தலைவன் கூற்று

300.  தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிவச்சமும் வன்புறையும் (வன்புறை = உறுதிமொழி கூறித்  தலைவன் தலைவியை ஆற்றுவித்தல்.)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்தித்தான்; காதல் கொண்டான்; கூடி மகிழ்ந்தான். தலைவியை நோக்கி, “நான் உன்னைப் பிரிய மாட்டேன்.” என்று கூறினான். அதைக் கேட்ட தலைவி, அப்பொழுதுதான் பிரிவு என்ற ஒன்று உண்டு என்பதை உணர்ந்தாள். ஆகவே, அவள் அஞ்சினாள். “நீ அஞ்சாதே! இவ்வுலகத்தையே பெறுவதாயினும் நான் உன்னை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.” என்று உறுதிமொழி கூறித் தலைவன் தலைவியை ஆற்றுவிக்கிறான்.

குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. 

கொண்டு கூட்டு: குவளை நாறுங் குவைஇரும் கூந்தல்ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண்பல் தித்தி மாஅயோயே!
நீ, ”அஞ்சல்என்ற என் சொல் அஞ்சலையான், குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் நின்னுடை நட்பு விடல் சூழலன். 

அருஞ்சொற்பொருள்: குவை = திரட்சி; பொதிதல் = நிறைதல்; துவர் = சிவப்பு; குண்டு நீர் = ஆழமான நீர்; கொங்கு = பூந்தாது; தித்தி = தேமல்; மாஅயோயே = மாந்தளிர் போன்ற நிறமுடையவளே; குவவுதல் = குவிதல்; சேக்கும் = தங்கும்; மண்டிலம் = உலகம்; சூழலன் = நினைக்க மாட்டேன்.
உரை: குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம் வீசும் இனிமை நிறைந்த சிவந்த வாயையும், ஆழமான நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற நுண்ணிய பல தேமற் புள்ளிகளையுமுடைய, மாந்தளிர் போன்ற நிறமுடையவளே! “நான் பிரிவேன் என்று நீ அஞ்சாதே!” என்று கூறும் என் உறுதிமொழியைக் கேட்டு நீ அஞ்சாதேகுறுகிய காலையுடைய அன்னப் பறவைகள்,  மணல் குவிந்துள்ள இடத்தில் தங்கியிருக்கும் கடல் சூழ்ந்த நிலத்தைப் பெறினும், நான் உன்னுடைய நட்பைக் கைவிடுவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.

சிறப்புக் குறிப்பு: குவளை மலர் போன்ற மணமுள்ள கூந்தலால் மூக்குக்கு இன்பமும், ஆம்பல் மலரின் மணம் வீசும் சிவந்த வாயில் ஊறும் இனிமை நிறைந்த நீரால் நாக்குக்கு இன்பமும், அந்த வாயால் அவள் கூறும் சொற்களால் செவிக்கு இன்பமும், தேமல் நிறைந்த மாந்தளிர் போன்ற மேனியால்  காண்பதற்கு இன்பமும், உடலுக்கு இன்பமும் தலைவியிடத்தில் தான் பெற்றதைத் தலைவன் நினைவுகூர்கிறான்.

No comments:

Post a Comment