Sunday, January 8, 2017

294. தோழி கூற்று

294.  தோழி கூற்று

பாடியவர்: அஞ்சிலாந்தையார். இவர் அஞ்சில் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில்  ஒருபாடலும் (294), நற்றிணையில் ஒருபாடலும் (233) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று : பகற் குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது.
கூற்று விளக்கம்: பகலில், தலைவன் தலைவியைக் காண்பதற்காக வந்திருக்கிறான். .அவன் வந்திருப்பதைத் அறிந்த தோழி, “நாம் பெண்களுடன் விளையாடும் பொழுது, தலைவன் நம்மோடு வந்து அளவளாவிச் சென்றிருந்தால், அலர் உண்டாயிருக்கும். இப்பொழுது, அவன் எப்பொழுதும் நம் அருகிலேயே இருப்பதால், தாய் உன்னை வீட்டில் காவலில் வைக்கப் போகிறாள். அதற்கு அவன்தான் காரணம்.” என்று தலைவனின் காதுகளில் விழுமாறு தலைவியிடம் கூறுகிறாள். தாய் தலைவியைக் காவலில் வைத்தால், தலைவனைக் காண இயலாது. அதனால், தலைவன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வான் என்று தோழி எண்ணுகிறாள்.

கடலுட னாடியும் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்திப் பரந்த பைத்தக லல்குல்
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
தழையினும் உழையிற் போகான்
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. 

கொண்டு கூட்டு: கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்தொடலை ஆயமொடு தழுவணி அயர்ந்தும்நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலின், அலர்ந்தன்று மன்.  தித்திப் பரந்த பைத்து அகல் அல்குல் திருந்து இழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான்யாய் காத்து ஓம்பல் தான் தந்தனன். 

அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; அல்கி = தங்கி; தொடலை = மாலை; ஆயம் = தோழியர் கூட்டம்; தழுவணி = பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஆடும் குரவைக் கூத்து; அயர்தல் = விளையாடுதல்; நொதுமலர் = அயலார்; கதும் = விரைந்து; முயங்குதல் = தழுவுதல்; அலர்ந்தன்றுஅலர் உண்டாயிற்று; மன் = கழிந்தது; தித்தி = தேமல்; பைத்து = விரிந்து; துயல்தல் = அசைதல்; கோடு = பக்கம்; குழை = தளிர்; உழை = பக்கம், அண்மை; ஓம்பல் = காவல் செய்தல்.


உரை:  கடலில் ஒன்றுசேர்ந்து நீராடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும், மாலை அணிந்த மகளிர் கூட்டத்தோடு,  குரவை கூத்து ஆடியும், நாம் மற்ற மகளிரோடு மகிழ்ந்து இருக்கும்பொழுது, அயலாரைப் போல,  விரைவாக வந்து, தலைவன் தழுவிச் சென்றிருந்தால், அலர் உண்டாயிருக்கும். அது நடைபெறவில்லை. இப்பொழுது, அங்ஙனம் செய்யாமல், தேமல் படர்ந்த, விரிந்து அகன்ற, அல்குலிடத்தே, திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசையும் பக்கத்தில், கட்டிய பசுமையான தளிரால் செய்த தழையாடையைப் போல, மிக அண்மையில், அகலாது இருந்ததால், தாய் நம்மை வீட்டில் வைத்துக்  காவல் செய்வதற்கு அவனே காரணமானான்.

No comments:

Post a Comment