Monday, March 14, 2016

165. தலைவன் கூற்று

165.  தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பின்னின்ற தலைமகன், மறுக்கப்பட்டுப் பெயர்த்துங் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான். அவள்மீது காதல்கொண்டான். அவளைச் சந்திக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினான்.  அந்தப் பெண்ணின் தோழியிடம், அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான். “அவள் உன்னைச் சந்திக்க விரும்பவில்லைஎன்று தோழி கூறி அவன் வேண்டுகோளை மறுத்தாள். ஆனால், அவனுக்கு அந்தப் பெண்ணின்மீது உள்ள காதல் குறையவில்லை. “நீ அவளை விரும்பினாய். அவள் உன்னை விரும்பவில்லை.; உன்னைச் சந்திக்கக்கூட அவள் மறுத்துவிட்டாள். ஆனால், நீ இப்பொழுது நாணத்தையும் மனவலிமையையும் இழந்து அவளை மீண்டும் விரும்புகிறாயே!” என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் கூறுகிறான்


மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீந் தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. 

கொண்டு கூட்டு: அருங்கரை நின்ற உப்புஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீந்தாங்கு, இவள் இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டு, மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்குவிழைந்ததன் தலையும் நீ வெய்து உற்றனை.

அருஞ்சொற்பொருள்: தலையும்  = பின்னும்; நறவு = கள், மது; விழைதல் = விரும்புதல்; வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; வெய்துறுதல் = விருப்புறுதல்; ஒய்தல் = செலுத்துதல்; சகடம் = வண்டி; பெயல் = மழை; தலைய = மழைபெய்து விடுதல்; வீதல் = கெடுதல், அழிதல்; இரு = கரிய; பல் = பல (மிகுந்த); இயல் = இயற்கை; அணி = அழகு.
உரை: நெஞ்சே, பலவாகத் தொகுக்கப்பட்ட இவளது கரிய கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு, நீ இவளை விரும்பினாய். அவள் உன்னை மறுத்தவுடன், ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைக் கொண்டுசெல்லும் வண்டி, பெரிய மழை பொழிந்ததனால் அழிந்ததுபோல, நீ நாணத்தையும் வலிமையையும் இழந்தாய். ஒருமுறைக்  கள்ளுண்டு அறிவிழந்து களித்தவன், பிறகும்  கள்ளை உண்பதைப்போல், அவளை நீ முன்பு விரும்பியபொழுது அவள் உன்னை மறுத்தாலும், இப்பொழுது  அவளை நீ மீண்டும் விரும்புகிறாய்.

சிறப்புக் குறிப்பு: ஒருமுறை கள்ளுண்டவன் மீண்டும் கள்ளுண்ண விரும்புவதை காமமுடையவர்களின் நிலைக்கு ஒப்பிடுவது வழக்கு. இதை

             களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
             வெளிப்படுந் தோறும் இனிது”                     (குறள் 1145)
என்ற குறளிலும் காணலாம்.


(பொருள்: காமம் அலரால் (பிறருடைய பழிச்சொற்களால்) வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.)

164. காதற்பரத்தை கூற்று

164. காதற்பரத்தை கூற்று

பாடியவர்: மாங்குடி மருதனார். இவர் மாங்குடி கிழார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் காஞ்சிப் புலவன் என்றும் மதுரைக் காஞ்சிப் புலவன் என்றும் அழைக்கப்பட்டதாக, நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய நூலில் கூறுகிறார்.  இப்புலவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியையும், அகநானூற்றில் ஒரு பாடலையும் (89), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (164, 173, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களையும் (120, 123) இயற்றியுள்ளார்.  நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குகஎன்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, இவரால் பாடப்படுவதை அவன் மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.
திணை: மருதம்.
கூற்று: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த பரத்தை, தன் தோழியரிடம், தலைவியின் தோழியின் காதில் கேட்குமாறு, தலைவி  எம்மை வெறுப்பதற்குரிய குற்றம் ஏதேனும் நாம் செய்திருந்தால், கடல் தெய்வம் எம்மை வருத்துவதாகுக. என்று கூறுகிறாள்.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. 

கொண்டு கூட்டு: தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம்  மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின்கணைக்கோட்டு வாளை கமம்சூல் மடநாகு துணர் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக!

அருஞ்சொற்பொருள்: கணை = திரண்ட; கோடு = கொம்பு; வாளை = வாளை மீன்; கமம் = நிறைந்த; சூல் = கருப்பம்; மடம் = இளமை; நாகு = பெண்மை ( இங்கு பெண்மீனைக் குறிக்கிறது); துணர் = கொத்து; தேக்கொக்கு = தேமா (இனிய பழங்களையுடைய மாமரம்); தீ = இனிமை; கதூஉம் = கவ்வும்; தொன்று = பழைய; முதிர் = மூப்பு; தொன்றுமுதிர் = மிகப்பழைய; குணாது = கிழக்கே; தண் = குளிர்ச்சி; பவ்வம் = கடல்; அணங்கு = வருத்தம்; புலத்தல் = வெறுத்தல்; மகிழ்நன் = மருதநிலத் தலைவன்.
உரை: தோழி! தலைவி தன் அறியாமையால் எம்மை வெறுக்கின்றாள். அவள் எம்மை வெறுக்கும் அளவுக்கு நாம் மருதநிலத் தலைவனுக்குத் தீங்கிழைத்திருப்போமானால்,  திரண்ட கொம்பையுடைய, நிறைந்த கருப்பத்தையுடைய இளம் பெண் வாளை மீன், தேமாவின் உதிர்ந்த இனிய பழத்தைக் கவ்வும் இடமாகிய, மிகப் பழைய வேளிரது குன்றூருக்குக் கிழக்கே உள்ள, குளிர்ச்சியையுடைய பெரிய கடல், எம்மை வருத்துவதாக.
    

சிறப்புக் குறிப்பு:  குளத்தில் தானாகவே உதிர்ந்து விழுந்த மாங்கனியை வாளைமீன் கவ்வி உண்டது என்பது உள்ளுறையாகத்  தன்னை நாடி வந்த தலைவனோடு, பரத்தை இன்பம் நுகர்ந்தாள் என்பதைக் குறிக்கிறது. மாம்பழம் தலைவனுக்கும், வாளைமீன் பரத்தைக்கும், உண்ணுதல் இன்பம் நுகர்வதற்கும் உவமை. “கடல் எம்மை வருத்துவதாகஎன்றதுகடல் தெய்வம் எம்மை வருத்துவதாகஎன்ற பொருளில் கூறப்பட்டது.

163. தலைவி கூற்று

163. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: தன்னுட் கையாறெய்திடு கிளவி. (கையாறு - செயலறுதல்.) 
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவினால் துன்புற்ற தலைவி காமமிகுதியால் செயலற்று, கடலை நோக்கி, “நள்ளிரவிலும் உன் குரல் கேட்கிறதே! உன்னை யார் வருத்தமடையச் செய்தது?” என்று வருந்திக் கூறுகிறாள்.


யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. 

கொண்டு கூட்டு: கடலே! பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத்தாழை திரையலை நள்ளென் கங்குலும் கேட்கு நின் குரலேயார் அணங்குற்றனை?

அருஞ்சொற்பொருள்: அணங்கு = வருத்தம்; பூழி = ஒரு நாடு ( ஆடுகள் மிகுந்த நாடு); வெள்ளை = வெள்ளாடு; தோடு = தொகுதி (கூட்டம்) ; பரத்தல் = பரவுதல் ; ஆர்தல் = உண்ணுதல்; குருகு = கொக்கு (நாரை); கானல் = கடற்கரைச் சோலை; வீ = பூ; அலைக்கும் = அசைக்கும்; நள் = நடு,செறிவு; கங்குல் = இரவு.

உரை: கடலே! பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய, வெள்ளாட்டுக் கூட்டம் பரவினாற்போன்ற, மீனை உண்ணும் கொக்குகள் பரவி இருக்கும்  சோலை சூழ்ந்த பெரிய நீர்த்துறையில், வெண்ணிறமான பூவையுடைய தாழையை, அலைகள் மோதி அசைக்கின்ற, நடு இரவிலும்,  உன் குரல் கேட்கிறது. நீ யாரால் வருத்தம் அடைந்தாய்?


162. தலைவன் கூற்று

162.  தலைவன் கூற்று

பாடியவர்: கருவூர்ப் பவுத்திரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.

கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் மேற்கொண்ட செயல்களை முடித்துத் திரும்பி வருகிறான். அவன் திரும்பி வரும்பொழுது, வழியில் முல்லைக்கொடிகளிலில் இருந்த அரும்புகளைப் பார்க்கிறான். அவை தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது. அவன்  முல்லையைப் பார்த்து, “நீ தனிமையில் இருப்பவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவது தகுமோ?” என்று கேட்கிறான்.

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: முல்லை வாழியோ, முல்லை! கார் புறந்தந்த நீருடை வியன்புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!
தமியோர் மாட்டே நகுவை போலக் காட்டல் மற்றிது தகுமோ. 

அருஞ்சொற்பொருள்: புறந்தருதல் = பாதுகாத்தல்; வியன் = அகன்ற; வியன்புலம் = அகன்ற நிலம்; புகுதரும் = புகும்; புல்லென் = ஒளியிழந்த; முகை = மொட்டு; முறுவல் = புன்னகை; மற்றுஅசைச்சொல்; தமியோர் = தனித்திருப்போர்.
உரை: முல்லையே! நீ வாழ்வாயாக! முல்லையே, கார்காலத்து மழையால் பாதுக்காப்பட்ட, நீரையுடைய அகன்ற நிலத்தின்கண், பலரும் தம் வீடுகளுக்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில், நீ உன் சிறிய வெண்ணிறமான அரும்புகளால் புன்னகை கொண்டாய். அது, தன் துணையைப் பிரிந்து தனிமையுடன் இருப்பவர்களைப் பார்த்து நீ எள்ளி நகைப்பது போல் உள்ளது. இது உனக்குத் தகுமோ?


சிறப்புக் குறிப்பு: கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிடுவதாகத் தலைவியிடம் தலைவன் கூறிச் சென்றான். இப்பொழுது கார்காலம் வந்துவிட்டது. மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது. தான் கார்காலத்திற்கு முன்னதாகவே வராததால் முல்லை தன்னைப் பார்த்துச் சிரிப்பதாக அவன் நினைக்கிறான்

161. தலைவி கூற்று

161. தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள் இரவு தலைவன் தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்ததை அறிந்தும், வீட்டுக்கு வெளியே வந்து, தலைவியால் அவனைக் காண முடியவில்லை. மறுநாள் இரவு தலைவன் அவளைக் காண வந்திருக்கிறான் என்பதை அறிந்த தலைவி, நேற்று இரவு மழை பெய்தபொழுது தலைவன் வந்தான். அப்பொழுது என் அன்னை தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில், தலைவன் வந்து வீட்டுக்கு வெளியே நின்றான். என்னால் அவனைக் காண முடியவில்லை. ஐயோ! அவன் என்ன நினைத்தானோ? என்ன செய்தானோ? என்று தலைவனின் காதில் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே. 

கொண்டு கூட்டு: பொழுதும் எல்லின்று;  பெயலும் ஓவாது, கழுது கண்பனிப்ப வீசும். அதன்தலைப் புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னையும் அன்னா என்னும்.
தன்மலை ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே. அன்னோ! தான் என் மலைந்தனன் கொல்?

அருஞ்சொற்பொருள்: பொழுது = கதிரவன்; எல் = ஓளி; பெயல் = மழை; ஓவாதுஓயாமல்; கழுது = பேய்; பனித்தல் = நடுங்குதல்; வீசும் = வேகமாகப் பெய்யும்; தலை = மேல்; புல்லுதல் = தழுவுதல்; அன்னா = அன்னையே (அன்னையே அன்பது மருவி அன்னா என்று வந்தது.); அன்னோஇரக்கக் குறிப்பு; மலைதல் = செய்தல்; ஆரம் = சந்தனம்; மாரி யானை = மழையில் நனைந்த யானை.
உரை:  கதிரவனின் ஒளி குறைந்து இருள் சூழ்ந்தது.  பேய்கள் அடிக்கடித் தங்கள் கண்களை இமைத்து நடுங்கும்படி, மழை ஓயாமல் வேகமாகப் பெய்தது. அதற்கும் மேலே, என் தாய், புலிப்பல் கோத்த தாலியை அணிந்த தன் மகனைத் (என் தம்பியைத்)  தழுவிக்கொண்டு, ”அன்னையே என்று என்னை அழைத்தாள். அப்பொழுது,  தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன், மழையில் நனைந்த யானையைப் போல வீட்டுக்கு வெளியே வந்து நின்றான்; அந்தோ! அவன் பின்னர் என்ன செய்தானோ?


சிறப்புக் குறிப்பு: இரவில் பேய்கள் அச்சமின்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது. ”கழுது கண்பனிப்ப வீசும்என்றது மழையின் கொடுமையைக் குறிக்கிறது. பொன்னாலான  சங்கிலியில் புலிப்பல்லை அமைத்துச் சிறுவர்கள் அணிவது வழக்கம். புதல்வனைத் தழுவிக்கொண்டிருந்த தாய் தன்னையும் அழைத்ததால், தான் தாய்க்கு அருகில் இருக்க வேண்டியதாயிற்று என்று தலைவி தலைவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்.  தலைவன் வழக்கமாக அணியும் சந்தனத்தின் மணத்தைத் தலைவி அறிந்தவளாதலால், அவன் வெளியே வந்து நின்றவுடன், அந்தச் சந்தன மணத்தால் அவள் தலைவனின் வருகையை அறிந்தாள். கொல், என்பது ஐயத்தைக் குறிக்கிறது. தான், ஏ ஆகிய இரண்டும் அசைச்சொற்கள்.

Sunday, February 21, 2016

160. தலைவி கூற்று

160. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 –இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி, வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்:  திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லை. தோழி, “அவர் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வார். பொறுமையாக இரு.” என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, “இதுவரை அவர் வரவில்லை. இனி அவர் வந்து எப்படித் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்?” என்று கேட்கிறாள்.


நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே. 

கொண்டு கூட்டு: நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார். தோழி! நம் காதலர் வரவு இஃதோ?

அருஞ்சொற்பொருள்: அன்றில் = ஆணும் பெண்ணும் எப்பொழுதும் இணைந்திiருக்கும் பறவை; இறவு = இறால் மீன் ; கொடுவாய் = வளைந்த வாய்; பேடை = பெண்பறவை; தடவு = தடா மரம் ; ஓங்கல் = உயர்ச்சி; சினை = கிளை; கட்சி = பறவைக்கூடு; கையறுதல் = செயலறுதல்; நரல் = ஒலி; நள் = செறிவு; யாமம் = நடுஇரவு; வாடை = வடக்கிலிருந்து வரும் குளிர் காற்று; வாரார் = வரமாட்டார்.

உரை: தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனைப் போல் வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள கூட்டிலிருந்து கொண்டு, பிரிந்தவர் செயலற்று வருந்துமாறு  ஒலிக்கின்ற, இருள் செறிந்த நள்ளிரவில் மிகுந்த குளிர்ச்சியையுடைய வாடைக்காற்று வீசும் கூதிர் காலத்திலும், தலைவர் வரவில்லை. நம் தலைவர் என்னை மணந்து கொள்வது இதுதானோ?

சிறப்புக் குறிப்பு: ஆண் அன்றில் தன் துணையாகிய பெண் அன்றிலோடு மகிழ்ந்து எழுப்பும் ஒலியைக் கேட்டு, ”இப்பறவை பெற்ற பேறு நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று தன் துணையைப் பிரிந்தவர் வருந்துவராகையால் “‘பிரிந்தோர் கையற நரலும்என்றாள்.


வாடைக்காலம் வந்தும் தலைவர் வரவில்லை. அவர் இனியும் வருவார் என்று எப்படி நம்ப முடியும்? திருமணம் விரைவில் நடைபெறும் என்று நீ கூறுகிறாய். அது எப்படி நிகழும்?” என்று தோழியை நோக்கித் தலைவி வருத்தத்தோடு கேட்கிறாள்.

159. தோழி கூற்று

159. தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது.
 கூற்று - 2: உயிர் செல வேற்றுவரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1:  தலைவியும் தலைவனும் தங்கள் காதலைக் களவொழுக்கத்தில் தொடர்ந்து வந்தார்கள். ஒருநாள் தலைவியின் பெற்றோர்கள் அவளை வீட்டில் காவலில் வைத்தார்கள். வழக்கம்போல், அவளைக் காண வந்த தலைவன், தலைவியின் வீட்டுக்கு வெளியே உள்ள வேலிக்கு அருகில்  நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன் காதுகளில் விழுமாறு தோழிதலைவி காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வூரில் உள்ள அறிவில்லாத மக்கள் அவள் துயரத்தை உணராதவர்களாக உள்ளனர்என்று கூறுகிறாள். இவ்வாறு கூறுவதால் தலைவியின் நிலையை உணர்ந்து, தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

கூற்று விளக்கம் - 2: தலைவி திருமணத்திற்கான பருவம் அடைந்தாள். அவளுடைய திருமணத்தைப் பற்றி, அவள் பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்அவளுடைய பெற்றோர்கள் அவளைத் தலைவன் அல்லாத வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்வித்தால், அவள் நிலை என்ன ஆகும்? அவள் உயிரையே விட்டுவிடுவாள். அவளுடைய துயரத்தை அறியாத இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள். தலைவன் இதை உணர்ந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சிகளை விரைவில் எடுக்க வேண்டும் என்று மறைமுகமாகத் தலைவி தோழியிடம், தலைவன் காதில் கேட்குமாறு கூறுவதாகவும் இப்பாடலைக் கருதலாம்

இந்த இரண்டு கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஒருபெண் தன்னுடைய இடையைப் பற்றியும் மார்பகங்களைப் பற்றியும் தானே பெருமையாகப் பேசமாட்டாள்.  ஆகவே, இப்பாடலைத் தோழியின் கூற்றாகக் கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. தலைவி காவலில் வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோர்கள் அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்விக்கக் கூடும் என்ற கருத்தையும் தோழியே கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறதுது.

தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே. 

கொண்டு கூட்டு: தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம்மெல் ஆகம்  நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின;
இப்பேதை  ஊர் பூங்குழை யாங்கு ஆகுவள்கொல் என்னும் அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு.

அருஞ்சொற்பொருள்: அல்குல் = அடிவயிறு, இடை; தாங்கல் செல்லா = பொறுத்துக்கொள்ள முடியாத; நுழை = நுண்மை; நுசுப்பு = இடை; எவ்வம் = துன்பம்; ஆகம் = மார்பு; வீங்கி = பருத்து; கொம்மை = திரட்சி, பெருமை; வரி = தேமல்; செப்பு = சிமிழ், ஒருவகைப் பாத்திரம்; எதிர் = ஒப்பு; பூங்குழை = காதில் அணிகின்ற பூப்போன்ற அனிகலன்;  அவலம் = கவலை; உசாவுதல் = கேட்டல், ஆராய்தல்; மாக்கட்டு = மக்களை உடையது; பேதைமை = அறிவின்மை.

உரை: தான் அணிந்திருக்கும் தழையாடையைக் கூடத் தாங்க முடியாத நுண்மையான சிறிய இடைக்குத் துன்பம் உண்டாகும்படி, இந்தப் பெண்ணின் அழகிய மெல்லிய மார்பில், மிகுதியாகப் பருத்து, திரண்டு உருண்டு தேமலோடுகூடிய முலைகள் செப்பைபோல் (குவிந்த பாத்திரங்களைப் போல்) உள்ளன. ”காதில் பூப்போன்ற அணிகலன்களை அணிந்த இந்தப் பெண் எத்தகைய நிலையை அடைவாளோ?”, என்று கவலையோடு கேட்காத மக்களை உடையது இந்த அறிவற்ற ஊர்

சிறப்புக் குறிப்பு: பேதை ஊர்என்றது அவ்வூரில் வாழும் அறிவற்ற மக்களைக் குறிக்கிறது என்றாலும், தோழி செவிலித்தாய் போன்றவர்கள் தனது காதலை உணர்ந்து தன்னைத் தலைவனுக்கு த் திருமணம் செய்விப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதனால் அவளுக்கு அவர்கள் மீது உள்ள சினத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

நலம்புனைத்துரைத்தல்என்ற அதிகாரத்தில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுவதைத் திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறார். அந்த அதிகாரத்தில் உள்ள ஒருபாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.                                                  (குறள் – 1115)

(பொருள்: இவள் தன் இடையின் மென்மையைக் கருதாது, அனிச்சப்பூவின் காம்பைக் கிள்ளாமல் தன் தலையில் அணிந்தாள். காம்போடு கூடிய அந்தப் பூவின் எடையைத் தாங்காமல் இவள் இடை முறிந்துவிடும். ஆதலால், இனி இவள் இடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா. அமங்கலப் பறைகளே முழங்கும்.)