Sunday, July 31, 2016

227. தோழி கூற்று

227. தோழி கூற்று

பாடியவர்: ஓதஞானியார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: முதல் நாள் தலைவன், குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தலைவியைக் காண முடியாமல் திரும்பிச் சென்றான். அவன் வரவில்லை என்று தலைவி எண்னுகிறாள். அவன் மறுநாள் வந்து, தான் முதல் நாள் வந்ததாகவும் தலைவியைக் காண முடியவில்லை என்றும் தோழியிடம் கூறுகிறான்.  “தலைவன் முதல் நாள் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லைஎன்று கூறிய தலைவிக்குத் தோழி, அவன் வந்ததற்கான அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகிறாள்.


பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே. 

கொண்டு கூட்டு: இவண் தேரோன் போகிய கானலான் பூண்வனைந்த அன்ன பொலம்சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து

அருஞ்சொற்பொருள்: பூண் = உலக்கை முதலியவற்றிலிடும் வளையம்; வனைதல் = அலங்கரித்தல்; பொலம் = பொன் (பொன் என்ற சொல்லுக்கு இரும்பு என்று ஒருபொருள் உண்டு. இங்கு பொலம் என்ற சொல், இரும்பைக் குறிக்கிறது); சூடு = சக்கரத்தின் விளிம்பு; நேமி = சக்கரம்; துமித்தல் = வெட்டுதல்; கூழை = குட்டையானது.

உரை: இங்கு, தேரில் வந்த தலைவன் திரும்பிச் சென்ற கடற்கரைச் சோலையில், பூணைப் பதித்தாற் போன்ற, இரும்பால் விளிம்பைஉடைய சக்கரத்தின், வாளைப்போன்ற வாய் வெட்டியதால், வளமான இதழ்கள் ஒடிக்கப்பட்டு  குறைந்து கிடக்கும் நெய்தல் பூக்களும் உள்ளன.

228. - தலைவி கூற்று

226. தலைவி கூற்று

226. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 90 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவால் தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவனோடு கூடி மகிழ்ந்து இருந்ததற்குமுன், தன் கண்களும், தோளும், நெற்றியும் எவ்வளவு அழகாக இருந்தன என்று எண்னித் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 

கொண்டு கூட்டு:
தோழி! வாழி! அல்கலும்  தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்  குருகென மலரும் பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகா ஊங்கு, பூவொடு புரையுங் கண்ணும், வேய்என விறல் வனப்பு எய்திய தோளும், பிறைஎன மதி மயக்குறூஉம் நுதலும் நன்றும் நல்ல. மன்.

அருஞ்சொற்பொருள்: புரையும் = போலும்; வேய் = மூங்கில்; விறல் = தனிச் சிறப்பு  விறல் வனப்பு = பிறிதொன்றற்கு இல்லாத பேரழகு; நுதல் = நெற்றி; மன் = இடைச் சொல் (கழிந்தது என்ற பொருளில் வந்துள்ளது); அல்கல் = இரவு; தயங்கல் = ஒளி செய்தல்; குருகு = நாரை;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நகுதல் = சிரித்தல் (இங்கு கூடி மகிழ்தலைக் குறிக்கிறது); ஊங்கு = முன்பு.


உரை: தோழி! வாழ்க! இரவுதோறும், ஓளி பொருந்திய அலைகளால் மோதப்பட்ட, தாழையின் வெண்மையான பூ, நாரையைப் போல மலரும் இடமாகிய, பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய நெய்தல் நிலத் தலைவனோடு கூடி மகிழுமுன்,  என்னுடைய தாமரை மலரைப் போன்ற கண்களும், மூங்கிலை ஒத்த  சிறப்பான அழகிய தோளும், பிறை என்று கருதும்படிக் காண்போர்  அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும்,  மிகவும் நல்லனவாக இருந்தன. அந்த நிலை இப்பொழுது கழிந்தது!

225. தோழி கூற்று

225.  தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவார்க்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் புறப்படுகிறான். அவனிடம், தோழி, “தலைவி உனக்குச் செய்த நன்மைகளை மறவாதே. விரைவில் பொருள் தேடிவந்து , அவளைத் திருமணம் செய்துகொள்என்று கூறுகிறாள்.

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. 

கொண்டு கூட்டு:
கன்றுதன் பயமுலை மாந்த, முன்றில் தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட ! கெட்ட இடத்து வந்த உதவி, கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின், இவள் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன ஒலிமென் கூந்தல் நினக்கே உரிய.

அருஞ்சொற்பொருள்: பயம் = பயன்; பயமுலை = பயனுள்ள முலை (பாலுள்ள முலை); மாந்துதல் = குடித்தல் ; முன்றில் = வீட்டின் முன்னிடம்; பிடி = பெண்யானை; கல் = மலை; கட்டில் = அரசுக் கட்டில்; வீறு =  சிறப்பு; சீர் = சிறப்பு, அழகு; கலித்தல் = ஆரவாரித்தல்; கலாவம் = மயிலின் தோகை; ஒலித்தல் = தழைத்தல்.

உரை: கன்று தன்னுடைய பால் சுரக்கும் முலையில் உள்ள பாலைக் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது, வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை, பெண்யானை உண்ணும் இடமாகிய,  பெரிய மலைகளை உடைய நாடனே! , தான் துன்புற்ற காலத்தில் பிறரிடமிருந்து பெற்று மகிழ்ந்த உதவியை, அரசுக் கட்டிலாகிய சிறப்பைப் பெற்றவுடன் மறந்து விட்ட மன்னனைப் போல, நீ நாங்கள் செய்த நற்செயல்களை மறவாது இருப்பாயானால், இத்தலைவின், மெல்லிய சிறப்புடைய ஆரவாரிக்கும் மயிலினது தோகையைப் போன்ற, தழைத்த மென்மையான கூந்தல் உனக்கே உரியதாகும்.

சிறப்புக் குறிப்பு: பெண்யானை தன் கன்றுவின் பசியைப் போக்கிக் கொண்டு தானும் உண்ணுவதைப் போல், தலைவன் பொருளை ஈட்டி, விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்து மகிழ்விக்க வேடும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
 சங்க காலத்தில், ஒரு பெண்ணின் கூந்தலுக்கு அவள் கணவன் மட்டுமே உரிமையுடையவன் என்ற கருத்து நிலவியது. இக்கருத்து புறநானூற்றுப் பாடல் 113 –-இல் காணப்படுகிறது
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
 நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.            (புறநானூறு 113, 8-9)


பொருள்: பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்பரைத் தேடி செல்லும் பொழுது, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம் என்று கபிலர் கூறுகிறார்.

224. தலைவி கூற்று

224. தலைவி கூற்று

பாடியவர்: கூவன் மைந்தனார்.இவர் இயற்றியதாக குறுந்தொகையில் உள்ள இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை இறந்து படுமெனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவையைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாமல் தலைவி இறந்துவிடுவாளோ என்று எண்ணி மிகவும் வருந்துகிறாள். தலைவனின் பிரிவினால் வருந்தி வாடும் தலைவி, தோழி வருந்துவதைக் கண்டு இன்னும் அதிகமாக வருந்துகிறாள். தோழி வருத்தப்படுவதைக் கண்ட தலைவி தன்னுடைய வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். தலைவி,  கிணற்றில் விழுந்த பசுவைக் கண்ட ஊமன், தன் வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பதைப் போல் தானும் வருந்துவதாகத் தோழியின் காதுகளில் கேட்குமாறு தனக்குத் தானே கூறிக்கொள்கிறாள்.

கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. 

கொண்டு கூட்டு:
கூவல்  குரால் ஆன் படுதுயர் இராவிற் கண்ட  உயர்திணை ஊமன் போல தோழி நோய்க்கே துயர் பொறுக்கல்லேன்.  கவலை யாத்த, அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா நோயினும் நோய் ஆகின்று.  

அருஞ்சொற்பொருள்: கவலை = பல கிளைவழிகள்; யாத்த = யாமரங்களையுடைய; அவலம் = துன்பம்; எற்றி = நினைத்து; துஞ்சுதல் = உறங்குதல்; கூவல் = கிணறு; குரால் = கபில நிறம் ( கருமை கலந்த பொன்மை); ஆன் = பசு; ஊமன் = ஊமை, கோட்டான்; உயர்திணை ஊமன்  - இங்கு குறிப்பிடப்பட்ட ஊமன் கோட்டான் அன்று  என்பதைக் குறிக்கிறது.

உரை: கிணற்றில் வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை, இரவில் கண்ட, ஊமை அத்துயரத்தை வெளியிட முடியாமல் துன்புற்றது போல, எனக்காகத் தோழி படும் துன்பத்தைப் பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். தோழியின் துயரத்தால் நான் பெற்ற துன்பம், பல கிளைவழிகளும் பல யா மரங்களும் உள்ள நீண்ட வழியில் சென்ற தலைவன் செய்த கொடுமையை நினைத்து நான் தூங்காமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும்,மிகுந்த துன்பமாக இருக்கின்றது.


சிறப்புக் குறிப்பு: தன் துயரத்தைக் கூற இயலாத நிலையில் உள்ள தலைவிக்குக் குராற்பசு கிணற்றில் விழுவதைக் கண்ட ஊமன் உவமை. இந்த உவமைச் சிறப்பினால் இப்புலவர் கூவன் மைந்தனார் என்று அழைக்கப்பட்டதாகக்  கருதப்படுகிறது.  

223. தலைவி கூற்று

223. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “உன் தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடத்தானே சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். நீ வருந்தாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஊரிலே நடைபெறும் திருவிழாவுக்குப் போகலாம் என்று தோழி தலைவியை அழைக்கிறாள். அதைக் கேட்ட தலைவி, தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே. 

கொண்டு கூட்டு: பேரூர் கொண்ட ஆர்கலி விழவில் ”செல்வாம், செல்வாம் என்றி. அன்று, இவண் நல்லோர் நல்ல பலவால்தில்லதழலும் தட்டையும் முறியும் தந்து,  இவை
நினக்கு ஒத்தன எனப் பொய்த்தன கூறிஅன்னை ஓம்பிய ஆய்நலம் என் ஐ கொண்டான். யாம் இனி இன்னம்!. 

அருஞ்சொற்பொருள்: பேரூர் = பெரிய ஊர்; ஆர்கலி = மிகுந்த ஆரவாரம்; இவண் = இங்கே; நல்ல = நல்ல சொற்கள் ( நல்ல நிமித்தங்கள் ); ஆல், தில்ல  - அசைச்சொற்கள்; தழல் = சுற்றுவதால் ஓசை உண்டாக்கும் ஒரு கருவி (கவண்); தட்டை = தட்டுவதால் ஓசை எழுப்பும் கருவி; முறி = தழை; ஓம்பிய = பாதுகாத்த; ஆய் = அழகிய; என்னை =என்+ = என் தலைவன்; இன்னம் = இவ்வாறு; ஆல்அசைச்சொல்.

உரை: முன்பு ஒருநாள், பெரிய ஊரில் நடந்த மிகுந்த ஆரவாரமான விழாவிற்குச்செல்வோம்; செல்வோம்என்று கூறினாய்.  அன்று நாம் விழாவிற்குப் புறப்படும்பொழுது, இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்கள் (நிமித்தங்கள்) பலவாக இருந்தன; கிளிகளை வெருட்டுவதற்குப் பயன்படும் கருவிகளாகிய தழலையும், தட்டையையும், தழையாடையையும், எனக்குக் கொடுத்து,  இவை உனக்கு ஏற்றவைஎன்று சொல்லி, பின்பு பொய்யுரைகள் கூறி,  என் அன்னையால் பாதுகாக்கப்பட்ட என்னுடைய அழகிய பெண்மை நலத்தை என்னிடமிருந்து என் தலைவன் கொள்ளை கொண்டான். அதனால், நான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கின்றேன்.

சிறப்புக் குறிப்பு: முன்பு ஒருநாள், தோழி தலைவியைப் பேரூர் விழாவிற்கு அழைத்துச் சென்றாள். அவள் சொற்களைக் கேட்டு அங்குச் சென்றதால், தலைவி தலைவனைச் சந்தித்தாள். தலைவன், தழல், தட்டை, தழையாடை ஆகியவற்றைத் தலைவிக்குக் கொடுத்துப் பல பொய்யுரைகள் பேசி அவள் பெண்மை நலத்தைக் கொள்ளைகொண்டான். இதுவரை, தலைவி தன் தாயின் பாதுகாப்பினால் தன் பெண்மை நலத்தை இழக்காமல் இருந்தாள். தலைவனைப் பேரூர் விழாவில் சந்த்தித்த பொழுது அதை இழந்தாள். அதை நினைத்து அவள் வருந்துகிறாள்.


222. தலைவன் கூற்று

222.  தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 56 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பெட்ட (பெட்டல் = மிக விரும்புதல்) வாயில் (தூது) பெற்று இரவு (யாசித்தல், கெஞ்சிக் கேட்டல்) வலியுறுத்தல்.
கூற்று விளக்கம்: தலைவன் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவளோடு பழக வேண்டும் என்று விரும்புகிறான். ”அவளை எப்படி அணுகுவது?”,  ”யாரைத் தூதாக அனுப்புவது?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அப்போழுது, தலைவி அவளுடையய தோழி ஒருத்தியுடன் நீராடிக்கொண்டிருப்பதைத் தலைவன் பார்க்கிறான்.  தோழி எதைச் செய்தாலும் தலைவியும்  அதையே செய்கிறாள். அதைப் பார்த்த தலைவன், தலைவியும் அந்தத் தோழியும் மிகவும் நெருங்கிய நட்புடையவர்களாக இருப்பதை உணர்கிறான். ”இந்தத் தோழிதான் தலைவியிடம் தூதாக அனுப்புவதற்குத் தகுந்தவள். அவள் சொன்னால் நம் வேண்டுகோளுக்குத் தலைவி இணங்குவாள்என்று தலைவன் எண்ணுகிறான்.

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. 

கொண்டு கூட்டு: மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்  துளிதலைத் தலைஇய தளிர் அன்னோளேதலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும்!

அருஞ்சொற்பொருள்: புணை = தெப்பம்; புனல் = ஆற்றுநீர்; மாண்ட = மாட்சிமைப்பட்ட (சிறந்த); மாரி = மாரிக்காலம் (மழைக்காலம்); பித்திகம் = பிச்சி; கொழு = கொழுப்பு (வளம்); முகை = மொட்டு; வெரிந் = முதுகு; செவ்வெரிந் = சிவந்த புற இதழ்; உறழுதல் = ஒத்தல்; மழை = குளிர்ச்சி; தலைஇய = பரவியுள்ள.

உரை: நல்ல மழைக் காலத்தில் மலரும் பிச்சியின்,  நீர் ஒழுகும் வளமான அரும்பின், சிவந்த வெளிப்பக்கத்தைப் போன்ற, வளமான கடைப்பகுதியையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், மழைத்துளிகளோடு தன்னிடம் பொருந்தி இருக்கின்ற தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தெப்பத்தின் தலைப் பக்கத்தை இத்தோழி பிடித்துக்கொண்டால் தானும் அதன் தலைப் பக்கத்தைப் பிடித்துக்கொள்கிறாள். தோழி தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொண்டால், தலைவியும் அதன் கடைப்பகுதியைக் பிடித்துக்கொள்கிறாள். தோழி தெப்பத்தைக் கைவிட்டு, நீரோடு சென்றால், தலைவி அங்கும் வருவாள் போலும்.

சிறப்புக் குறிப்பு: .புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி தலைப்புணை, கடைப்புணை என்று வந்தன. மழையில் நனைந்த சிவந்த அரும்பு, நீராடியதால் சிவந்த கண்ணுக்கு உவமை. நீராடிய தூய மென்மையான நீர்த்துளிகள் உள்ள உடலுக்கு மழைத்துளிகளையுடைய மென்மையான தளிர் உவமை.


இங்கு புணை என்றது, முறையாகக் கட்டப்பட்ட  தெப்பத்தைக் குறிக்காமல், வழைமரத் துண்டு அல்லது நீரில் மிதக்கக்கூடிய மரக்கட்டையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்


Sunday, July 17, 2016

221. தலைவி கூற்று

221.  தலைவி கூற்று

பாடியவர்: உறையூர் முதுகொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்கள் ( 221, 390) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும்என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ முல்லை மலர்ந்தது; கார்காலமும் வந்துவிட்டது. நான் எவ்வாறு பொறுமையாக இருப்பேன்என்று கூறுகிறாள்.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே. 

கொண்டு கூட்டு: முல்லையும் பூத்தனபறியுடைக் கையர், மறிஇனத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. அவரோ வாரார்!

அருஞ்சொற்பொருள்: பறி = பனை ஓலைக் குடை; மறி =  குட்டி; ஒழிய = தங்க; கூழ் = உணவு; சென்னி = தலை; முகை = மொட்டு; பசுமுகை = புதிய மொட்டு.

உரை: முல்லைப் பூக்கள் மலர்ந்தன; பனை ஓலையால் செய்த குடையைக் கையில் வைத்துள்ள இடையர்கள்,  குட்டிகளோடு கூடிய ஆட்டு மத்தையோடு சென்று தங்குவதற்காக, பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பிச்  செல்கின்றார்கள். அவர்கள் தம் தலையில் அணிந்து கொண்டன யாவும், முல்லையின் அரும்புகளே ஆகும்; ஆனால், தலைவரோ இன்னும் வரவில்லை.


சிறப்புக் குறிப்பு: ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.