Sunday, July 31, 2016

223. தலைவி கூற்று

223. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “உன் தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடத்தானே சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். நீ வருந்தாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஊரிலே நடைபெறும் திருவிழாவுக்குப் போகலாம் என்று தோழி தலைவியை அழைக்கிறாள். அதைக் கேட்ட தலைவி, தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே. 

கொண்டு கூட்டு: பேரூர் கொண்ட ஆர்கலி விழவில் ”செல்வாம், செல்வாம் என்றி. அன்று, இவண் நல்லோர் நல்ல பலவால்தில்லதழலும் தட்டையும் முறியும் தந்து,  இவை
நினக்கு ஒத்தன எனப் பொய்த்தன கூறிஅன்னை ஓம்பிய ஆய்நலம் என் ஐ கொண்டான். யாம் இனி இன்னம்!. 

அருஞ்சொற்பொருள்: பேரூர் = பெரிய ஊர்; ஆர்கலி = மிகுந்த ஆரவாரம்; இவண் = இங்கே; நல்ல = நல்ல சொற்கள் ( நல்ல நிமித்தங்கள் ); ஆல், தில்ல  - அசைச்சொற்கள்; தழல் = சுற்றுவதால் ஓசை உண்டாக்கும் ஒரு கருவி (கவண்); தட்டை = தட்டுவதால் ஓசை எழுப்பும் கருவி; முறி = தழை; ஓம்பிய = பாதுகாத்த; ஆய் = அழகிய; என்னை =என்+ = என் தலைவன்; இன்னம் = இவ்வாறு; ஆல்அசைச்சொல்.

உரை: முன்பு ஒருநாள், பெரிய ஊரில் நடந்த மிகுந்த ஆரவாரமான விழாவிற்குச்செல்வோம்; செல்வோம்என்று கூறினாய்.  அன்று நாம் விழாவிற்குப் புறப்படும்பொழுது, இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்கள் (நிமித்தங்கள்) பலவாக இருந்தன; கிளிகளை வெருட்டுவதற்குப் பயன்படும் கருவிகளாகிய தழலையும், தட்டையையும், தழையாடையையும், எனக்குக் கொடுத்து,  இவை உனக்கு ஏற்றவைஎன்று சொல்லி, பின்பு பொய்யுரைகள் கூறி,  என் அன்னையால் பாதுகாக்கப்பட்ட என்னுடைய அழகிய பெண்மை நலத்தை என்னிடமிருந்து என் தலைவன் கொள்ளை கொண்டான். அதனால், நான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கின்றேன்.

சிறப்புக் குறிப்பு: முன்பு ஒருநாள், தோழி தலைவியைப் பேரூர் விழாவிற்கு அழைத்துச் சென்றாள். அவள் சொற்களைக் கேட்டு அங்குச் சென்றதால், தலைவி தலைவனைச் சந்தித்தாள். தலைவன், தழல், தட்டை, தழையாடை ஆகியவற்றைத் தலைவிக்குக் கொடுத்துப் பல பொய்யுரைகள் பேசி அவள் பெண்மை நலத்தைக் கொள்ளைகொண்டான். இதுவரை, தலைவி தன் தாயின் பாதுகாப்பினால் தன் பெண்மை நலத்தை இழக்காமல் இருந்தாள். தலைவனைப் பேரூர் விழாவில் சந்த்தித்த பொழுது அதை இழந்தாள். அதை நினைத்து அவள் வருந்துகிறாள்.


No comments:

Post a Comment