Sunday, July 31, 2016

227. தோழி கூற்று

227. தோழி கூற்று

பாடியவர்: ஓதஞானியார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: முதல் நாள் தலைவன், குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தலைவியைக் காண முடியாமல் திரும்பிச் சென்றான். அவன் வரவில்லை என்று தலைவி எண்னுகிறாள். அவன் மறுநாள் வந்து, தான் முதல் நாள் வந்ததாகவும் தலைவியைக் காண முடியவில்லை என்றும் தோழியிடம் கூறுகிறான்.  “தலைவன் முதல் நாள் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லைஎன்று கூறிய தலைவிக்குத் தோழி, அவன் வந்ததற்கான அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகிறாள்.


பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே. 

கொண்டு கூட்டு: இவண் தேரோன் போகிய கானலான் பூண்வனைந்த அன்ன பொலம்சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து

அருஞ்சொற்பொருள்: பூண் = உலக்கை முதலியவற்றிலிடும் வளையம்; வனைதல் = அலன்கரித்தல்; பொலம் = பொன் (பொன் என்ற சொல்லுக்கு இரும்பு என்று ஒருபொருள் உண்டு. இங்கு பொலம் என்ற சொல், இரும்பைக் குறிக்கிறது); சூடு = சக்கரத்தின் விளிம்பு; நேமி = சக்கரம்; துமித்தல் = வெட்டுதல்; கூழை = குட்டையானது.

உரை: இங்கு, தேரில் வந்த தலைவன் திரும்பிச் சென்ற கடற்கரைச் சோலையில், பூணைப் பதித்தாற் போன்ற, இரும்பால் விளிம்பைஉடைய சக்கரத்தின், வாளைப்போன்ற வாய் வெட்டியதால், வளமான இதழ்கள் ஒடிக்கப்பட்டு  குறைந்து கிடக்கும் நெய்தல் பூக்களும் உள்ளன.

228. - தலைவி கூற்று

No comments:

Post a Comment