Sunday, July 17, 2016

220. தலைவி கூற்று

220.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராததால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழியிடம்  தலைவி கூறுகிறாள்.

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 

கொண்டு கூட்டு:
தோழி!  பழமழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லைவெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் பொருட் பிரிந்தோர்  வாரார்கண்டிசின்!

அருஞ்சொற்பொருள்: பழமழை = பழைய மழை; கலித்த = தழைத்த; புனம் = கொல்லை; இரலை = ஆண்மான்; பாவை = மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின்தாள்;  இருவி = வரகு அரிந்த தாள்; சேர் = சேர்ந்த; வெருகு = காட்டுப்பூனை; வீ = பூ; பிணி = அரும்பு (விரிவதற்கு முன்னுள்ள மொட்டு); முகை = மொட்டு; புறவு = முல்லை நிலம்; கண்டிசின் = காண்பாயாக.

உரை: தோழி! பழைய மழையினால் தழைத்த, கொல்லையில் உள்ள புதிய வரகின் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டனகதிர் அரியப்பட்ட வரகின் தாள்களில் எஞ்சியிருந்த இலைகளை ஆண்மான் மேய்ந்ததால், அவை குறைந்த தலையையுடைனவாக உள்ளனஅவற்றின் பக்கத்தில் உள்ள முல்லைக் கொடியில், காட்டுப் பூனை சிரித்ததைப் போன்ற தோற்றத்தையுடைய, மெல்லிய இதழ்கள் மூடிய புதிய பூவின் சிறிய அரும்புகள் மலர்ந்து, மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில், வண்டுகள் அம் மலர்களில் உள்ல தேனை உண்ணுவதற்காகச் சுற்றுகின்றன. இத்தகைய மாலைக்காலத்திலும், பொருள் ஈட்டுவதற்காக நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர் வரவில்லை. நீ இதனைக் காண்பாயாக!


சிறப்புக் குறிப்பு: பழமழை என்றது வரகு விதைத்த காலத்தில் பெய்த மழையைக் குறிக்கிறது. புதுமை என்றது வரகின் கதிரைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment