Sunday, July 31, 2016

226. தலைவி கூற்று

226. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 90 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவால் தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவனோடு கூடி மகிழ்ந்து இருந்ததற்குமுன், தன் கண்களும், தோளும், நெற்றியும் எவ்வளவு அழகாக இருந்தன என்று எண்னித் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 

கொண்டு கூட்டு:
தோழி! வாழி! அல்கலும்  தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்  குருகென மலரும் பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகா ஊங்கு, பூவொடு புரையுங் கண்ணும், வேய்என விறல் வனப்பு எய்திய தோளும், பிறைஎன மதி மயக்குறூஉம் நுதலும் நன்றும் நல்ல. மன்.

அருஞ்சொற்பொருள்: புரையும் = போலும்; வேய் = மூங்கில்; விறல் = தனிச் சிறப்பு  விறல் வனப்பு = பிறிதொன்றற்கு இல்லாத பேரழகு; நுதல் = நெற்றி; மன் = இடைச் சொல் (கழிந்தது என்ற பொருளில் வந்துள்ளது); அல்கல் = இரவு; தயங்கல் = ஒளி செய்தல்; குருகு = நாரை;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நகுதல் = சிரித்தல் (இங்கு கூடி மகிழ்தலைக் குறிக்கிறது); ஊங்கு = முன்பு.


உரை: தோழி! வாழ்க! இரவுதோறும், ஓளி பொருந்திய அலைகளால் மோதப்பட்ட, தாழையின் வெண்மையான பூ, நாரையைப் போல மலரும் இடமாகிய, பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய நெய்தல் நிலத் தலைவனோடு கூடி மகிழுமுன்,  என்னுடைய தாமரை மலரைப் போன்ற கண்களும், மூங்கிலை ஒத்த  சிறப்பான அழகிய தோளும், பிறை என்று கருதும்படிக் காண்போர்  அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும்,  மிகவும் நல்லனவாக இருந்தன. அந்த நிலை இப்பொழுது கழிந்தது!

4 comments:

  1. இப்பாடலின் உள்ளுறை உவமம் காணப்படுகின்றதா விளக்குக

    ReplyDelete
  2. இப்பாடலில் உள்ளுறை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
    பிரபாகரன்

    ReplyDelete
  3. அருமையான பணி. வாழ்த்துகள் ஐயா. சங்க இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, சங்க இலக்கியம் முழுவதையும் மிக எளிய தமிழில், இனிய புதுக்கவிதை நடையில் எழுதி வைத்துவிடுச் செல்ல வேண்டும் என்பதை என் வாழ்நாள் பணியாக ஏற்றுச் செய்து வருகிறேன். இப்போது முதல் கட்டமாகக் குறுந்தொகை எழுதி வருகிறேன்.

    ReplyDelete
  4. அன்பிற்குரிய குமார் அவர்களுக்கு,
    வணக்கம்.
    குறுந்தொகையை புதுக் கவிதை வடிவத்தில் எழுதுவது ஒரு நல்ல திட்டம். செயல் படுத்துங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete