Sunday, July 31, 2016

225. தோழி கூற்று

225.  தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவார்க்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் புறப்படுகிறான். அவனிடம், தோழி, “தலைவி உனக்குச் செய்த நன்மைகளை மறவாதே. விரைவில் பொருள் தேடிவந்து , அவளைத் திருமணம் செய்துகொள்என்று கூறுகிறாள்.

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. 

கொண்டு கூட்டு:
கன்றுதன் பயமுலை மாந்த, முன்றில் தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட ! கெட்ட இடத்து வந்த உதவி, கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின், இவள் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன ஒலிமென் கூந்தல் நினக்கே உரிய.

அருஞ்சொற்பொருள்: பயம் = பயன்; பயமுலை = பயனுள்ள முலை (பாலுள்ள முலை); மாந்துதல் = குடித்தல் ; முன்றில் = வீட்டின் முன்னிடம்; பிடி = பெண்யானை; கல் = மலை; கட்டில் = அரசுக் கட்டில்; வீறு =  சிறப்பு; சீர் = சிறப்பு, அழகு; கலித்தல் = ஆரவாரித்தல்; கலாவம் = மயிலின் தோகை; ஒலித்தல் = தழைத்தல்.

உரை: கன்று தன்னுடைய பால் சுரக்கும் முலையில் உள்ள பாலைக் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது, வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை, பெண்யானை உண்ணும் இடமாகிய,  பெரிய மலைகளை உடைய நாடனே! , தான் துன்புற்ற காலத்தில் பிறரிடமிருந்து பெற்று மகிழ்ந்த உதவியை, அரசுக் கட்டிலாகிய சிறப்பைப் பெற்றவுடன் மறந்து விட்ட மன்னனைப் போல, நீ நாங்கள் செய்த நற்செயல்களை மறவாது இருப்பாயானால், இத்தலைவின், மெல்லிய சிறப்புடைய ஆரவாரிக்கும் மயிலினது தோகையைப் போன்ற, தழைத்த மென்மையான கூந்தல் உனக்கே உரியதாகும்.

சிறப்புக் குறிப்பு: பெண்யானை தன் கன்றுவின் பசியைப் போக்கிக் கொண்டு தானும் உண்ணுவதைப் போல், தலைவன் பொருளை ஈட்டி, விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்து மகிழ்விக்க வேடும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
 சங்க காலத்தில், ஒரு பெண்ணின் கூந்தலுக்கு அவள் கணவன் மட்டுமே உரிமையுடையவன் என்ற கருத்து நிலவியது. இக்கருத்து புறநானூற்றுப் பாடல் 113 –-இல் காணப்படுகிறது
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
 நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.            (புறநானூறு 113, 8-9)


பொருள்: பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்பரைத் தேடி செல்லும் பொழுது, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம் என்று கபிலர் கூறுகிறார்.

No comments:

Post a Comment