Sunday, December 4, 2016

281. தலைவி கூற்று

281.  தலைவி கூற்று

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.          இவரும் இந்நூலின்  79 – ஆம் பாடலை இயற்றிய குடவாயில் கீரனக்கனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குடவாயிலைச் சார்ந்தவராக இருந்ததால், இவர் குடவாயில் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும், பல ஊர்களுக்கும் சென்று புரவலர் பலரையும் கண்டு வந்தார்.   ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன். ஆகவே, அவன் இறந்ததால் புலவர் குடவாயில் கீரத்தனார் பெரும் வருத்தமுற்றுப் புறநானூற்றில் ஒருபாடலை இயற்றியுள்ளார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் (242) மட்டுமல்லாமல், அகநானூற்றில் பத்துப் பாடல்களும் (44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (79, 281, 369), நற்றிணையில் நான்கு பாடல்களும் (27, 42, 212, 379) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி பிரிவைப் பொறுத்துகொள்ள முடியாமல் வருந்துகிறாள். ” தலைவர் பொருள் தேடச் சென்றிருக்கிறார். தேடிய போருள் கிடைத்தவுடன், விரைவில் திரும்பி வந்துவிடுவார். அதுவரை, நீ வருந்தாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.” என்றி தோழி தலைவிக்கு ஆறுதல் கூற்கிறாள்.  "தலைவர் கொடிய பாலை நிலத்தை இன்னல்கள் இன்றிக் கடந்து சென்றாரோ இல்லையோ என்று நான் வருந்துகிறேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. 

கொண்டு கூட்டு: சேயிழை! நமர், வெண்மணல் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோடு அத்த வேம்பின் அமலை வான்பூச் சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக் குன்று தலை மணந்த கானம் சென்றனர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: பொதுளிய = தழைத்துப் பரவிய; பை = பசுமையான; கால் = அடிமரம்; கருக்கு = பனைமட்டை; கொம்மை = திரட்சி; போந்தை = பனை; குடுமி = மரஉச்சி; வெண்தோடு = குருத்தோலை; அத்தம் = பாலை நிலம்; அமலை = திரளை (தழைத்த); வான் = வெண்மை; சுரி = சுருண்ட; ஆர்தல் = பொருந்துதல்; உளை = ஆண் தலைமுடி; தலை மணந்த = இடையிடையே கொண்டிருத்தல்; கானம் = காடு; சேயிழை = சிவந்த அணிகலன்களை அணிந்த பெண். கொல்ஐயம்; , -  அசை நிலைகள்.
உரை: சிவந்த அணிகலன்களை அணிந்த தோழியே! நம் தலைவர், வெண்ணிற மணலில் தழைத்த, பசுமையான அடிப்பக்கத்தையும் கருக்கையும் உடைய, பருத்த பனைமரத்தின் உச்சியில் உள்ள வெண்மையான குருத்தோலையில் வைத்துக் கட்டிய, பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தின் தழைத்த வெண்மையான மலரை, சுருண்ட முடியை உடைய தன் தலையில் விளங்கும்படி சூடிக்கொண்டு, குன்றுகளை இடையிடையே உடைய காட்டைக் கடந்து சென்றனரோ?

சிறப்புக் குறிப்பு: வேம்பு பாலை நிலத்திற்கு உரியது. வேம்பின் பூவைக் கூறியதால் தலைவன் பிரிந்த காலம்  இளவேனிற் காலம் என்று தெரிகிறது. மலரைப் பனந்தோட்டில் வைத்துக் கட்டி அணிந்து கொள்வது மரபு என்று தெரிகிறது.  குன்று தலைமணந்த கானம் என்றது குறிஞ்சியும் முல்லையும் கலந்து இயல்பு திரிந்த பாலை நிலம் என்பதைக் குறிக்கிறது.

280. தலைவன் கூற்று

280. தலைவன் கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை:
குறிஞ்சி.
கூற்று : கழற்றெதிர்மறை. (கழறுதல் = இடித்துரைத்தல்; எதிர்மறை = மறுத்தல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது மிகுந்த காதலுடையவன். ஆனால், அவளோடு கூடி மகிழும்  வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இடித்துரைத்து அறிவுரை கூறுகிறார்கள். அவர்களுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 

கொண்டு கூட்டு: கேளிர்! வாழியோ கேளிர்! நாளும் என் நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதிப் பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம் ஒருநாள் புணரப் புணரின் யான்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென். 

அருஞ்சொற்பொருள்: கேளிர் = நண்பர்கள்; நாளும் = எப்பொழுதும்; ஓதி = கூந்தல்; அஞ்சிலோதி = அம்+சில்+ஓதி = அழகிய சிலவாகிய கூந்தல்; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஆகம் = உடல், மார்பு.

உரை: நண்பர்களே! நீவிர் வாழ்க! நண்பர்களே!, எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே ஈர்த்துக் கொண்ட, அழகிய சிலவாகிய கூந்தலையும், பெரிய தோளையும் உடைய இளைய தலைவியினது, சிறிய மெல்லிய மேனியை,  ஒரு நாள் தழுவும் வாய்ப்புக் கிடைத்தால், அதன் பிறகு  நான் அரை நாளும் வாழ்வதை விரும்ப மாட்டேன்.

279. தலைவி கூற்று

279. தலைவி கூற்று 
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துகொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். ”அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுமையாக இரு.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “என்னால் அவர் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் அவருடைய பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது.” என்று தோழியிடம் கூறுகிறாள்

திரிமருப் பெருமை யிருணிற மையான்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல்
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகித்
திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே. 

கொண்டு கூட்டு: மழை கழூஉ மறந்த மாஇரும் துறுகல்துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் இரும்பல் குன்றம் போகித் திருந்துஇறைப் பணைத்தோள் உள்ளாதோர், திரி மருப்பு எருமை இருள்நிற மைஆன் வருமிடறு யாத்த, பகுவாய்த் தெள்மணி புலம்புகொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார் கொல்லோ

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கிய; மருப்பு = கொம்பு; மை = கரிய; மையான் = மை + ஆன் = எருமை; வரு = வளரும்; மிடறு = கழுத்து; யாத்த = கட்டிய; பகுவாய் = பிளந்த வாய்; தெண்மணி = தெளிவாய் ஒலிக்கும் மணி; புலம்பு = தனிமைத் துன்பம்; யாமம் = நடு இரவு; இயங்குதல் = நடத்தல்; கொல் அசைச்சொல்; மா = பெரிய; துறுகல் = பாறை (குண்டுக்கல்); துகள் = தூசி (புழுதி); இரு = பெரிய; திருந்துதல் = ஒழுங்காதல்; இறை = முன்கை; பணை = மூங்கில்.
உரை: தோழி , மழை கழுவுதலை மறந்த (மழையால் கழுவப்படாத) பெரிய குண்டுக்கல்,  புழுதி படிந்த யானையைப் போல் தோன்றுகின்ற, பல பெரிய மலைகளை நம் தலைவர்  கடந்து சென்றார். அத்தகைய வழியில் சென்றவர் எனது அழகிய முன்கையையும், மூங்கிலைப் போன்ற என் தோள்களையும்  நினைத்துப் பார்க்கவில்லை. முறுக்கிய கொம்பையும் இருள்போன்ற கரிய நிறத்தையும் உடைய எருமையினது, வளர்கின்ற கழுத்தில் கட்டப்பட்ட,  பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது,  தனிமையைக் கொண்ட நடு இரவில், அவ்வெருமை நடக்கும் தோறும் ஒலிக்கின்ற,  இக் காலம் தாம் வருதற்குரிய காலமாக இருந்தும், அவர் வரவில்லை.

சிறப்புக் குறிப்பு: மழைகழூஉ மறந்த துறுகல்என்றது மழையின்றி வெப்பம் மிகுதியான பாலை நிலத்தைக் குறிக்கிறது. நள்ளிரவில் தலைவி உறங்காமல் இருப்பதால், தனிமையை நினைத்துபுலம்புகொள் யாமம்என்று கூறுகிறாள். யானை தன்மீது தானே புழுதியை வாரித் தூற்றிக் கொள்ளும் இயல்புடையது என்பது குறிப்பிடத் தக்கது.


278. தலைவி கூற்று

278. தலைவி கூற்று

பாடியவர்: பேரி சாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81- இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். ”தலைவர் விரைவில் வந்து விடுவார். எப்படியாவது இந்தப் பிரிவை நீ பொறுத்துக்கொள்வதுதான் சிறந்தது.” என்று தோழி ஆறுதல் கூறுகிறாள்தலைவி, “அவர் என்னை மறந்துவிட்டார். அவர் மிகவும் கொடியவர்.” என்று தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச்
சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்
தேற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து ஏற்பன ஏற்பன உண்ணும்பார்ப்புடை மந்திய மலை இறந்தோர் உறுவளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டன்ன மெல்என் சீறடிச் சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்கொடியர்.

அருஞ்சொற்பொருள்: வளி = காற்று; உறுவளி = பெருங்காற்று; உளரிய = கோதிய; மாஅத்து = மாமரத்தின்; முறி = இளந்தளிர்; சீறடி = சிறிய அடி; பாவை = பொம்மை; உள்ளார் = நினையார்; வாழி அசைநிலை; கடுவன் = ஆண்குரங்கு; ஊழ்உறு = முதிர்ந்த; ஏற்பன = ஏற்பவற்றை; உதிர்ப்ப = உதிர்க்க; பார்ப்பு = குட்டி; மந்தி = பெண்குரங்கு.
உரை: தோழி , நீ வாழ்க! முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின்மேல் இருந்து ஆண்குரங்கு உதிர்க்க, அம்மரத்தின் கீழே இருந்து, தகுந்தவற்றைத் ஆர்வத்தோடு தின்னுகின்ற, குட்டிகளை உடைய பெண்குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர்,  மிகுந்த காற்றால் அசையும் அழகிய தளிரையுடைய  மாமரத்தின் தளிரைப் போன்ற, மெல்லிய சிறிய அடியை உடைய,  பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார்; அவர் கொடுமையானவார்.
சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில் காதலி விளையாடுவதற்காகத் காதலன் பசுமையான பஞ்சாய்க் கோரை, பூந்தாது ஆகியவற்றால் பொம்மை செய்து கொடுப்பதும்  அதைத் தன் குழந்தையாகக் காதலி  கற்பனை செய்துகொண்டு விளையாடுவதும் வழக்கமாக இருந்ததாகத் தெரிகிறது.  

 ஆண்குரங்கு மரத்தில் ஏறிப் பழங்களை உதிர்ப்பதையும், அவற்றைப் பெண்குரங்கும் குரங்குக் குட்டிகளும் உண்பதையும் கற்பனை செய்த தலைவி, தன் குழந்தை போன்ற பாவையையும் தன்னையும் தலைவர் காண  வராமல் இருப்பதால், “ பசும் பாவையும் உள்ளார்; கொடியர்.” என்று கூறுகிறாள். “ஏற்பன ஏற்பனஎன்று இருமுறை கூறியது, குரங்குக் குட்டிகள் ஆர்வத்தோடு பழங்களைப் பொறுக்கி எடுத்து உண்பதைக் குறிக்கிறது.

277. தோழி கூற்று

277. தோழி கூற்று

பாடியவர்: ஓரிற் பிச்சையார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அறிவர் பெறும் உணவை ஓரிற் பிச்சை என்று சிறப்பித்ததால் இவர் ஓரிற் பிச்சையார் என்று பெயர் பெற்றார்.
திணை: பாலை.
கூற்று : தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது.
கூற்று விளக்கம்: தலைவன் முன்பனிக்காலத்தில் வருவதாகக் கூறிசென்றான். ”முன்பனிக் காலம் எப்பொழுது வரும்?” என்று தோழி அறிவரைக் கேட்கிறாள்.


ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே. 

கொண்டு கூட்டு: மின்இடை  நடுங்கும் கடைப் பெயல் வாடைஎக்கால் வருவது என்றிஅக்கால் வருவர் எம் காதலோர்.  நீ ஆசில் தெருவில், நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓரில் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ!

அருஞ்சொற்பொருள்: ஆசு = குற்றம்; வியன் = அகன்ற; கடை = வாயில்; அமலை = உருண்டை; இழுது = வெண்ணெய்; ஆர = மிக (வயிறு நிரம்ப); மாந்துதல் = உண்ணுதல்; அற்சிரம் = அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்); வெய்ய = விரும்பத் தக்க; சேமச் செப்பு = நீரைச் சேமித்து வைக்கும் பாத்திரம்; கடைப்பெயல் = கடை + பெயல் = இறுதியில் பெய்யும் மழை; வாடை = குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்); எக்கால் = + கால் = எப்பொழுது; அக்கால் = +கால் = அப்பொழுது.
உரை: (அறிவ!)  மின்னலைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்கும்படி வரும் குளிர் காலத்தின் இறுதி மழை பெய்யும் காலம்,  எப்பொழுது வரும் என்று கூறுவாயாக! அப்பொழுது, எம்முடைய தலைவர் வருவர். நீ, குற்றமற்ற தெருவில்,  நாய் இல்லாத அகன்ற வாசலில், செந்நெல்  சோற்று உருண்டையுடன்  மிக வெண்மையான வெண்ணெயோடு கலந்து  ஒரு வீட்டில் இடும் பிச்சையைப் பெற்று, வயிறு நிரம்ப உண்டு, முன்பனிக் காலத்திற்குரிய விரும்பத் தக்க வெப்பத்தை உடைய நீரை, வெந்நீரைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தில் பெறுவாயாக!

சிறப்புக் குறிப்பு:  துறவு உள்ளமும், முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் உடைய பெரியோர் அறிவர் என்று அழைக்கப்பட்டனர்இவர்,
            மறுவில் செய்தி மூவகைக் காலமும்
             நெறியி னாற்றிய அறிவன்.             (தொல். புறத்.20.)
என்று தொல்காப்பியம் கூறுகிறது. இவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்று கருதப்பட்டனர். இவர் எக்காலத்திலும், கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் தீயவற்றைக் கடிதலும் செய்வர் என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது(தொல். கற்பு. 13).  தலைவன் தலைவியாகிய இருவரும் இவரது சொற்படி கேட்டு அதன் வழி நடப்பர். இவர் துறவு உள்ளத்தினராதலால், இவர் துறவிகளைப் போல், ஒரு வீட்டில் மட்டும் பிச்சை உணவைப் பெற்று உண்பவர் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
வாடைக்காலத்தின் கடைசி மழை எப்பொழுது வரும் என்று தோழி கேட்பதால்  இப்பாடலில் கூறப்பட்டுள்ள பருவம் வாடைக்காலம் என்று கருதப்படுகிறது.

சங்க காலத்தில், அந்தணர்களின் வீடுகளில் நாய்களும் கோழிகளும் இருப்பதில்லை என்று பெரும்பாணாற்றுப்படையில் (மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது பெரும்பாணாற்றுப்படை - 299) கூறப்பட்டுள்ளது. அதுபோல், இப்பாடலில், ”ஆசில் தெருவில் நாயில் வியன்கடைஎன்றது நாய்கள்   இல்லாத வீடுகள் என்ற பொருளில் வந்துள்ளது.

276. தலைவன் கூற்று

276.  தலைவன் கூற்று

பாடியவர்: கோழிக் கொற்றனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழிக்குக் குறைமறாமல் (வேண்டுகோளை மறுக்க வேண்டாம் என்று)  தலைவன் கூறியது. 
கூற்று விளக்கம்: சில நாட்களாகத் தலைவன் தலைவியைக் காணமுடியவில்லை. தோழியைச் சந்தித்து, தலைவியைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு தலைவன் வேண்டுகிறான். தோழி, “ தலைவி மிகவும் சிறுவயதினள். அவள் உன்னோடு பழகுவதை, அவள் பெற்றோர்கள் விரும்பவில்லை. ஆகவே, நீ இனி அவளைச் சந்திப்பது இயலாது.” என்று கூறுகிறாள். தலைவன், “ எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த உறவை நான் அரசவையில் கூறி, நீதி கேட்டால் என்ன ஆகும் தெரியுமா? என் வேண்டுகோளை மறுக்காமல் எனக்கு நீ உதவி செய்வதுதான் நல்லது.” என்று தோழியை அச்சுறுத்துகிறான்.

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை யரசன் செங்கோல் அவையத்
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானேயிவ் வழுங்கல் ஊரே. 

கொண்டு கூட்டு: பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்று இவள் உருத்து எழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்முறையுடை அரசன் செங்கோல் அவையத்து யான் தன் கடவின், யாங்கு ஆவதுகொல்இவ் அழுங்கல் ஊர் மன்ற பெரிதும் பேதை! அளிது!

அருஞ்சொற்பொருள்: பணை = மூங்கில்; குறுமகள் = இளம்பெண் (தலைவி); பாவை = பதுமை (பொம்மை); தைஇயும் = தைத்துப் பொம்மையாகச் செய்தும்; பஞ்சாய் = ஒருவகைக் கோரை; உருத்து = தோன்றிய; வனமுலை = அழகிய முலை; தொய்யில் = சாந்தினால் உடலில் (ஆண்கள் பெண்களின் மார்பில்) இடும் கோலம்; அறிதலும் அறியார் = முற்றிலும் அறியார்; கடவின் = வினவினால்; அழுங்கல் = வருத்தம்; மன்ற = நிச்சயமாக; பேதை = அறிவின்மையை உடையது; அளிது = இரங்கத் தக்கது.

உரை: மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய இளம்பெண்ணாகிய தலைவிக்கு நான்  பாவை செய்து தந்ததும்,  அந்தப் பாவையைச்  செய்வதற்காக பஞ்சாய்க் கோரை வளர்ந்த பள்ளமாகிய நீர் நிலைகளைச் சுற்றி அலைந்ததும்,  இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப்பவர்கள் முற்றிலும் அறியார். நீதியை உடைய அரசனது,  செங்கோன்மையை உடைய அறங்கூறும் அவையில், நான் இவைபற்றித் தலைவியை வினவினால், நிலைமை என்ன ஆகும்?  வருந்தத்தக்க இந்த ஊர், நிச்சயமாக மிக்க அறியாமையை உடையது; இரங்கத் தக்கது!

275. தோழி கூற்று

275. தோழி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது. அங்கு ஒரு மணியோசை கேட்கிறது. அது தலைவனின் தேர் ஓசையா என்று பார்த்து வருவோம் என்று தோழி, தலைவியை அழைக்கிறாள்.

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. 

கொண்டு கூட்டு: தோழி! ஆண்டு இயம்பிய உள. எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் புல்ஆர் நல்ஆன் பூண்மணி கொல்லோசெய்வினை முடித்த செம்மல் உள்ளமொடுவல்வில் இளையர் பக்கம் போற்றஈர்மணற் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல்? முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.

அருஞ்சொற்பொருள்ஆண்டு = அங்கே; உயர் = மேல் (உயர்ந்த இடம்) ; கண்டனம் = கண்டு; வருகம் = வருவோம்; எல் = மாலை நேரம்; ஏறு = காளை; ஆர்தல் = உண்ணுதல்; செம்மல் = உள்ள நிறைவு; போற்றுதல் = பாதுகாத்தல்; இயம்புதல் = ஒலித்தல்.

உரை: தோழி! அங்கே மணியோசை ஒலிக்கிறது. அது, மாலை நேரத்தில் ஊரை வந்து அடையும், காளைகளுடன்கூடிய பசுக்களின் கூட்டத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள் கழுத்தில் அணிந்துள்ள மணி ஓசையோ? அல்லது தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்து முடித்த நிறைவான உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன் அருகிலிருந்து பாதுகாக்க, ஈரமான மணலை உடைய காட்டு வழியிலே வரும், தலைவரின் தேரில் பூட்டிய  மணி ஓசையோ? முல்லைக்கொடி படர்ந்த குன்றின்மேல் ஏறிக் கண்டு வருவேம்: வருவாயாக!